டாணாக்காரன்…! போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் கொடூரம்! இயக்குநர் தமிழ், நாயகன் விக்ரம் பிரபுவுக்கு ஷொட்டு!

0
426

சாதி ஏற்றத்தாழ்வை மெல்லிய கோடாக வரைந்து, அதன் மேல் போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் கொடுமைகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது டாணாக்காரன்.

இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், அவை பெரும்பாலும் ரவுடிகளை கொல்லும் போலீஸ் படங்களாகவும், அண்டர் கவர் ஆபரேஷன் செய்யும் ஹீரோவின் கதைகளாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து பெருமளவு வேறுபட்டு, போலீஸ் ஆவதற்கு முன்பு பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை டாணாக்காரன் கண்முன் காட்டுகிறது. டாணாக்காரன் என்றால் போலீஸ்காரன் என்று பொருள்.

இயக்குநர் தமிழ்

காவல்துறை தொடர்பில் இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தை வைத்து, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் டாணாக்காரனை இயக்கி இருக்கிறார் இயக்குநர் தமிழ். இவர், ஜெய்பீம் திரைப்படத்தில் எஸ்.ஐ.ஆக நடித்தவர். போலீஸ்காரராக இருந்து ராஜினாமா செய்துவிட்டு திரைத்துறைக்கு வந்தவர். இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்தவர்.

காவலர் பயிற்சிப் பள்ளியில் லஞ்சம், ஜாதி ரீதியான பிரச்சனைகள், பயிற்சிகளில் நடக்கும் அநீதிகள் உள்ளிட்டவைகளை இயக்குநர் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். காவலர்கள் பயிற்சி இவ்வளவு கடுமையாக இருக்குமா?, சாதாரண மனிதன் போலீசாக ஆவது எவ்வளவு கடுமையான விஷயம்? என்பதை டாணாக்காரன் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. போலீஸ் வேலைக்கு தேர்வாகி, ஆட்சிக் கலைப்பால ஏற்பட்ட 15 வருட இடைவெளிக்குப் பிறகு பயிற்சிக்கு வருவோரின் சூழலை மக்கள் மனதில் பதியும்படி இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

நாயகன் விக்ரம் பிரபுவின் தந்தை லிவிங்ஸ்டன் போலீசாரால் பாதிக்கப்படுகிறார். இதனால் தனது மகனான விக்ரம் பிரபுவிடம் நீ போலீசாக வேண்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார். பயிற்சியாளரின் தொந்தரவுகளை தாண்டி விக்ரம் பிரபு போலீஸ் ஆனாரா? என்பதே படத்தின் கதை.

அறிவாக விக்ரம் பிரபு. அசாத்திய திறமை இருந்தும் சாதி காரணமாக ஒடுக்கப்படுகிறார். கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக காரியத்தை முடிக்க வேண்டிய கதாபாத்திரம். அறிவு உள்பட காவலர்கள் பயிற்சிப் பள்ளிக்கு வந்து சேரும் பலர் ஒன்றுகூடி நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு பயிற்சிக்கு வரும் காவலர்களை உயர் அதிகாரிகள் கொடுமைப்படுத்துவது, அடிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்கள் நடந்தவண்ணம் உள்ளன.

இதனை தட்டி கேட்டால் அவர்கள் போலீசாக முடியாது, இல்லை தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்கள். இதனை மிகவும் யோசித்து விக்ரம் பிரபு தட்டிக்கேட்கும் ஒவ்வொரு காட்சியும் யதார்த்தமாக அமைந்துள்ளது. விக்ரம் பிரபு இந்த கதைக்கு மிக அழகாக பொருந்துகிறார். அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விக்ரம் பிரபு இப்படத்திற்குப் போட்ட உடல் உழைப்பாலும், நடிப்பாலும் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். பல நடிகர்கள் நடிக்கத் தயங்கும் இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து அசத்தி உள்ளார். ‘கும்கி’ படத்துக்குப் பின்னர் விக்ரம் பிரபுவுக்கு நல்லதொரு வேடம்.

லத்தியுடன் பரேடு கிளப்பும் பயிற்சி அதிகாரியாக லால். அந்த மனிதருக்கு பெரும் தீனி போட்டிருக்கிறது ஈஸ்வரமூர்த்தி கதாப்பாத்திரம். அவரது கம்பீரத் தோற்றமும், கணீர் குரலும், நிமிர்ந்த நடையும், வெறுப்பு உண்டாகும்படியான நடிப்பும், படத்திற்கு பக்கபலமாக அமைந்து மிரட்டியுள்ளன. அவர் கையிலிருந்து விழும் ஒவ்வொரு அடியிலும் காக்கியின் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. போலீஸ் பயிற்சியில் விக்ரம் பிரபுவுக்கும் பயிற்சியாளர் லாலுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் விக்ரம் பிரபு போலீஸ் ஆக கூடாது என்று லால் தொந்தரவு கொடுக்கிறார்.

காவல் நிலையங்களில் நாம் பார்த்துப் பழகிய கரை படிந்த காக்கிகளை நினைவுக்குக் கொண்டுவருகிறார் முத்துபாண்டியாக வரும் மதுசூதனராவ். எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். எம்எஸ் பாஸ்கர் நடிப்பு இத்திரைப்படத்தில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நாயகியாக வரும் அஞ்சலி நாயருக்கு பெரியதாக வேலையில்லை. விக்ரம் பிரபு நண்பர்களாக வரும் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடித்துள்ளனர்.

படம் முழுக்க மைதானக் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், அதை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை, ஆனாலும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். பிலோமின் ராஜின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது‌. டாணாக்காரன் டிஸ்னிப் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் வந்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறான் டாணாக்காரான்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry