கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு கோவில் ஒன்றில் நேர்ந்துள்ள தீண்டாமைக் கொடுமை கேரளத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்தவரான ராதாகிருஷ்ணன், மிகவும் எளிய குடும்பப் பின்னணி கொண்டவர். ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் இஞ்சி, சேனைக்கிழங்கு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார். சிபிஎம் தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சியில் இவர் கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார்.
சபரிமலை உள்ளிட்ட கேரளத்தின் கோயில்களை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கோயில் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்ற அவருக்கு தீண்டாமைக் கொடுமை நடந்துள்ளதை அவரே பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
Also Read : சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு! மக்களவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா தாக்கல்!
கோட்டயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலன் சர்வீஸ் சொசைட்டி என்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அமைப்பினரின் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “ஒரு தொடக்க விழா நிகழ்ச்சிக்காக அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் தலைமை அர்ச்சகர் விளக்கு ஏற்றுவதற்காக என்னை நோக்கி வந்தார். நான் தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் தலைமை அர்ச்சகர் அதை என்னிடம் கொடுக்கவில்லை, அவரே சென்று விளக்கை ஏற்றினார். அது அந்தக் கோவிலில் நடக்கும் சடங்கு என்று நினைத்து நான் விலகி இருந்தேன்.
பின்னர் தலைமை அர்ச்சகர் விளக்கை உதவி அர்ச்சகரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு விளக்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர்கள் எனக்கு கொடுக்கவில்லை – மாறாக விளக்கை தரையில் வைத்தனர். நான் அதை எடுத்து விளக்கை ஏற்றுவேன் என்று அர்ச்சகர்கள் நினைத்தார்கள். நான் அதை எடுக்க வேண்டுமா? உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்றேன்.” என கூறியிருக்கிறார். அமைச்சருக்கு நடந்த தீண்டாமைக் கொடுமைச் சம்பவம் தற்போது வெளியில் தெரியவந்து கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் சாதியக் கொடுமைக்கு ஆளான கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன். சந்திரயான் பணியில் ஈடுபட்டவர்களை விட, சாதி அமைப்பை உருவாக்கியவர்கள் அதிபுத்திசாலிகள் என அமைச்சர் வேதனை. #kerala #Radhakrishnan #KeralaCPIM @CMOKerala @CPIMKerala pic.twitter.com/6iMEKUFeBO
— VELS MEDIA (@VelsMedia) September 19, 2023
கோவிலில், தான் பாகுபாடுகளை எதிர்கொண்டாலும், தானும் தன்னைப் போன்றவர்களும் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய பணத்தில் எந்தப் பாகுபாடும் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் ராதாகிருஷ்ணன், கோவிலில் ஏழைகள் காணிக்கையாக செலுத்தும் பணத்தில் மட்டும் எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை அந்த தலைமை அர்ச்சகர் முன்னிலையில் கூறினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சாதி ரீதியாக அவமதிக்கப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம், கடவுளின் தேசத்தில் ஒரு அமைச்சருக்கு நிகழ்ந்த சாதியக் கொடுமை..! இடதுசாரிகள் என்று சொல்வதற்கு வெட்கப்படுங்கள் தோழர்களே..! என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த மறைந்த தோழர் தா.பாண்டியன், கம்யூனிஸ்டுகளுக்குள்ளும் சாதி இருக்கிறது என்பதை வெளிப்படைத் தன்மையோடு ஒரு முறை ஒரு செவ்வியிலே ஒத்துக் கொண்டதை நானறிவேன். அது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் விதமாக கேரளாவில் அமைச்சராக, அதுவும் கோயில் சார்ந்த துறை அமைச்சராக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு ஒரு அவலம் நேர்ந்திருக்கிறது.
மொத்த கேரளத்து இடதுசாரிகளையும் வெட்கி தலைகுனிய வைத்திருக்கும் ராதாகிருஷ்ணனின் இந்த சாதி குறித்த ஸ்டேட்மென்ட், கேரளாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சாதி அமைப்பை உருவாக்கியவர்கள் அதிக புத்திசாலிகள் எனும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணனின் கூற்றை புறந்தள்ளுவதற்கு இல்லை.
சிபிஐ(எம்) மாநிலச் செயலகத்தின் உறுப்பினரும், கட்சியின் முக்கிய தலித் முகமாகவும் பார்க்கப்படும் ராதாகிருஷ்ணன், சாதி அமைப்பை உருவாக்கியவர்களுக்கு தெளிவான செயல்திட்டம் உள்ளது, மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் அது என்று கூறியிருக்கிறார்.
சாதி அமைப்பின் காலத்திற்குத் திரும்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை; சாதி அமைப்பை உருவாக்கியவர்கள் தெளிவான முன்னோக்கைக் கொண்டிருந்தனர், அது மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான். சந்திரயான் பணியில் ஈடுபட்டவர்களை விட சாதி அமைப்பை உருவாக்கியவர்கள் (அதிக)புத்திசாலிகள்’ என்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசால் நிர்வகிக்கப்படும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய (TDB) தலைவரும், சிபிஐ(எம்) தலைவருமான கே.ஆனந்தகோபாலன், வாரியத்தின் கீழ் உள்ள ஒரு கோவிலில் இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பில்லை, ஆனாலும் பிரச்சினையை ஆய்வு செய்வோம், என்று உறுதியளித்துள்ளார்.
ராதாகிருஷ்ணனின் கருத்து கேரளாவில் உள்ள சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசுக்கு தர்மசங்கடமாக பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தின் மறுமலர்ச்சி விழுமியங்களை கேள்வி கேட்கிறது. ஆனால் சாதியப் பாகுபாடு கூடாது என்பதை உள்ளடக்கிய கொள்கையின் ஒரு பகுதியாக, 2018 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் தலித் அர்ச்சகர்களை நியமித்த இடதுசாரி அரசுக்கு இது பெருத்த தோல்விதான். எதை நோக்கி போகிறது கேரளா..?” இவ்வாறு அன்வர் பாலசிங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry