கற்பனையில் மிதக்கும் அதிகாரிகள்! 15 மாதங்களில் சாதித்தது என்ன? அமைச்சருக்கு சுளீர் கேள்விகள்!

0
6526

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்ட தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் 77 வகையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. மாணவர்களுக்குப் பாடம் நடத்த அனுமதிக்காமல் நிர்வாகப் பணிகளைக் கொடுக்கிறார்கள். மாணவர்கள் ஒழுங்கீனமாக நடப்பது அதிகரித்து வருகிறது. மாணவர்களைக் கண்டிக்காமல் திருத்துவது சாத்தியமில்லாதது. அனைத்துப் பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டுக்கென ஒரு வகுப்பறை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே வகுப்பறை பற்றாக்குறை இருக்கும் நிலையில், இது சாத்தியமா? கல்வித்துறை உயர் அதிகாரிகள் கற்பனையில் வாழ்வதையே இத்தகைய போக்குக் காட்டுகிறது.

வா. அண்ணாமலை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிறது. அவரிடம், ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் அளித்திட்ட கோரிக்கைகளில், இதுவரையில் தீர்வு கண்ட கோரிக்கைகள் என்னென்ன? தனியாசிரியர்கள் அவர்களது கோரிக்கை விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து வழங்கினர், அதில் தீர்வு காணப்பட்டவை எவையெவை?

அமைச்சரின் சொந்தத் தொகுதியான திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் PAY MATRIXல் 45 pay cell ஆக அதிகரித்து ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு புறம் தள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, வழங்கி வந்த ஆண்டு ஊதிய உயர்வினை திருவெறும்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பிடித்தம் செய்தார்கள். பாதிக்கப்பட்ட தனி ஆசிரியர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விண்ணப்பங்களை அளித்தார்கள். இதுவரையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவில்லை.

கல்வி நிர்வாகக் கட்டமைப்பினை சீர்குலைத்து, உ.பி. யோகி அரசின் கல்வி நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எண்: 101 ,108ஐ, 15 மாத காலம் ஆகியும் இதுவரை ரத்து செய்யாமல் இருப்பதுதான் கல்விச் சிறந்த தமிழ்நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடியதா?

பள்ளிக் கல்வி ஆணையர் பதவியை விடுவிக்க வலியுறுத்தி, ஏன் விடுவிக்க வேண்டும் என்பதற்கான காரண காரியங்களை எடுத்துக்கூறி, கோரிக்கை விண்ணப்பங்களை தனி சங்கங்களின் நடவடிக்கையாக, கூட்டு நடவடிக்கையாக அளித்தும், அதற்கு தீர்வு காணும் அசைவினை கூடக் காண முடியவில்லை.

பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.

பள்ளிக் கல்வி ஆணையர், டிபிஐ வளாகத்தில் உள்ள எந்த இயக்குனர்களையும், அலுவலர்களையும் சுதந்திரமாகச் செயல்படவிடுவதில்லை. EMIS…EMIS என்று சொல்லி ஆசிரியர்கள் பாடம் நடத்த வாய்ப்பு இல்லாமல், புள்ளி விவரங்கள் சேகரிப்பதற்கு நேரத்தை செலவிட்டு அன்றாடம் மன அழுத்தம் அளித்து வருவதைக் கூறியும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆசிரியர்களும், பணியாற்றும் அலுவலர்களும் சித்திரவதையினை பள்ளிக்கல்வி ஆணையரால் அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி சம்பாதித்த ஆசிரியர்கள் வாக்கு வங்கியினை 80% விழுக்காட்டிற்கு மேல் ஆணையர் சிதறடித்து வைத்திருக்கிறார். மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை காட்டாமல், ஆசிரியர்கள் உள்ளத்தில் வெறுப்பினை உச்சம் தொட வைத்து வருகிறார்.

Also Watch : சிக்கிய கல்வித்துறை உயர் அதிகாரிகள்? உண்மையை உடைக்கும் அண்ணாமலை!

உரிய காலத்தில் தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு நோட்டுக்கான தேவைப்பட்டியல் கொடுக்காதது; புத்தகங்கள் அச்சடிப்பதற்கு தேவைப்பட்டியல் கொடுக்காதது; சமூக நலத்துறைக்கு சீருடை வழங்குவதற்கு உரிய காலத்தில் தேவைப்பட்டியல் அளிக்காதது; பாடநூல் கழகத்திற்கு உரிய காலத்தில் புத்தகப்பை, காலணிகள் தேவைப்பட்டியல் கொடுக்காதது என, இவ்வளவு பிரச்சினைகளும் பள்ளிக்கல்வி ஆணையரால் வந்ததுதான்.

பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரையில் பொது மாறுதல் கலந்தாய்வு முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றுள்ளது. ஆட்சிக்குப் பெருமையினை சம்பாதித்து கொடுத்துள்ளது. நாங்களும் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் 13 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய பள்ளியில் 4 ஆசிரியர்கள் தான் பணி புரிந்து வருகிறார்கள். 8 பேர் பணிபுரியக்கூடிய பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். எப்படி மாணவர்களுக்கு அரும்பு, மொட்டு, மலர் நடத்த முடியும்?

1,2,3 வகுப்புகளுக்கு கல்வித்துறை பாடப்புத்தகம் கொடுத்துள்ளது. ஆனால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 1,2,3 வகுப்புகளுக்கான புத்தகத்தை யாரும் நடத்தக்கூடாது என்று SCERT கண்டிப்புடன் கூறுகிறார்கள். நமது திராவிட மாடல் அரசில் அனைத்து அலுவலர்களும், ஆசிரியர்களிடம் மட்டுமே அதிகாரத்தினை செலுத்தி வருகிறார்கள்.

ஒருவாரம் வெளிப்பயணத்தை நிறுத்திவிட்டு, இணை இயக்குநர்கள் வரையிலான அதிகாரிகளை அழைத்து, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதைத் தீர்ப்பதற்கான காலவரம்பை நிர்ணயித்தாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்ட 25 மாவட்டங்களுக்கும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தையாவது செய்து மாணவர்களின் கல்வி நலனனை பாதுகாத்திட வலியுறுத்துகிறோம்.

Also Read : நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் கூடாது! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்!

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மண்டல ஆய்வு என்பது பயணத்திட்டமாக அமையலாமே தவிர, எவ்வித விழிப்புணர்வையும் ஏற்படுத்தாது. முந்தைய அரசின் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது கட்டுப்பாட்டில் தான் அனைத்து அலுவலர்களும் இருந்தார்கள் என்பது 100 விழுக்காடு உண்மையாகும். கட்டுப்பாட்டை மீறியவர்களை மாறுதல் செய்யாமல் ஒரு வாரம் கூட விட்டு வைத்ததாக வரலாறு இல்லை என்பதை எங்களால் மறக்க முடியவில்லை.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியும் ஆசிரியர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல பாசத்துடன் அரவணைத்து வந்தார். ஆனால் தற்போதோ ‘ம்’ என்றால் சிறைவாசம், ‘ஆம்’ என்றால் வனவாசம் என்பதைத் தவிர அத்தனை சித்ரவதைகளையும் அனுபவித்து வருகிறோம். பள்ளிக் கல்வி உயர் அதிகாரிகளை கற்பனை உலகில் இருந்து மீட்டு, யதார்த்த நிலைக்கு அழைத்து வருமாறு பள்ளக் கல்வி அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். சுதந்திரதின பவள விழா ஆண்டை கல்வி நிர்வாக மறுசீரமைப்புடன் கொண்டாடுவோம்”. இவ்வாறு அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry