கோமா நிலையில் அதிமுக! கட்சியை அழிக்கும் சாதி அரசியல்! எதிர்க்கட்சியாக முழங்காமல் பதுங்குவதன் பின்னணி!

0
84

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரும் ஆளுமைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக, சாதி அரசியலில் சிக்கி சிதறுண்டு கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக மக்களின் குரலை ஒலிக்காமல், உள்கட்சி சண்டை போடுவதற்கே தலைவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

திமுக ஆட்சியில் அமர்ந்து சற்றேறக்குறைய 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தேர்தலுக்குப் பிறகு இரட்டைத் தலைமையால் நிர்வகிக்கப்படும் அதிமுக மவுனித்துவிட்டது. ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு விட்டு கடமை முடிந்துவிட்டதாக ஒதுங்கிக் கொள்கின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யாதது, உறுதியளித்தபடி பெட்ரோல் விலையை குறைக்காதது, குடும்பத் தலைவகிகளுக்கு மாதம் ரூ.1000 தராதது, சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் வழங்காதது என வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறுகிறது. நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட அனைத்து ஆவின் பொருட்களின் விலையும் சில நாட்களுக்கு முன் அதிகரிக்கப்பட்டது. இதேபோல், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால், ஈபிஎஸ் சேலத்தில் இருந்தும், ஓபிஎஸ் தேனியில் இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாகிவிடுகின்றனர். அதிமுக அரசின் பெரும்பான்மையான திட்டங்களைத்தான் திமுக அரசு இப்போது நடைமுறைப்படுத்துகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்கள் பிரச்சனைக்காக வீதிக்கு வந்து போராடி திமுக அரசுக்கு அழுத்தம் தர இரட்டைத் தலைமையால் முடியவில்லை. அதிரவைக்கும் அளவுக்கு களமாட திமுக களம் அமைத்துக் கொடுத்தாலும், அதிமுக கோமா நிலையிலேயே இருக்கிறது.

இரட்டைத் தலைமையின் சுயநலமும், சாதி அரசியலும், அதிமுகவை பீடித்திருக்கும் புற்றுநோய் என்றுதான் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி கொங்கு வேளாளர்களை நம்பியும், ஓபிஎஸ் முக்குலத்தோரை நம்பியும் அரசியல் செய்கின்றனர். அப்படியானால் மற்ற சமூகத்தினர் அதிமுக-வுக்கு தேவையில்லையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சட்டமன்ற தேர்தல் வரையிலாது ஈபிஎஸ் கொங்கு வாக்குகளை பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால், ஓபிஎஸ்-ஆல் முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைத்து பெற முடியவில்லை. தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகளை டிடிவி தினகரனின் அமமுக கபளீகரம் செய்கிறது.

தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் செல்வாக்கை இழந்துவிட்ட ஓ. பன்னீர்செல்வம், 2-வது இடத்தை தக்க வைக்க அவ்வப்போது சசிகலாவை காட்டி அரசியல் செய்கிறார். தனக்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம், சசிகலாவை துணைக்கு இழுப்பது ஓபிஎஸ் வழக்கமாகிவிட்டது. சசிகலா விவகாரத்தை வைத்தே, ஓபிஎஸ் நம்பகத்தன்மை இல்லாதவர் என்ற முடிவுக்கு கட்சி நிர்வாகிகள் வந்துவிட்டனர். அ.தி.மு.க. பலவீனமடைந்து வருகிறது, இதுதான் தனக்கான நேரம் என சசிகலாவும் நினைக்கிறார்.

அடுத்தடுத்த அரை டஜன் தோல்விகளால், தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோர்வு ஏற்பட்டுள்ளது. தவறு செய்யும் அல்லது கட்சிக்கு துரோகம் செய்யும் நிர்வாகிகளைக் கூட இரட்டைத் தலைமையால் கண்டிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ராணுவ கட்டுக்கோப்புடன் கட்சியை வழிநடத்தினர். அவர்களது தலைமையில் கட்சி தோல்வியைத் தழுவியபோது, தோல்விக்கான காரணத்தைச் சரிசெய்ய தலைமை முயன்றது. ஆனால் இன்று தலைமைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொண்டர்கள் – நிர்வாகிகள் நிலை எப்படி இருக்கும்?

இதை பாஜக சரியாக பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறது. எண்ணிக்கையில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், செயல்பாடுகளில் நாங்கள்தான் என்கிறது பாஜக. பெட்ரோல் – டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை என வீதிக்கு வந்து போராடுகிறார் அண்ணாமலை. திமுக செய்யும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுகிறார், விமர்சிக்கிறார். பாஜகவுக்கு பதிலளிக்கும் திமுக அரசு, அதிமுகவை சீண்டுவதில்லை.

தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைக் கூட இரட்டைத் தலைமையால் அமைக்க முடியவில்லை. இவர்கள் செய்த தவறுகளுக்கு அல்லது சுயநலத்துக்கு, கட்சியை – தொண்டர்களை பலிகடா ஆக்கி வருகின்றனர். ஒரு தாயின் வயிற்றின் பிறந்த பிள்ளைகளே வெவ்வேறு குணாதிசயங்களுடன் இருக்கும்போது, ஒரு கட்சியை இரட்டைத் தலைமை வழிநடத்துவது, மேலும் வீழ்ச்சிக்குத்தான் வித்திடும். அரை டஜன் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராயக்கூட முன்வராமல், குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொள்ளும் இரட்டைத் தலைமை மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். சொந்த வார்டில் கூட கட்சியை வெற்றி பெற வைக்க முடியாததில் இருந்தே இரட்டைத் தலைமையின் இயலாமை வெளிப்பட்டுவிட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு 25.15% வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. இந்த வாக்குகள் தங்களின் வசீகரமிக்க தலைமைக்கோ, இரட்டைத் தலைமைக்கான அங்கீகாரம் என்றோ, ஓபிஎஸ் – ஈபிஎஸ் கருத முடியாது. இது, எம்.ஜி.ஆர்., ஜெயலலதா உருவாக்கி வைத்துள்ள பாரம்பரியான அதிமுக வாக்கு வங்கி. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து சராசரியாக 33% வாக்குவங்கியை வைத்திருந்த கட்சிதான், இப்போது தேய்ந்து 25% என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

“எனக்குப் பின்னும் இந்த இயக்கம் நூறாண்டுகள் இயங்கும்” என்று 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா கம்பீரமாக முழங்கினார். ஆனால் கடந்த ஆட்சியின்போது, இரட்டைத் தலைமையை சமாதானம் செய்ய அமைச்சர்கள் காரில் பார்வேட்டை அடித்ததை மக்கள் மறக்கவில்லை. பத்து ஆண்டுகால ஆட்சியில், அமைச்சர்கள் என்ற அதிகாரத்தை வைத்து சம்பாதித்தவர்கள், தற்போது பதுங்கிவிட்டனர்.

பொன்விழா கொண்டாடும் நேரத்தில், அ.தி.மு.க தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 65 இடங்களில் வெற்றி பெற வைத்து கவுரமான எதிர்க்கட்சியாக பேரவைக்கு அனுப்பி வைத்த நமக்கு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என மக்கள் கேட்கின்றனர்?. தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே கட்சிக்கு அவசர, அவசியத் தேவையாக உள்ளது.

– கோ, பத்திரிகையாளர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry