‘பீஸ்ட்’ படத்திற்கு அடுத்த பின்னடைவு! குவைத்தைத் தொடர்ந்து மற்றொரு நாட்டிலும் திரையிடத் தடை!

0
73

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை திரையிட குவைத்தில் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது கத்தாரிலும் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ’பீஸ்ட்’. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் நடிகர் விஜய், இந்திய உளவு அமைப்பான ரா அதிகாரியாக நடித்துள்ளார். ஏப்ரல் 13-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் குவைத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, கத்தாரிலும் படத்தை வெளியிட தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே மலையாளத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘குரூப்’ படத்திற்கும், தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களுக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடிதம் அனுப்பியுள்ளது. புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு சுணக்கமான சூழல் ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry