3.20 Mins Read : மலையைப் பார்த்து ஒருவர் குரைத்துக்கொண்டிருக்கிறார்; இதனால் தம் மீதும், தம் கட்சி மீதும் கவனம் திரும்பும் என்பதற்காக மட்டுமல்ல. தேர்தல் பரப்புரையின்போது தமிழர்களை இழிவுபடுத்தி பிரதமர் மோடி பேசியதை திசை திருப்பவும்தான். புரட்சித் தலைவி அம்மா பற்றி ஏதுமறியாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. (பெயருக்கும், செயலுக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை).
சிறுபான்மையினர் நலன் முக்கியம் என்ற ஒற்றை நோக்கத்தில், கூட்டணியில் இருந்து பாஜகவை விரட்டி விட்டார் புரட்சித் தமிழர் எடப்பாடியார். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள், கெஞ்சிப் பார்த்தார்கள், தூது அனுப்பிப் பார்த்தார்கள். தனது திடமான முடிவிலிருந்து புரட்சித் தமிழர் பின்வாங்கவில்லை.
துரோகி பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வாக்களித்தார், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகினார். அவரது ஆதரவாளர்கள் கழக தலைமை அலுவலகத்தை உடைத்து கோப்புகளை திருடிச்சென்றனர். கட்சியின் பரம எதிரியான தி.மு.க.வுடன் கைகோர்த்ததுடன், வணிக ரீதியான தொடர்பும் வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் மன்னிக்க முடியுமா? இதுபோன்ற செயலை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கமலாலய அடிமையான இந்த துரோகியை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்றும், அம்மாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட டிடிவி தினகரனை கூட்டணி என்ற பெயரில் கட்சிக்குள் கொண்டுவரவும் புரட்சித் தமிழரிடம் காலில் விழாத குறையாக கேட்டுப்பார்த்தார்கள். ஆனால் எதற்கும் உடன்படாத புரட்சித் தமிழர், பாஜக மற்றும் துரோகி பன்னீர்செல்வம் போன்ற உடனிருந்தே கொல்லும் வைரஸ் கிருமிகளை அண்ட விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
இதை ஜீரணிக்க முடியாத பாஜக, அவ்வப்போது எம்ஜிஆர் மாளிகையை நோக்கி குரைக்க ஆரம்பித்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சி, ED – IT என பல துறைகளை ஏவுவோம் எனத் தெரிந்தும், புரட்சித் தமிழர் எடப்பாடியார் இடதுகையால் ஒதுக்கிவிட்டு முன்னேறிச் செல்கிறாரே? என்பதை ஏற்க முடியாமல், அவ்வப்போது குரைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்டது தமிழக பாஜக.
பிரதமர் மோடி தமிழர்களை இழித்துப் பேசியதை மறைக்கவும், தமிழர்களுக்கு செய்த துரோகங்களை மறைக்கவும், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா இவர்களுக்குத் தேவைப்படுகிறார். இரும்புப் பெண்மணியான புரட்சித் தலைவி அம்மாவைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியோ, யோக்கியதையோ இல்லை. புரட்சித் தலைவி அம்மா குறிப்பிட்ட மதத்துக்கான தலைவர் என்பதைப் போல கட்டமைத்து அவதூறு பரப்பும் அதேநேரம், அதிமுக என்ற தொண்டர்கள் பலமிக்க இயக்கத்தை அசைத்துப் பார்க்கலாம் என அண்ணாமலை கனவு காண்கிறார். இது, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புதவற்கு சமம்.
அதிமுக என்ற பேரியக்கம், பாஜக போன்ற அடிப்படைவாத இயக்கமா என்ன? அனைத்து மதத்தினரையும் அரவணைத்து ஆட்சி செய்ததில், கட்சியை வழிநடத்தியதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்தான் புரட்சித் தலைவி அம்மா. திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டதால், கோவில்களுக்கு யானைகளைப் பரிசளித்ததால் அவர் இந்து மதத்துக்கான தலைவர் என்று கூறுவது அண்ணாமலையின் மனப் பிறழ்ச்சியையே காட்டுகிறது.
புரட்சித் தலைவி அம்மா தனது இறை நம்பிக்கையை ஒளித்து வைத்திருக்கவில்லை. ஒருநாளும் இந்து மதம்தான் பெரியது எனச் சொல்லியதும் இல்லை. புரட்சித் தலைவி அம்மாவின் இறை நம்பிக்கையை, பாஜகவுக்கே உரிய மத அடிப்படைவாதம் என்ற கண்ணாடி மூலம் பார்ப்பது மூடத்தனம். இறை நம்பிக்கையையும், மத அடிப்படைவாதத்தையும் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்? அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக பார்வையில், கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரும் மத அடிப்படைவாதிகளா? மத நம்பிக்கையையும், மத அடிப்படைவாதத்தையுமே ஒப்பிடக்கூடாது, ஒப்பிட முடியாது எனும்போது, அண்ணாமலையின் உள்நோக்கம் அனைவருக்கும் தெளிவாக விளங்கும்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தாரே?, கோயில்களில் உயிர்ப்பலி கூடாது என்றாரே? என கேட்கிறார்கள் சில மூடர்கள். உண்மைதான், ஆட்சியாளர் என்பவர் அனைத்துத் தரப்புக்குமானவர். ஒரு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால், இது தவறு, மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்று உணர்ந்தவுடன், அந்தச் சட்டங்களை திரும்பப்பெற புரட்சித் தலைவி அம்மா எந்தத் தயக்கமும் காண்பிக்கவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் அது தவறு என்ற நிலைப்பாட்டை எடுத்தவர் அம்மா. இதன் மூலம், தான் அனைத்து மத்ததினருக்குமான தலைவர்தான் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக உணர்த்தியுள்ளார்.
“புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001-ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மாவால் தொடங்கப்பட்டது. புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப்பயணம் செல்ல நிதியுதவி வழங்கும் திட்டம் புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இப்படி எல்லா மதத்தையுமே சமமாகக் கருதி மதச் சார்பற்றவராகவே அம்மா செயல்பட்டுள்ளார். அவரை இந்துத்துவத் தலைவர் என்று சொல்வது அரைவேக்காட்டுத்தனம்.
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கான நிதியுதவியை விடியா திமுக அரசு நிறுத்தியது குறித்து அம்மாவின் அறவழியில் பயணிக்கும் புரட்சித் தலைவர் எடப்பாடியார் அரசுக்கு கேள்வி எழுப்பினாரே? அண்ணாமலை ஏன் வாய்திறக்கவில்லை? பா.ஜ.க. முன்வைப்பது இந்து அடிப்படைவாதத்தை; அப்படியானால் தமிழக பாஜகவின் பார்வையில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் உள்ள இந்து நம்பிக்கையாளர்கள் மத அடிப்படைவாதிகளா? அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அதிமுகவில் இருக்கிறார்கள், இவர்கள் யாருமே மத அடிப்படைவாதிகள் அல்ல, இறை நம்பிக்கையாளர்கள். இதற்குச் சிறந்த உதாரணம், கழக நிறுவனர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977-இல் தான் முதலமைச்சர் ஆனவுடன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வந்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடைய இந்த நடவடிக்கையை இந்துத்துவத்துடன் ஒப்பு வைத்துப் பார்க்க முடியுமா?
புரட்சித் தலைவி அம்மா என்ற முகமூடியை அணிந்துகொண்டு, தனது ஆக்டோபஸ் கரங்களால் அதிமுகவை அபகரித்து, அமீபியா போல மெல்லத் தின்றுவிடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது. கட்சி நடத்துவது என்பது திருட்டுத்தனமாக கேமரா வைப்பதுபோல் அல்ல. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா வழியில் கழகத்தை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் கழகம் வீறுநடைபோடும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
“ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம்” என்ற புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் கருத்தியல் ரீதியாக மட்டுமே மோதி வருகிறோம் என்பதை அண்ணாமலை போன்றோர் கவனத்தில் கொள்வது அவசியம். தமிழிசை வருகையால் காணாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில், அண்ணாமலை வகையறாக்கள் இனியும் கோயபல்ஸ் பிரச்சாரத்தைத் தூக்கிக்கொண்டு வந்தால், அதிமுக தொண்டன் களமாட தயங்கமாட்டான்.
கட்டுரையாளர் : ‘அம்மா’ கோபி, மூத்த பத்திரிகையாளர். மாவட்ட ஐ.டி.விங் துணைத் தலைவர், தென்சென்னை தெற்கு(கி) மாவட்டம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry