சாதி ரீதியாக அமைச்சர் அவமதிப்பு? அகில கேரள தந்த்ரி சமாஜம் விளக்கத்தால் பரபரப்பு!

0
26
Image Credit : Madhyamam

‘கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறிய, தீண்டாமை கொடுமை குற்றச்சாட்டில், சடங்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கோவில்களில் எந்தவொரு தனிமனிதரும், ஜாதி பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை’ என, கேரள பாரம்பரிய அர்ச்சகர்கள் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

கோட்டயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலன் சர்வீஸ் சொசைட்டி என்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அமைப்பினரின் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன், “ஒரு தொடக்க விழா தொடர்பான நிகழ்ச்சிக்காக அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் தலைமை அர்ச்சகர் விளக்கு ஏற்றுவதற்காக என்னை நோக்கி வந்தார். நான் தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் தலைமை அர்ச்சகர் அதை என்னிடம் கொடுக்கவில்லை, அவரே சென்று விளக்கை ஏற்றினார். அது அந்தக் கோவிலில் நடக்கும் சடங்கு என்று நினைத்து நான் விலகி இருந்தேன்.

Also Read : தீண்டாமை கொடுமைக்கு ஆளான அறநிலையத்துறை அமைச்சர்! இடதுசாரிகள் என்று சொல்வதற்கு வெட்கப்படுங்கள் தோழர்களே..!

பின்னர் தலைமை அர்ச்சகர் விளக்கை உதவி அர்ச்சகரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு விளக்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர்கள் எனக்கு கொடுக்கவில்லை – மாறாக விளக்கை தரையில் வைத்தனர். நான் அதை எடுத்து விளக்கை ஏற்றுவேன் என்று அர்ச்சகர்கள் நினைத்தார்கள். நான் அதை எடுக்க வேண்டுமா? உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்றேன்.” எனப் பேசினார். இது கேரளா முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

அமைச்சருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களும் குரல் கொடுத்தனர். ‘தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள பாரம்பரிய அர்ச்சகர்கள் அமைப்பான, அகில கேரள தந்திரி சமாஜம் விளக்கம் அளித்துள்ளது.

Akhila Kerala Tantri Samajam

அதில், “‘ஜாதி பாகுபாடு குறித்த அமைச்சரின் கூற்றை மறுக்கிறோம், கோயில் சடங்குகள் குறித்த தவறான புரிதலின் காரணமாக அமைச்சர் பேசியுள்ளார். கோவில்களில் தேவ பூஜை செய்யும் தந்திரிகள் எனப்படும் பாரம்பரிய அர்ச்சகர்கள், அந்த பூஜை முடியும் வரை யாரையும் தொட மாட்டார்கள். அதில், பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதோர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.

அமைச்சர் சொன்ன விழாவின் போது, கோவிலின் மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, கோவில் தந்திரி வராததால், கடைசி நேரத்தில் குத்து விளக்கு ஏற்ற வரும்படி மேல்சாந்தி அழைக்கப்பட்டார்.

மேடைக்கு வந்த அவர், குத்துவிளக்கு ஏற்றிவிட்டு பூஜையைத் தொடர வேண்டி இருந்ததால், சிறிய தீபத்தை நேரடியாக அமைச்சர் கையில் கொடுக்காமல் கீழே வைத்துள்ளார். மற்றபடி ஜாதி அடிப்படையிலான தீண்டாமை நோக்கம் இல்லை. இந்த குற்றச்சாட்டில் சடங்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கோவில்களில் எந்தவொரு மனிதருக்கும் எதிராக ஜாதி அடிப்படையில் பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை.

அந்த விழா நடந்து முடிந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்த பிரச்னையை பெரிதாக்குவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகத் தெரிகிறது. கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் அவர்கள் பிறந்த ஜாதியின் அடிப்படையில் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள். பக்தர்கள் இந்த சர்ச்சைகளுக்குள் சிக்க வேண்டாம் என்றும் சமாஜம் கேட்டுக்கொள்கிறது.”இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry