காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம்! தமிழகத்துக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள கர்நாடக கட்சிகள்! தமிழர்களுக்கு பகிரங்க மிரட்டல்!

0
57
Protests in Karnataka opposing release of Cauvery water

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்துவிடாமல் கடந்த சில மாதங்களாக கர்நாடகம் முரண்டு பிடித்துவருகிறது. இதனால், காவிரிப்படுகையின் கடைமடை வரை குறுவை சாகுபடிக்கான நெற்ப்பயிர்கள் காய்ந்து கருகிக்கொண்டிருக்கின்றன.

நீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், காவிரி நீரைத் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகா இல்லை எனக்கூறி ஆளும் காங்கிரஸ் கட்சித் தொடங்கி, அங்கிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டிருக்கின்றன.

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பாக கடந்த 18 ஆம் தேதி காவேரி மேலாண்மை ஆணையம் இட்ட உத்தரவை, கடந்த 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், காவிரிப் படுகையில் மட்டுமல்லாது, வட கர்நாடகாவும் போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறது.

Also Read : காவிரி விவகாரத்தில் தத்தளிக்கும் திமுக! நட்பு வேறு, மாநில நலன் வேறு என்பதில் தெளிவாக இருக்கும் கர்நாடக, கேரள முதல்வர்கள்!

மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூரு உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆரம்பத்தில் வெடித்த போராட்டம், இப்போது கொஞ்சம் வடக்கே நகர்ந்து சித்ரதுர்கா, பெல்லாரி, தாவெண்கெரே, கொப்பல், விஜயபுரா வரை நீண்டிருக்கிறது.

மாண்டியா நகரின் மையப் பகுதியில் இருக்கும் சர்.விஸ்வேஸ்வரய்யா சிலை அருகே தொடர்ந்து இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்திவரும் ரைதா ஹிதரக்ஷணா சமிதி, மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த சங்கமும், ஹசிரு சேனா அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டத்தில் தான், தமிழக முதல்வரின் படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஏற்கனவே இதே அஜெண்டாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியும் காவிரி படுகை மாவட்டங்கள் உள்பட ஆறு மாவட்டங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தினசரி பெங்களூருக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி தான் இன்றைய தமிழகத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் முக்கியமான கதாநாயகன். போராட்டத்தில் பேசிய சி.டி. ரவி, “விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புக்கு பாஜகவின் ஆதரவை தெரிவிக்கவே நான் வந்துள்ளேன். இண்டி கூட்டணியை வலுப்படுத்தவே கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது. காவிரி நீரை திறந்து விடுவதன் மூலம் காங்கிரஸ் தங்கள் கூட்டணியை பாதுகாக்கிறது” என குற்றம் சாட்டினார்.

Also Read : விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு! பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

மாண்டியா மாவட்டத்தில் மட்டும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட காவிரிப்படுகை மாவட்டங்கள் முழுவதும் போராட்டங்களும், கடை அடைப்பும் நடந்திருக்கிறது.
பழைய மைசூரு அருகே நடந்த போராட்டத்தில் ஆதி சுஞ்சனகிரி மடத்தின் தலைவரான சுவாமி நிர்மலானந்தநாத சுவாமிகள் கலந்து கொண்டதோடு, கூடியிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில், எந்தத் தீர்ப்பாக இருந்தாலும் மக்களின் நலன் முக்கியம் என்ற கருத்தை மையப்படுத்திப் பேசி தன் பங்குக்கு போராட்டக்காரர்களை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

வரும் 26ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவோ, போராட்டம் நடத்துவது அவர்களுடைய உரிமை, அரசாங்கத்திற்கு அதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் பொதுச்சத்துக்களுக்கு சேதம் வராதவாறு போராட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

100% வெற்றி பெற்றிருக்கும் மாண்டியா முழு அடைப்பை தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் தெற்கு கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படலாம். பெங்களூரு நகருக்கு தண்ணீர் வழங்கும் மாண்டியாவில் உள்ள டோரே கடகனஹள்ளி நீரேற்று நிலையத்தை சில கன்னட அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மாண்டியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

Also Read : பொதுசிவில் சட்டம் இந்திய வரலாற்றுக்கும், ஆன்மிகத்துக்கும் நேர் எதிரானது! ஒரே குற்றவியல் சட்டம் மட்டும் சரியா? ஜெயமோகன் விளக்கம்!

பெங்களூரு நகரின் கே.ஆர்.புரம் பகுதியில் பிரவீன் ஷெட்டி தலைமையிலான கர்நாடகா ரக்ஷண வேதிகே அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கன்னட ராஜ்ய ரய்த்தா சங்கம், அதன் தலைவர் பாடகலபுரா நாகேந்திரா தலைமையில் மைசூர் நகரில் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில் ரிட்டையர்டு அரசியல்வாதியும், கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்தவருமான இனவெறியன் வாட்டாள் நாகராஜ் கொடுத்த அறிக்கை கர்நாடகத்தை பரபரப்பாகி இருக்கிறது. “இங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள், எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பதை நான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எந்த தண்ணீரை குடிக்கிறார்கள்? அவர்கள் அதை குடிக்க வேண்டுமா வேண்டாமா?

அவர்கள் தண்ணீரை குடிக்க வேண்டும் எனில் உங்கள் நிலைப்பாட்டை மாற்றுங்கள். இல்லையெனில், ரயில்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் மூலமாக அவர்களை தமிழ்நாட்டிற்குள் அழைத்துக்கொள்ளுங்கள். காவிரி நீரை குடிக்காமல் தமிழகம் திரும்பும்படி கூறுங்கள் பார்க்கலாம். இனி வரும் நாட்கள் அவ்வளவு எளிதாக இருக்காது. தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் இது. தமிழ் படங்களுக்கு தடை விதிப்போம். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது.

Also Read : எந்தெந்தத் தேதிகளில், எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி!

காவிரி குறித்த அவரது நிலைப்பாட்டை அறிய விரும்புகிறோம். ரஜினிகாந்த் அவர்களே நீங்கள் கர்நாடகாவுக்காக நிற்பிற்களா? அல்லது தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா? என்பதை தெளிவுபடுத்துங்கள்” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பெங்களூரு ராம்நகர், மாண்டியா, பெல்லாரி, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

“காவிரி கர்நாடகாவில்தான் உற்பத்தியாகிறது. எனவே, காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம். இது தமிழகத்தின் சொத்து அல்ல. ஆனால், அவர்கள் காவிரி நீரை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என போராட்டத்தில் பேசியிருக்கிறார், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. சர்வதேச நீரியல் சட்டங்களையோ உச்ச நீதிமன்றத்தையோ கிஞ்சித்தும் மதிக்கத் தெரியாத இவர்கள் எல்லாம் தான் இந்திய ஒற்றுமையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்டுரையாளர் : ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry