ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!

0
362

டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 5ஆம் தேதி சுமார் 10 ஆயிரம் பேர் பௌத்த மதத்தை தழுவுவதற்கான நிகழ்வு, டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இந்திய புத்த சங்கம் மற்றும் Mission Jai Bheem என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த நிகழ்வில், டெல்லி சீமாபுரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார்.

Also Read : நிதிச் சிக்கலில் ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சி! ஊதியப் பிரச்சனை குறித்து நிர்வாகம் விளக்கம்!

பெளத்த மதத்தை தழுவியோர் அமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அப்போது ”பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரர் மீது நம்பிக்கை இல்லை, அவர்களை வணங்கவும் மாட்டோம். ராமர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கிருஷ்ணரையும் வணங்கவும் மாட்டோம்” என அவர்கள் உறுதியேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம், அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறிய ஒரு மாதத்தில் எப்படி இறந்தார் என்று கேள்வி எழுப்பியதுடன், ஒட்டுமொத்த தேசத்தையும் பெளத்தத்திற்கு மாற்ற அம்பேத்கர் தவறிவிட்டார் என்று வருத்தப்படும் விதமாகவும் பேசினார்.

Also Read : தாது மணல் தொழிலில் அதானி கால்பதிக்க சலுகை! கனிம அகழ்வுக்கான தடையை நீக்குகிறது மோடி அரசு?

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜேந்திர பால், “புத்தரை நோக்கிய பணியை ஜெய் பீம் என்று அழைப்போம். அசோக விஜயதசமியான இன்று “ஜெய் பீம்” இயக்கத்தின் கீழ், 10,000 க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள் சாதி மற்றும் தீண்டாமை இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர்” என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை கடுமையாக விமர்சித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, இது “உடைக்கும் இந்தியா” திட்டம் என்று கூறியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜகவின் அமித் மாளவியா, “அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் ராஜேந்திர பால் “பிரேக்கிங் இந்தியா” திட்டத்தை செயல்படுத்துகிறார். இந்து மத வெறுப்பு பிரச்சாரத்தின் முதன்மை ஆதரவாளர் கெஜ்ரிவால்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி அமைச்சர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனர். இது இந்து மற்றும் புத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும். அமைச்சரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவருக்கு எதிராக நாங்கள் புகார் அளிக்கிறோம்” என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், “பாஜக தேசவிரோதமானது. எனக்கு பௌத்தத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் புகார் செய்யட்டும். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு சுதந்திரம் அளிக்கிறது. எந்த மதத்தையும் பின்பற்றுங்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக பயப்படுகிறது. அவர்கள் எங்கள் மீது பொய் வழக்குகளை மட்டுமே போட முடியும்.” இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry