பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, அண்ணா ஆகியோரை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் இதனை தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் பாஜகவுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னையில் தலைமைக் கழக அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது.
Also Read : சுயநலத்துக்காக கூட்டணியை உடைக்கும் கரூர் கோமாளி! அண்ணாமலைக்கு அதிமுக தொண்டனின் பதிலடி!
இதில், பாஜக உடனான கூட்டணி வேண்டாம் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஏற்கனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வது என கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும், அதிமுக அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
கூட்டத்தில் எடுத்த முடிவை முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, “பாஜக தமிழக தலைமையின் பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தொண்டர்களின் விருப்பங்கள், உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாஜகவிடம் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகிக்கொள்கிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் மற்ற கட்சிகளோடு இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.” என்று கூறியுள்ளார்.
தலைமையின் முடிவை மாநிலம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தேனியில் நேரு சிலை அருகே நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு, அதிமுக – பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry