Monday, June 5, 2023

மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்துள்ளதற்கு மருத்துவர்களை இடமாற்றம் செய்வதா? அமைச்சர் மா.சு.க்கு அன்புமணி கண்டனம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருப்பது ஏற்க முடியாதது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ், “வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்.

Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

தமிழகத்தின் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளன. பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பாம்புக்கடி மருந்து அரசிடமிருந்து வரவில்லை என்று மருத்துவர்கள், அமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர். இதில் மருத்துவர்களின் தவறு எதுவும் இல்லை.

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி.

மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு தனது பதிவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles