மாநில உரிமை, மொழி உரிமை காப்போம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

0
123

“தமிழ்மொழி – தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் என் தலைமையிலான அரசு உத்வேகமாகப் பயணிக்கிறது” என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு கடந்த மே மாதம் உதயசூரியனால் ஒளிபரவி விடியல் புலர்ந்தது. அதன் புதுவெளிச்சம் எல்லோருக்கும் பொதுவாகப் பரவிட வேண்டும், எல்லாத் துறைகளுமே ஒன்று போல முன்னேறிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆட்சி நிர்வாகம் சீராகச் செயல்பட்டு வருகிறது.

கடன் நெருக்கடி, பொருளாதாரச் சீரழிவு, தொழில் – உற்பத்தி பாதிப்பு எனக் கடந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்டுத் தோண்டிப் போட்டுவிட்டுப் போயிருக்கிற பள்ளங்களை நிரப்பி சமன்படுத்தும் வகையில், முனைப்பான முற்போக்கு செயல்பாடுகளை நிரல்படுத்தி மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்கிறோம். அந்த வகையில்தான், 6,100 கோடி ரூபாய் தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் துபாய், அபுதாபி பயணத்தின் போது வெற்றிகரமாக நிறைவேறின. அதன் முழுப் பலன்களும் விரைவில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திட இருக்கிறது.

தமிழ்நாட்டின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பிரதமர் தொடங்கி, அமைச்சர்கள் பலரையும் நேரில் சந்தித்து, கோரிக்கைகளை அளித்து வலியுறுத்தியதுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள மாதிரிப் பள்ளிகள், ஏழை – எளியோருக்கு உதவும் சிறிய மருத்துவமனைகள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டுவிட்டு தமிழ்நாடு திரும்பினேன். பிற மாநிலங்களில் வியந்து பார்க்கும் அளவிலான திட்டங்களைப் போல, தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் வியந்து பார்த்துப் பாராட்டும் பல திட்டங்கள் உள்ளது.

ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மக்கள்நலப் பணியாளர்களின் வேலை பறிக்கப்படுவதும், தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்குவதுமான நிலை மாறிமாறித் தொடர்ந்தது. தற்போது நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், அவை தொடர்பான உத்தரவு விவரங்களை அறிந்து, சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது என்றும், தமிழ்நாட்டின் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும், அவர்களின் மதிப்பூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்துவதுடன், மக்கள் நலப் பணியாளர்கள் கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து மாதம் 2000 ரூபாய் கூடுதலாக, மொத்தம் 7000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தேன்.

எல்லாத் துறைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது போலவே, கலைத்துறை – ஊடகம் ஆகியவற்றின் நலனிலும் கழக அரசு நிரம்ப அக்கறை கொண்டுள்ளது. அதனடிப்படையில் ஏப்ரல் 9 அன்று தென்னிந்திய ஊடகம் மற்றும் (கலை) பொழுதுபோக்கு மாநாட்டினைத் தொடங்கி வைத்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையவில்லை. சென்னை வர்த்தக மையத்தில் இந்தியத் தொழில்கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் நான்கு மொழிகளைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இன்றைய தலைமுறையினர் மனதில் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறிப்பிட்டு, கஞ்சா – குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்துகளையும் முற்போக்குச் சிந்தனைகளையும் கொண்ட திரைப் படங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்குப் பதில், இந்தி பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது, நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகியிருந்தது.

அவரது கருத்துக்கு, கண்டனக் குரலை உங்களில் ஒருவனான நான் உடனடியாக எழுப்பியிருந்த நிலையில், கண்ணூர் மாநாட்டில் கேரளாவில் தாய்மொழியான மலையாளத்திலும், அதன்பின் தொடர்ச்சியாக நம் தாய்மொழியான தமிழிலும், இறுதியாக ஆங்கிலத்தில் முழங்கியும், மாநில உரிமைகளுக்கான குரலை உயர்த்தினேன். இந்திய அளவில் மாநில உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை என்பதை எடுத்துரைத்தேன்.

பேரிடரை எதிர்கொள்வதிலும், மாநில உரிமைகளைக் காப்பதிலும், மக்களுக்கான நிர்வாகத்தை அளிப்பதிலும் எனக்கு முன்னோடியாக விளங்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் மீதான மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்தினேன்.

அதேபோல, தமிழ்நாடுதான் என் தாயகம். தமிழ்நாட்டு மக்கள்தான் என்னை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனான என் கவனம் முதன்மை பெறுவது, தமிழ்நாட்டின் மீதுதான். தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை – மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக, தொடர்ந்து பாடுபடுவோம்” என கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry