ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்றிலும் நம்பர் 1! இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை!

0
38
India Become No.1 Team Across All Formats

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியானது மொஹாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடிக்க, 48.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான(ODI) தரவரிசை பட்டியலில் 117 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே டி20 (264 புள்ளிகள்), டெஸ்ட் (118 புள்ளிகள்) என இரண்டு வடிவத்திலும் முதலிடம் வகிக்கும் இந்திய அணி, தற்போது ODI-லும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

இதன் மூலம் டி20, டெஸ்ட், ODI என மூன்றிலும் முதலிடம் பிடித்திருக்கும் இந்தியா, கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவத்திலும் ஒரு அணி முதலிடத்தை பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2012-ல் தென்னாப்பிரிக்க அணி இந்த சாதனையை படைத்திருந்தது.

ODI கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் வகித்து வந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டிக்கு செல்லாததையடுத்து பாகிஸ்தான் புள்ளிகளில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் இந்தியாவிற்கு பதில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தால், ஆஸ்திரேலியா நம்பர் ஒன் ODI அணியாக மாறியிருக்கும்.

இந்நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்றால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணியும், தொடரை 2-1 என இந்தியா வென்றால் கூட பாகிஸ்தான் அணியும் முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா இந்த மைல்கல் சாதனையை தக்கவைத்து கொள்ள தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry