ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்! விலை குறையும் என எதிர்பார்ப்பு!

0
141

சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் ‘ஐபோன் 13’ மாடல் ஃபோன் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் டிஜிட்டல் சாதன பயனர்களிடையே பிரபலமானது, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். செல்போன், லேப்டாப் என பல சாதனங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இந்த செல்ஃபோன்கள் உற்பத்தியாகிறது.

ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன்களின் பழைய மாடல் போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களுக்காக இந்தியாவிலேயே இந்த போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளுக்கு இப்போதைக்கு இது ஏற்றுமதி செய்யப்படாது எனவும் தெரிகிறது.
இந்த சமீபத்திய அறிவிப்பின் மூலம் ‘ஐபோன் 13’ இந்தியாவில் உற்பத்தியானாலும் அதன் விலையில் மாற்றம் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் இந்தியாவில் இதுவரை எந்த விதமான ப்ரோ மாடல்களையும் தயாரிக்கவில்லை. ஐபோன் 13 தொடரில் மட்டுமல்ல ஐபோன் 12 மற்றும் ஐபோன் 11 தொடர்களிலும் ப்ரோ தயாரிப்பு இடம்பெறவில்லை. இருந்தாலும் இது ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

ஐபோன் 13 சாதனம் உள்ளூர் சந்தையில் தயாரிக்கப்படுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. ஐபோன் 13 தொடர் இந்தியாவில் தள்ளுபடியைப் பெறுகிறது. ஐபோன் 13 மினி சாதனம் ரூ.69,990 என விற்கப்பட்ட நிலையில் க்ரோமாவில் ரூ.64,990 என விற்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 ரூ.79,990 என விற்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சாதனம் ரூ.73,990 என தொடங்குகிறது. ஆப்பிள் தனது முதன்மையான ஐபோன்களை இந்தியாவில் பெரியளவு சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் இந்தியாவில் விற்பனை செய்வதில் குறைந்திருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry