சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு! மக்களவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா தாக்கல்!

0
30
Women's Quota Full Implementation By 2027: PM Says "Agni Pareeksha For MPs"

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முன்னதாக, இன்று காலை நாடாளுமன்றம் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியது. அப்போது, பழைய நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறும் முன்பாக அதன் பெருமைகள் குறித்த மலரும் நினைவுகளை தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, இன்று பிற்பகல் நாடாளுமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கியது.

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் முதல் நிகழ்வாக, சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

Also Read : எந்தெந்தத் தேதிகளில், எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி!

மசோதாவை ஆதரித்துப் பேசிய பிரதமர் மோடி, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. எனினும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேறாமல் போனது.

எனவே, அந்தக் கனவு இன்னமும் அப்படியே நீடிக்கிறது. இன்று, இதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். எனவே, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நமது அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் அதாவது மக்களவையில் 181 இடங்கள் ஒதுக்கப்படும் என்று மசோதா உறுதியளிக்கிறது. இருப்பினும், மாநிலங்களவை அல்லது மாநில மேலவைகளில் இந்த இடஒதுக்கீடு இருக்காது. மசோதா சட்டமாகி 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அமலில் இருக்கும். இந்த 181 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும். இந்த மசோதாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு எதுவும் குறிப்பிடப்படவில்லை.2027ம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஆம் ஆண்டில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையும் என்று மதிப்பிடப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : இனி இப்படி பேசக்கூடாது..! மு.க. ஸ்டாலின் முன்னிலையில், மேடையிலேயே உதயநிதியை எச்சரித்த டி.ஆர். பாலு!

ஏற்கெனவே மாநிலங்களைவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளது என்பதால், இனி மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டியது இருக்கும். திருத்தங்கள் இருப்பினும், அந்தத் திருத்தங்களுக்கு மாநிலங்களைவையில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்படும்.

மக்களவையில் இப்போது 15% குறைவான பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பல மாநிலச் சட்டசபைகளில் நிலைமை இதை விட மோசம். அங்கெல்லாம் 10%க்கும் குறைவான பெண்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். பாலின சமத்துவத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் இந்த மசோதா கடந்த 27 ஆண்டுகளாகவே நிலுவையில் இருந்து வந்தது. 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி யுபிஏ ஆட்சியில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் இந்த மசோதாவுக்கு சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது லோக்சபாவில் வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே போனது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry