அரசின் குறிக்கோள் தொழிற்பேட்டையா?, இரும்புத்தாதா? 1,200 ஏக்கர் விளை நிலத்தை வாரிச்சுருட்டப்போகும் தமிழக அரசு!

0
320

1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து,  பத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி திருவண்ணாமலையில் திமுக அரசு சிப்காட் அமைக்கிறது. விளை நிலத்தை காப்பதற்காக மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.

விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அறிவித்தார்.

ஒரு பக்கம் மலர்கள் பூத்துக் குலுங்கும் விளை நிலங்கள்! மறுபுறம் பல்லுயிரிகளும், மூலிகைச் செடிகளும், குட்டை புதர்க்காடுகளும் நிறைந்த கவுத்தி, வேடியப்பன் மலைகள். இப்படிப்பட்ட ஊர்தான் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு கிராமம். திருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள இந்த நிலம் மிகவும் செழிப்பானது;  இதில்  விளையும் சாமந்தி, கனகாம்பரம், மல்லி, முல்லை, காக்கட்டான் போன்ற பூக்கள் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல், கரும்பு, மணிலா போன்றவைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த பாலியப்பட்டு ஊராட்சியின் எல்லையில் கடந்த டிசம்பர் மாதம் வருவாய் அதிகாரிகள் காரணம் எதுவும் சொல்லாமல் அளவீடு செய்துள்ளனர். ஜனவரி 11ஆம் தேதி காலை 9 மணியவில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் அந்தப்பகுதியின் வனப்பகுதிக்கு சென்று மரங்கள், செடி கொடிகளை பிடுங்கி எறிந்துள்ளன. தேவனந்தல், புனல்காடு, கலர்கொட்டாய், வேடியப்பனூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் பொக்லைன் இயந்திரங்கள் செயல்படவிடாமல் தடுத்தனர். காவல்துறை தடுப்பையும் மீறி பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குப்பைக் கிடங்கு அமைக்கப்போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், பாலியப்பட்டு கிராமத்தில் அமையப்போவது குப்பைக் கிடங்கு அல்ல, சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சிப்காட் அமையப்போகிறது; வாழ்வாதாரம் நிரந்தரமாக பறிபோகப்போகிறது என்பதை அறிந்த மக்களின் வயிற்றில் புளிகரைத்தது. சிப்காட் அமைந்தால், 1,000 ஏக்கர் விவசாய நிலமும், 500-க்கும் மேற்பட்ட வீடுகளும், இயற்கை வளங்களும் பாதிக்கப்படும் என்று பாலியப்பட்டு கிராம மக்கள் கூறுகின்றனர்.

பாறைகளும், கற்களுமாக கிடந்த நிலத்தைத் திருத்தி விளைநிலமாக மாற்றி, அதில் முப்போகம் விவசாயம் செய்து வரும் ஊர்மக்கள், சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனு கொடுத்தல், சாலை மறியல், தொடர் காத்திருப்பு போராட்டம், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலை பெறுவதற்குச் கூட்டாக மனு கொடுப்பது என பல்வேறு கட்ட தடுப்பு முயற்சிகளை மக்கள் முன்னெடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமையவிருக்கும் இடம் குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரபூர்வ அறிவிக்கவில்லை. ஆனால், போராட்டம் நடத்த வேண்டாம்; இங்கு சிப்காட் அமைக்கும் திட்டம் இல்லை என பாலியப்பட்டு கிராம மக்களிடம் அரசு உறுதி கூறவில்லை. ஆனால், பாலியப்பட்டில் சிப்காட் அமைந்தே தீரும் என திருவண்ணாமலையைச் சேர்ந்த அமைச்சர் எ.வ. வேலு, போளூரில் நசைபெற்ற நிகழ்ச்சியில் கூறியதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அதேபோல் சட்டமன்ற திமுக உறுப்பினர் மு.பெ. கிரியும் சிப்காட் அமைவது உறுதி என்கிறார்.

எனவே ஊர் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஊரில் ஆங்காங்கே கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது. மக்களின் போராட்டம் 80-வது நாளை கடந்துவிட்டது. விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து பாலியப்பட்டு ஊராட்சி கிராமசபை, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எங்கள் விளை நிலங்களைக் கொண்டு எங்களது அடுத்தடுத்த தலைமுறை பிழைக்கும், சிப்காட் மூலம் எத்தனை தலைமுறைக்கு அரசு வேலை தந்துவிடும்? என்று கிராம மக்கள் கேட்கின்றனர்.

பாலியப்பட்டு ஊராட்சியில் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களை அழித்து, அந்த இடத்தில் சிப்காட் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன் கூறியுள்ளார். சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்போது அப்பகுதி மக்களையும் கலந்தோலோசிக்க வேண்டும். அத்தகைய நிறுவனங்களில்,  நிலத்தை இழந்த மக்களும், தொடர்ச்சியாக பலன் பெறும் வகையில் திட்டம் இயற்றப்பட  வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைக்கிறார். அதேபோல் மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தில் இயக்குநர் லெனின் பாரதியும் இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

குடியிருப்புகளையும், விவசாய விளைநிலங்களையும், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் அழித்து சிப்காட் அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிடும்வரை போராட்டம் ஓயாது என்று அவர்கள் உறுதியுடன் கூறுகின்றனர். விவசாயம் தழைத்தோங்கும் இப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கடந்த ஆட்சியில் எட்டு வழிச் சாலை பிரச்சினை வந்தது – இப்போது சிப்காட் பிரச்சினை வந்துள்ளது என்கிறார்கள் பாலியப்பட்டு ஊர்மக்கள்.

மேலும் பேசிய அவர்கள், “பாலியப்பட்டுக்கு அடுத்த கிராமம் கோளாப்பாடி. பெரியகோளாப்பாடி கிராமத்திற்கு மேற்கே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையக்கபடுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மேற்கு நோக்கி செங்கம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. அதை கையகப்படுத்தி விரிவுப்படுத்தலாம். ஆனால் அதற்குப் பதிலாக, கிழக்கு பகுதியில் அதாவது, திருவண்ணாமலை வரும் வழியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

கவுத்திமலை, வேடியப்பன்மலையை குறிவைத்தே இந்த சிப்காட் தொடங்கப்படுவதாக சந்தேகிக்கிறோம். இந்த மலையில் உள்ள இரும்பு தாதுக்களை வெட்டியெடுக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜிண்டால் நிறுவனம் முயற்சி எடுத்தது. மக்கள் போராட்டம் அதை விரட்டியது. உச்சநீதிமன்றம் வரை அந்நிறுவனம் முயற்சித்தும் மக்கள் கருத்துகேட்கச் சொன்னது. அந்த நிறுவனத்துக்காகவே இப்போது சிப்காட் அறிவிப்பு தந்து, இந்தப்பகுதியில் உள்ள எங்கள் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது” என்கின்றனர்.

அரசியல்வாதிகள், அதிகாரம் உள்ளவர்கள் தங்களது சொத்துக்களை காப்பாற்றிக்கொள்கிறார்கள். எதுவுமில்லாத விவசாயிகளான நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம், உள்ளுரிலேயே எங்களை அகதியாக்காதே, எங்களை வாழவிடு’ என்ற பாலியப்பட்டு மக்களின் முழக்கத்துக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry