Tuesday, March 21, 2023

தாது மணல் தொழிலில் அதானி கால்பதிக்க சலுகை! கனிம அகழ்வுக்கான தடையை நீக்குகிறது மோடி அரசு?

கடற்கரை தாதுமணல் தொழிலிலும் கெளதம் அதானியின் அதானி குழுமம் கால்பதிக்க உள்ளது. இதற்காக அக்குழுமம் சார்பில் இரண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தாதுமணல் எடுக்க 2019ம் ஆண்டில் தனியாருக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

கடற்கரை மணல் தாதுக்கள், இல்மனைட், ரூட்டில், சிர்கான், கார்னெட், சில்லிமனைட், மோனாசைட், டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் லுகோக்சீன் போன்ற பல தாதுக்களைக் கொண்டுள்ளது. இவற்றை அகழ்ந்து, பதப்படுத்தி விற்க அதானி குழுமம் தயாராகி வருகிறது.

2016 ஆம் ஆண்டில், கடற்கரை தாது மணல் கனிமங்களை அணு கனிம வகைக்குள் மத்திய அரசு சேர்த்தது. இந்த கனிமங்களில் மோனாசைட் ஒரு அணு கனிமமாகும். அதில் இருந்து அணு எரிபொருளான தோரியம் பிரித்தெடுக்கப்படுகிறது. தோரியம், இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கான முதன்மை ஆதாரமாகும்.

Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

எனவே, தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தாது மணல் கனிமங்களை எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தனியாருக்கு தடை விதிக்கப்படுவதாக கடந்த 2019 பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநில அரசுகள், கடற்கரை மணல் அகழ்வு தனியார் நிறுவனங்களுக்கு 30 முதல் 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருந்தன. ஆனால் தனியார் நிறுவனங்களுடனான குத்தகையை காலவரையறையை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக ரத்து செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

தேச நலனை கருத்தில்கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவு என இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டினார்கள். ஆனால் கடந்த மே மாதம் 25-ந் தேதி, தாதுமணல் எடுக்க தனியாரையும் அனுமதிக்கும் வகையில், கனிமவள அமைச்சகம் சட்ட முன்வரைவை கொண்டு வந்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகள், சுரங்க நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கனிமவள அமைச்சகம் கோரியது.

இதுவரை மாநில அரசுகளின் களமாக இருந்த கனிமங்களுக்கான சுரங்க குத்தகை ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கவும் இந்த முன்வரைவு முயற்சிக்கிறது. இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டால், சுரங்க உரிமங்களை வழங்குவதற்கான பிரத்யேக உரிமைகளை மாநில அரசுகள் இழக்க நேரிடும்.

Also Read : ஆஸ்கர் விருதுப்போட்டியில் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’! பல பிரிவுகளில் களமிறங்குவதால் எகிறும் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு தீர்மானித்துள்ள மாற்றங்கள் வடிவம் பெற்றால், கடற்கரை தாது மணல் அகழ்வில் சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதானி குழுமம் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே கால்பபதிக்க முடியும் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

அரசுகள், தொழில்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இதுதொடர்பான திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறுவதற்காக சட்டத் திருத்த வரைவை மத்திய அரசு பொதுத்தளத்தில் வைப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே, அதாவது கடந்த ஏப்ரல் 14 மற்றும் 27 ஆம் தேதிகளில், அதானி குழுமம் தாதுமணல் எடுப்பதற்காக இரண்டு நிறுவனங்களை பதிவு செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் Alluvial Heavy Minerals Limited மற்றும் ஒடிசாவில் Puri Natural Resources Limited என்ற இரண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒடிசாவில் டைட்டானியம் டை ஆக்சைடு (TiO2) பதப்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உள்ளன. மூல நிறுவனத்துடன் இந்த இரண்டு துணை நிறுவனங்களை இணைப்பது குறித்து மும்பை பங்குச்சந்தைக்கும் அதானி குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கு ஏதுவாக, கடற்கரை தாது மணல் கனிமச் சுரங்கத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள தடையை மத்திய அரசு திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக சுரங்கத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Source : The News Minute

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles