23 தீர்மானங்களும் நிராகரிப்பு! அசிங்கப்பட்டு வெளியேறிய ஓபிஎஸ்! அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம்!

0
520

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ‘ஒற்றைத் தலைமை’ வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சமாதானப்படுத்தினர். ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மேடைக்கு வந்தபோது, ’துரோகி’ என உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவர் மேடையிலிருந்து வெளியேறினார்.

பின்னர் ஓபிஎஸ் வந்தபோது, அவரை வெளியேறச் சொல்லியும், ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் முகம் வெளிறிய நிலையில் ஓபிஎஸ் காணப்ப்டார். எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்ததும், ஓபிஎஸ்-ம், அவரும் தலைவர்கள் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். அப்போதும் உறுப்பினர்கள் முழக்கம் அடங்கவில்லை.

தீர்மானங்களை முழுமொழிவது, வழிமொழிவது பற்றி வைகைச் செல்வன் அறிவித்தார். அதன்படி 23 தீமானங்களை முன்மொழிவதாக ஓ. பன்னீர்செல்வம் பேசினார். அப்போதும் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டவாறு, கைகளை அசைத்து அவரை வெளியேறச் சொன்னார்கள். ஓபிஎஸ் பேசிய பிறகு மைக் பிடித்த, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என ஆவேசமாக கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய வளர்மதி, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” எனப் பாடல் பாடி நமக்காக ஒருதலைவன் வருவான் என்றார்.

அடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டார்கள். ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்ற ஒரேயொரு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து தீர்மானம் எப்போது கொண்டு வரப்படுகிறதோ அப்போதுதான் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்” என்றார். தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி ஆகியோர் பேசியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.

இரங்கல் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார். பிறகு, தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக நியமிப்பதற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இதனை வரவேற்று ஆரவாரம் செய்தனர்.

இதுமுடிந்ததும், பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “2190 பொதுக்குழு மற்றும் செயற்குழு சார்பில் அவைத் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கிறோம் என்று கூறி மனு ஒன்றை அளித்தார்.

அப்போது பேசிய அவர், “இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டை தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றை தலைமை ஏற்பட வேண்டும். எனவே பொதுக் குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்த பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதன்பிறகு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், “ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார். இதன் பின்னர் எஸ்.பி. வேலுமணி நன்றியுரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் மேடையிலிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, வெள்ளி கிரீடம், வீர வாள் போன்றவை பரிசளிக்கப்பட்டது. தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

முன்னதாக தான் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அதோடு, அடுத்த பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் மேடையிலிருந்து புறப்பட்டார். அப்போத, மைக் பிடித்த வைத்திலிங்கம், சட்டவிரோதமாக பொதுக்குழு நடைபெறுகிறது, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என கூறிவிட்டு சென்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry