உங்க அப்பாவாலயே ஒன்னும் பண்ண முடியல! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி! 

0
188

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 9 மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக பாரிமுனையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமி வந்த போது அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பி அவர்கள் வரவேற்றனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாராயணப்பா தெரு தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நிற்கக்கூட இடம் கிடைக்காத தொண்டர்கள், அருகில் கடற்கரை சாலையின் இருபுறமும் குவிந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க.வை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்ற அளவுக்கு இங்கு கூட்டம் கூடியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது. இந்த 14 மாதத்தில் தமிழக மக்கள் ஏராளமான துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின்கட்டண உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் எங்களுக்கு செல்வாக்கு பெருகி வருவதால் வழக்கு போட்டு எங்கள் செல்வாக்கை மறைக்க பார்க்கிறார்கள். வேண்டும் என்றே நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது ஏராளமான துன்பங்களை சந்தித்தார். அதை தவிடுபொடியாக்கி 10½ ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் மறைந்த பிறகு அ.தி.மு.க. உடைந்தது. மீண்டும் அ.தி.மு.க. இணையாது என்று தி.மு.க. நினைத்தது. ஆனால் அம்மா அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து, 15½ ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.

தி.மு.க. ஆட்சியின் போது அம்மா மீது பொய் வழக்கு போட்டு தொல்லை கொடுத்தனர். ஆனால் அதை முறியடித்தார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பாடுபட்டனர். ஆனால் இன்று அ.தி.மு.க.வை அழிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அவரது தந்தை கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை அழிக்க முடிய வில்லை. உங்களால் எப்படி முடியும்?. அ.தி.மு.க. என்றால் அசாதாரணமாக நினைக்கிறீர்களா? இங்குள்ள தொண்டர்களின் உழைப்பால் உருவான கட்சி அ.தி.மு.க.

தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்த கட்சி அ.தி.மு.க., யாராலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. தி.மு.க. ஒவ்வொரு சூழலிலும் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் போதெல்லாம் அ.தி.மு.க. வீறு கொண்டு எழுந்து ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு. அந்த வரலாறை அ.தி.மு.க. மீண்டும் உருவாக்கும். அதற்கு ஏற்ப மக்களும், தொண்டர்களும் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வலிமையுடன் அ.தி.மு.க. உள்ளது. நாங்கள் ஏமாந்து தி.மு.க.வுக்கு வாக்களித்து விட்டோம் என்று இன்று மக்கள் சொல்கிறார்கள்.

Also Read : திமுக அரசு கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது! திராவிட மாடலுக்கு மூல காரணமே பாதிரியார்கள்தான்!

விபத்தில் வந்த ஆட்சி தான் தி.மு.க. இப்போது மக்கள் சிந்தித்து பார்க்கிறார்கள். தி.மு.க. அரசு எப்போது அகற்றப்படும் என்று கேட்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்யத்தான் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை அளித்தார்கள். எங்களை அழிப்பதற்காக அல்ல. அதற்கு மாறாக செயல்பட்டால் விரைவில் அதற்கான பலன் கிடைக்கும் என்று எச்சரிக்கிறேன். காட்சிகள் மாறினால் ஆட்சி மாறும். அப்படி மாறினால் நீங்கள் தாக்கு பிடிப்பீர்களா? சக்கரம் சுழன்று மேலே வரும். அப்போது உங்கள் நிலைமை மாறும். காற்றை தடைபோட முடியாது. அதுபோல அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது.

நீங்கள் ஆட்சிக்கு வந்து 14 மாதத்தில் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். துன்பத்தில் இருந்து தங்களை மீட்டெடுக்குமாறு மக்கள் எங்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாடே அலறுகின்ற வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. அதன்மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம். கருணாநிதி காலத்திலும், மு.க.ஸ்டாலின் காலத்திலும் வீட்டு மக்களை பற்றி நினைக்கும் கட்சி தி.மு.க. ஆனால் நாட்டு மக்களை பற்றி நினைக்கும் கட்சி அ.தி.மு.க. நம் தலைவர்கள் நாட்டு மக்களை பற்றி சிந்தித்தனர். அவர்களுக்கு நன்மை செய்தனர்.

அம்மா என்றதும் தனது அம்மாவை விட புரட்சி தலைவி அம்மா பெயர் தான் ஞாபகம் வரும். அம்மா ஆட்சியின் போது 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தார். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதை ஏழைகளால் தாக்குபிடிக்க முடியுமா? மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தா ஆட்சிக்கு வந்தீர்கள். அப்படி வாக்குறுதி கொடுத் திருந்தால் நிலைமை தலை கீழாக மாறி இருக்கும். ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. இதுதான் திராவிட மாடல்.

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த பிறகு, அதை காற்றில் பறக்க விட்டு விட்டனர். நகரங்களில் சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தி உள்ளனர். கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நேரத்தில் அவர்கள் தலையில் இடிவிழுந்தது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருப்பது நியாயமா?

வாக்குறுதிகளை மறந்த கட்சி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு டன் கம்பி ரூ.32 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது ஒரு டன் கம்பி ரூ.74 ஆயிரத்துக்கு விற்கிறது. செங்கல், ஜல்லி, எம்.சாண்ட் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வீடு கட்டுமான வேலைகள் பாதியில் நிற்கிறது. இதனால் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : கற்பனையில் மிதக்கும் அதிகாரிகள்! 15 மாதங்களில் சாதித்தது என்ன? அமைச்சருக்கு சுளீர் கேள்விகள்!

இந்த விடியா அரசு விடிந்து எழுந்து மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், தி.மு.க. அரசு குறைக்க வில்லை. அதற்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வால் மாணவி இறந்த போது எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இப்போது மாணவிகள் தற்கொலைக்கு என்ன பதில் சொல்ல போகிறார். நீட் தேர்வு விலக்கு கேட்டு நீட்டிக்கொண்டே போகிறார்கள்.

பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்கப்படுகிறது. அதை தடுத்து நிறுத்த முதலமைச்சர் முயற்சிக்கவில்லை . போட்டோ ஷூட்டுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார். அவருக்கு மக்களை பற்றி கவலை இல்லை. தி.மு.க. வின் மூலதனமே பொய்தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கோவிலாக கருதப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கதவுகளை காலால் மிதித்து உடைத்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். அவர்களுக்கு அந்த அதிகாரம் வழங்கிய தி.மு.க.வை வேரோடு அறுப்போம். அ.தி.மு.க. அலுவலகத்தை உடைத்த துரோகிகளை ஓடஓட விரட்டியடிப்போம்”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry