பொதுசிவில் சட்டம் இந்திய வரலாற்றுக்கும், ஆன்மிகத்துக்கும் நேர் எதிரானது! ஒரே குற்றவியல் சட்டம் மட்டும் சரியா? ஜெயமோகன் விளக்கம்!

0
27
UNIFORM CIVIL CODE - Illustration by Nilanjan Das

4.45 Minute(s) Read : பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை அளித்துள்ளார். “அமெரிக்க குடிமைச் சமூகக் கலகக்காரர் காரி டேவிஸ் (Garry Davis) ‘நான் என் அறம்’ என்னும் தொகுதியில் ‘உலகம் யாவையும்’ என்னும் கதை ஒன்றை எழுதியுள்ளார். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதிக்கு அணுக்கமானவர் காரி டேவிஸ்.

இரண்டாம் உலகப்போரில் போர் விமானியாக ஜெர்மனி மீது குண்டு வீசியவர் அந்த அழிவைக் கண்டதும் மனம் மாறினார். தான் எந்த ஒரு நாட்டுக்கும் குடிமகன் அல்ல என அறிவித்தார். தன்னை உலகக்குடிமகன் என்று சொல்லிக்கொண்டார். தனக்கான பாஸ்போர்ட்டை தானே உருவாக்கிக் கொண்டார். உலகமெங்கும் அந்த பாஸ்போர்ட்டைக் கொண்டு பயணம் செய்தார். பல நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். தன் வாழ்க்கையையே தேச எல்லைகள் என்னும் கருத்துக்கு எதிரான போராட்டமாக ஆக்கிக்கொண்டார்.

காரி டேவிஸ் நமக்கு அன்னியமானவர் அல்ல. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்றும், ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றும் வாழ்ந்த ஞானிகளை போற்றும் மரபு நமக்குண்டு. இன்றும் அத்தகையோர் உண்டு. அவர்களை புரிந்துகொண்ட பண்பாடு என்பதனால்தான் நாம் காரி டேவிஸின் சொந்த பாஸ்போர்ட்டை அங்கீகரித்தோம். அவர் இந்திரா காந்திக்கு அணுக்கமானவர். தன் பாஸ்போர்ட்டைக் கொண்டே அவர் பலமுறை ஊட்டி நாராயண குருகுலத்துக்கு வந்துள்ளார்.

காரி டேவிஸ் போன்றவர்கள் எந்த குடிமைச்சட்டத்துக்கும் முழுக்கக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அந்தவகைச் சட்டங்களை மீறிச்செல்பவர்கள். நம் சித்தர்களும்தான். அந்த மீறலையும் அனுமதிக்கும் சமூகமாகவே நாம் முப்பது நூற்றாண்டுகளாக இருந்துள்ளோம். அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பார்வையே நமக்கு இருந்துள்ளது. எல்லா பிரிவினருக்கும் அவர்களுக்கான உரிமைகளை அளிக்கும் குடிமைச்சட்டம் அந்த விரிந்த பார்வையின் விளைவே.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

பொதுக்குடிமைச்சட்டம் குறித்த பார்வை அந்த உளவிரிவுக்கு எதிரானது, ஆகவே ஒருங்கிணைவுப் பார்வை கொண்ட இந்தியப் பண்பாட்டுக்கும், சமன்வயம் என்பதை அடிப்படையாக முன்வைக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் எதிரானது. ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த ஒற்றைத் தேசிய மூர்க்கத்தை இங்கே கொண்டு வந்து நிறுவும் மனநிலையையே பொதுக் குடிமைச் சட்டம் குறித்த ஆர்வம் காட்டுகிறது.

Writer Jeyamohan

முதல்பார்வையில், பொதுக் குடிமைச் சட்டம் தேவையா என்னும் கேள்வி, சட்டம் சார்ந்ததாகவோ, நிர்வாகம் சார்ந்ததாகவோ தோன்றும். அந்தத்துறை சார்ந்த நிபுணர்கள் அதற்குப் பதில் சொல்வார்கள். விவாதிப்பார்கள். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அது சட்டம் சம்பந்தமான வினா அல்ல, சில அடிப்படை அறங்கள் சார்ந்த வினா என்பதைக் காணலாம். அவற்றைப் பற்றி பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆன்மிகவாதிகள்தான்.

ஓர் அரசு என்பது என்ன? நம் உள்ளத்தில் உடனே எழும் எண்ணம், அது மேலிருந்து கீழே உள்ள குடிமக்கள் அனைவரையும் நிர்வாகம் செய்யும் ஓர் அதிகார அமைப்பு என்பதுதான். அது சமூகத்தின் ஒரு மையம் என்றே நாம் உருவகிக்கிறோம். இந்த விவாதங்களில் நிபுணர்கள்கூட அந்தக் கோணத்திலேயே பேசுகிறார்கள். அரசாங்கத்தை சமூகத்தின் நிர்வாகத் தலைமை அல்லது அதிகார மையம் என எண்ணும் கோணம் என்பது பழைய மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்தது.

Also Read : #BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!

‘மன்னன் முதற்றே மலர்த்தலை உலகம்’ என்று நாம் நெடுங்காலமாக நம்பி வந்திருக்கிறோம்.
மன்னராட்சி என்பது நிலவுடைமைக் காலகட்டத்தைச் சார்ந்தது. அந்தக் காலக்கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இது முதலீட்டியக் காலகட்டம். முதலீட்டியக் காலகட்டத்தின் உச்சகட்ட விழுமியம் என்பது மக்களாட்சிதான். மக்களாட்சியின் அடிப்படை அலகு குடிமகன். அவனுக்காகவே அரசு செயல்படுகிறது. அவன் அரசுக்கு கட்டுப்பட்டவன் அல்ல, அரசுதான் அவனுக்குக் கட்டுப்பட்டது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், சிந்தனைக்கும், ஆன்மிக நிறைவுக்கும் உரிமை உண்டு. அவற்றை உறுதி செய்யவேண்டியது அரசுதான். இந்த விழுமிய மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாமல் நாம் இந்த வினாவை எதிர்கொள்ளவே முடியாது. இன்றைய நோக்கில் சிறந்த அரசு என்பது உறுதியான ஒற்றை மையமாக இருக்க இயலாது.

சமூகம் என்பது ஒற்றைப்படையான ஒரு கட்டுமானம் அல்ல. அதில் பலநூறு தரப்புகள் உள்ளன. ஒவ்வொரு தரப்புக்கும் அவர்களுக்கான தேவைகள், பழக்கங்கள் உள்ளன. அந்த எல்லா தரப்புகளுக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியாகச் செயல்படுவதே நவீன அரசு. உண்மையில் ஒரு முதலீட்டியச் சூழலில் எந்த அரசும் அப்படித்தான் செயல்பட முடியும்.

PM MODI

அப்படித்தான் இந்திய அரசும் செயல்படுகிறது. நடைமுறையில் அது மும்பை சர்க்கரை ஆலைகளுக்கும், மகாராஷ்டிரத்தின் கரும்பு விவசாயிகளுக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியை உருவாக்குகிறது. பஞ்சு ஏற்றுமதியாளர்களுக்கும், பருத்தி உற்பத்தியாளர்களுக்கும், நெசவாலைகளுக்கும் நடுவே சமரசத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் சமரசங்களை அது செய்துகொண்டே இருக்கிறது. அந்த சமரசமே அரசாங்கம் என்னும் மையப்புள்ளியாக நமக்குத் தெரிகிறது.

ஆகவே அரசு அல்லது அரசின் தலைவர்கள் அதிகாரக் கோலை அசைத்து அனைத்தையும் தீர்மானிக்க முடியும் என எண்ணிக்கொள்வது பிழையானது. எல்லா இடங்களிலும் அரசின் அதிகாரமே செயல்படுகிறது என கற்பனை செய்துகொள்வதும் பிழையானது. அரசு தான் விரும்புவதை மக்கள்மேல் சுமத்தும் ஓரு மையம் அல்ல. மக்களில் பல தரப்பினர் உள்ளனர். அத்தனை தரப்புகளுக்கும் நடுவே பொதுவான ஒரு புரிதலை உருவாக்க வேண்டியதுதான் அதன் வேலை. அந்தப் புரிதல் உறுதியாக இருக்கையிலேயே அந்த அரசு வலிமையாக இருக்கும். அந்த நாடு இயல்பாக இயங்கும்.

அந்த அரசுக்கு என ஒரு கருத்து இருக்கும் என்றால், அது அந்த அரசைக் கைப்பற்றிய ஒரு தரப்பின் கருத்து மட்டுமே. அதை மக்கள் அனைவர் மேலும் அது சுமத்தும் என்றால் அந்த அரசு மேலோட்டமான பார்வையில் வலுவான அதிகாரத்தை செலுத்துகிறது, அடக்குமுறையை அதற்கு துணைகொள்கிறது என்று தோன்றும். ஆனால் அதன் அடித்தளம் வலுவிழக்க ஆரம்பித்துவிட்டது, நீண்டநாள் நோக்கில் அந்த நாடும் வலுவிழக்கிறது என்றே உண்மையில் பொருள்.

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா?

ஒரு நாட்டுக்கு முழுக்க ஒரே சட்டம் தேவை என்பது எவர் முடிவுசெய்தது? அது சென்ற நூற்றாண்டில் உருவான ஐரோப்பியப் பார்வை. அன்று ஒரு நாடு என்பது உறுதியான ஒரு கட்டமைப்பு என்றும், அரசு என்பது அதன் வலுவான அதிகார மையம் என்றும் ஐரோப்பியர் நம்பினார்கள். பலவகையான சர்வாதிகார ஆட்சிகளுக்கும், இரண்டு உலகப்போர்களுக்கும், வதைமுகாம்களுக்கும் பின்னர் அந்த நம்பிக்கையை அவர்களே மெல்லமெல்ல கைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாடு என்பது ஒரு நிலப்பரப்பின் மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வது மட்டுமே. அரசு என்பது அந்த ஒருங்கிணைப்பை நடத்தும் ஒரு மையம் மட்டுமே. அந்த ஒருங்கிணைப்பை உடைக்கும் ஒன்றை அந்த அரசு செய்யக்கூடாது. இன்று ஒரு தேசத்தின் ஒருங்கிணைப்பு என்பது அனைவரும் ஒன்றை ஏற்றுக்கொள்வது, அனைவரும் ஒன்றே என ஆவது வழியாக நிகழ முடியாது. அனைவரும் அவரவர் வழியில் உகந்த வாழ்க்கையை வாழும் வாய்ப்பை அளிப்பதன் வழியாகவே அந்த ஒருங்கிணைப்பு நிகழமுடியும்.

நான் மதங்களைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. சிறுசிறு பண்பாட்டுக் குழுக்களுக்கும் கூட அவர்களுக்கான பண்பாட்டுச் சுதந்திரம் அளிக்கப்படவேண்டும். ஒற்றைமையப் பார்வை பொருத்தமில்லாததாக ஆகிப்போன ஒரு காலம் இது. இன்றைய காலகட்டத்தை பன்முகப்பார்வையின் காலகட்டம் என்று வகுக்கலாம். எதிர்காலத்தில் மக்கள் சிறுசிறு பண்பாடுகளாக திரளலாம்.

தங்களுக்கான தனித்தன்மை கொண்ட வாழ்க்கை முறையை தெரிவுசெய்யலாம். இப்போதேகூட அப்படிப்பட்ட சிறிய சமூகங்கள் பல உருவாகியுள்ளன. இன்னொருவரின் வாழும் உரிமையை பறிக்காதவரை அதை அனுமதிக்கும் ஓர் அரசே தேவையானது. அதை மறுக்கும் அரசு ஒட்டுமொத்தமாக அனைவர் மேலும் அடக்குமுறையைச் செலுத்தும் அரசாக திகழவே வாய்ப்பு.

காந்தி தன் வாழ்நாள் முழுக்கச் சொல்லிக்கொண்டிருந்தது அந்த மையமற்ற அதிகாரத்தைத்தான். ஒவ்வொரு ஊரும் ஒரு தனிப் பொருளியல் அலகாக, ஒரு சிறு நாடுபோல திகழும் ஒரு தேசக் கட்டமைப்பை காந்தி கனவு கண்டார். பொதுக் குடிமைச்சட்டம் என்பது காந்தியின் அந்தக் கனவுக்கு நேர் எதிரான சர்வாதிகாரப் பார்வை கொண்டது.

அனைத்துக் குடிகளுக்கும் ஒரே குற்றவியல் சட்டம் சரியா?

பொதுவாகப் பேசப்படும் தர்க்கம் அனைத்துக் குடிகளுக்கும் ஒரே குற்றவியல் சட்டம் உள்ளதே, ஏன் குடிமைச் சட்டம் இருக்கலாகாது என்பது. குற்றவியல் சட்டம் பொதுவாகவே இருக்க முடியும். ஏனென்றால் குற்றம் என்பது ஒருவர் இன்னொருவர் மேல் இயற்றுவது. குடிமை வாழ்க்கை என்பது ஒரு பண்பாட்டுக் குழு தனக்குத்தானே செய்துகொள்வது. அந்தக் குழுவுக்குள் உள்ள வாழ்க்கை நெறி அது. அந்தக் குழு இன்னொன்றுடன் தொடர்பு கொள்ளும்போது பொதுச்சட்டம் இயல்பாக வந்துவிடுகிறது. இன்று அப்படித்தான் உள்ளது.

ஒருவர் ஒரு பண்பாட்டுக் குழுவில் இணைந்து வாழ்வது அவருடைய உரிமை. அந்தப் பண்பாட்டுக் குழுவில் இருந்து வெளியேறவும் அவருக்கு உரிமை உண்டு. அக்குழுவில் நீடிக்கையில் அந்தக் குழுவின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார். அந்த சட்டங்களுக்கு கட்டுப்படுகிறார். அது அவரது சுதந்திரம். அதை வெளியே இருந்து அரசு கட்டுப்படுத்துவது ஒற்றை மையப்பார்வையின் அடக்குமுறை.

எந்தக்காலத்திலாவது இந்தியாவில் பொதுக் குடிமைச் சட்டம் வருமா?

மதங்கள் சார்ந்த தனிச்சட்டங்களை ரத்து செய்துவிட்டால் பொதுக் குடிமைச் சட்டம் வந்துவிடுமா என்ன? இன்று இந்தியா முழுக்க பழங்குடி நிலங்களை பிறர் வாங்கலாகாது என்னும் கட்டுப்பாடு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் குடிமையுரிமைகள், சமூக உரிமைகள் சார்ந்து பழங்குடிகளுக்கு என பலவகையான தனிச்சட்டங்கள் உள்ளன.

ஏன் சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்தல், ஆட்சி ஆகியவற்றிலேயே பல தனிச்சட்டங்கள் உள்ளன. பொதுக்குடிமைச் சட்டம் பற்றிப் பேசுபவர்கள் இப்போதே நம் சமூகத்தில் அப்படி எத்தனை சட்டவிலக்குகளும் சலுகைகளும் உள்ளன என்று பார்க்கவேண்டும். பழங்குடிகளுக்கு அளிக்கப்படும் அந்தச் சலுகை எல்லாவிதமான பண்பாட்டு தனியடையாளம் கொண்ட துணைச் சமூகங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமை நெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது. அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இப்போதிருக்கும் பொதுக் குடிமைச் சட்டங்களைக்கூட கொஞ்சம் கொஞ்சமாக ரத்துசெய்து பலவகையான சட்டங்கள் கொண்ட ஒரு தொகுப்புச் சமூகமாக நாம் ஆகவேண்டும்.

அதுவே காந்தி எண்ணிய உதாரண எதிர்காலச் சமூகம். உலகம் செல்லும் திசையும் அதுவே. அனைத்தையும் ஒற்றைப்படையாக்கி, மையத்தை வலுப்படுத்தும் போக்கு என்பது இந்தியாவின் வரலாற்றுக்கும், ஆன்மிகத்துக்கும் நேர் எதிரான ஒன்று. இந்தியா என்னும் பல்லாயிரமாண்டுக்கால பண்பாட்டின் அழிவு அது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry