இலங்கையில் உணவுப்பஞ்சம்! அரிசி கிலோ ரூ. 448, பால் லிட்டர் ரூ.263, ஒரு முட்டை ரூ.28! தவிக்கும் மக்கள்!

0
227

கொரோனாவைத் தொடர்ந்து இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியிருக்கிறது. அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அத்தியாவசியமான எரிபொருளைக் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை.

இலங்கையின் பொருளாதாரம் என்பது சுற்றுலாத் துறையை சார்ந்ததே. கொரோனா காரணமாக இரு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடக்கி கிடக்கிறது. எனவே, சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது.  செல்வந்தர்கள் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை திண்டாடுகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடனடியாக பதவி விலகக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் இயங்குவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. போக்குவரத்து, கைத்தொழில்கள், விவசாயம் போன்ற துறைகளில் உள்ள கருவிகளை இயக்கத் தேவையான எரிபொருள் இல்லை. ஆகவே, பலரும் வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கையில் 90% உணவகங்கள் மூடப்பட்டுவிட்டது. சிமென்ட் விலை அதிகரிப்பின் காரணமாகக் கட்டுமான வேலைகள் முடங்கியுள்ளன.

போர் காலத்தில் கூட காணப்படாத  நிலை அங்கு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்களுக்கு மாத்திரமல்லாமல், மருந்துகளுக்கான தட்டுப்பாடும் மக்களை நிலை குலையச் செய்கிறது. பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசியும் இப்போதும் உச்சத்திலேயே உள்ளது. அரிசி, கோதுமைமாவு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மக்களால் எளிதாக வாங்கக்கூடிய விலையில் இல்லை. இலங்கையில் நாட்டுமக்கள் அனைவரும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக இரவு பகல் பாராமல் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

367 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அந்தப் பட்டியலில், கணினிகள், இறைச்சி, மீன், பால், சாக்லெட், மாவு சார்ந்த தயாரிப்புகள், பழங்கள், துரித உணவுகள், மதுபான வகைகள், சிகரெட் மற்றும் புகையிலைத் தயாரிப்புகள், சுகாதாரப் பொருட்கள், ரப்பர் மற்றும் தோல் சார்ந்த தயாரிப்புகள், மின்னணுச் சாதனங்கள், வீட்டு மின் உபகரணங்கள், தளபாடங்கள் போன்றவை அடங்கும். இந்த முடிவும் நெருக்கடியை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 448 இலங்கை ரூபாயாக உள்ளது  (128 இந்திய ரூபாய்). ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263 (ரூ. 75 இந்திய ரூபாய்) ஆக உள்ளது. ஒரு முட்டையின் விலை ரூ.28. ஆப்பிள் ஒன்றின் விலை ரூ.150. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் புதிய ‘சாதனை’ படைத்திருக்கின்றன. பிரட் பாக்கெட் ரூ.200. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சம்.

இந்நிலையில், கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளதாக கோத்தபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். மேலும், “அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன். நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று கோத்தபய கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவை மாத்திரமே உட்கொண்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வெகுஜனத்தின் வாழ்வாதர- பொருளாதார மேம்பாடுகளை விட்டு விட்டு, இன-மத உணர்வுகளை தூண்டிக் கொண்டிருக்கும் அரசின் நிலை என்னவாகும் என்பதற்கு இலங்கை உதாரணம். ராஜபக்ச சகோதரர்களின் நிர்வாகத் திறமையின்மை, அரசாங்கத்தை நடத்த கடன் வாங்கி வசம் கண்டது போன்றவற்றின் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள். இந்தச் சூழலை சீனா சரியாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry