கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் போராட்டம்! பி.ஆர். பாண்டியனிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போலீஸார்?

0
95
P.R. Pandian arrested for protesting against Karnataka

காவிரியில் தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கைது செய்தனர்.

சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகில் கையில் தேசியக் கொடியுடன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர் வி.கே.வி. துரைசாமி ஆகியோர் அறவழியில் முழக்கங்களை எழுப்பினர். ‘மத்திய அரசே மோடி அரசே கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்து’ என அவர்கள் முழக்கமிட்டனர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்த அவர்கள், பெங்களூருவில் நாளை நடைபெறவிருக்கும் முழு அடைப்பால், அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்; மாநில அரசே முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளது, எனவே மத்திய அரசு பந்த்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அங்கு வந்த போலீஸார், முதலமைச்சர் அந்த வழியாகச் செல்ல உள்ளதாகவும், மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில் என்றும் கூறி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். நாங்கள் போராட்டம் நடத்தவில்லை, கைகளில் தேசியக்கொடி ஏந்தி அறவழியில் எங்களது கோரிக்கையை முழக்கமாக எழுப்பிக்கொண்டிருக்கிறோம், எனவே நாங்கள் வெளியேற முடியாது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் தலைமையிலான போலீஸார் பி.ஆர்.பாண்டியனை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். பின்னர் தரையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் பி.ஆர். பாண்டியனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இப்படி முரட்டுத்தனமாக கையாளப்பட்ட பி.ஆர். பாண்டியன், வி.கே.வி. துரைசாமி ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், திருவல்லிக்கேணி விஎன் வெங்கட்ரங்கம் சாலையில் உள்ள சமூகநலக் கூட்டத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Also Read : காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம்! தமிழகத்துக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள கர்நாடக கட்சிகள்! தமிழர்களுக்கு பகிரங்க மிரட்டல்!

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் தம்மிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதுடன், தேசியக் கொடியையும் அவமதித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவின்பேரில்தான் போலீஸார் இவ்வாறு நடந்துகொண்டார்களா? அதிமுக ஆட்சிக் காலத்திலும் நாங்கள் போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம், ஆனால், போலீஸார் எங்கள் மீது கைவைத்ததில்லை, தாக்கியது இல்லை. விவசாயிகளுக்குகாக நீதி கேட்டது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பி.ஆர்.பாண்டியன் கைதைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பி.ஆர். பாண்டியன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, “தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது தாக்குதல் நடத்தியும் வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அரசை வலியுறுத்தும் கர்நாடகா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை மண்டியா விவசாயிகள் பந்த் நடத்தினர். பெங்களூரில் நாளைய தினம் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல செப்டம்பர் 29ஆம் தேதியன்றும் பெங்களூரில் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில பந்த் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பதற்றம் உருவாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry