பொறியியல் படிக்க கணிதம், வேதியியல் கட்டாயமில்லை! புதிய விதிகளை வெளியிட்டது ஏஐசிடிஇ!

0
163

கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என்றும் வேளாண் பொறியியல் உள்பட 4 படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

2022-23 கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் பிரிவில் உள்ள 3-ல் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு, முதல் 2 செமஸ்டர்களில், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் அடிப்படை கல்வி bridge course முறையில் கற்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

வேளாண்மை, கட்டிடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், பேஷன் டெக்னாலஜி, பேக்கேஜிங் டெக்னாலஜி, உணவு, தோல் பதனிடுதல் படிப்புகளுக்கும் கணிதம் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயின்ற மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து பாலிடெக்னிக் பாடப்பிரிவுகளிலும் 2 இடங்கள் ஒதுக்கப்படும் எனவும், இதனால் பிற மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

Prof. Anil Dattatraya Sahasrabudhe, Chairman, AICTE

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே, “மற்ற பாடங்களைப் படித்தவர்களுக்கும் பொறியியல் படிப்பில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இயற்பியல், கணித பாடங்கள் கட்டாயமில்லை என்கிறோம். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் தேவை இல்லை என்று இதற்குப் பொருள் அல்ல. பெரும்பாலான பொறியியல் பட்டப்படிப்புக்கு இப்பாடங்கள் மிகவும் அவசியம் தான்.

“ஜேஇஇ, பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தும் மாநில அரசு நுழைவுத் தேர்வான சி.இ.டி-யில் தொடர்ந்து, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் அவர்களே தேர்வை நடத்தலாம். அதே போல இப்பாடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைகளையும் மேற்கொள்ளலாம்”.

“மாநில அரசுகளோ அல்லது பல்கலைகழகங்களோ இதைப் பின்பற்ற வேண்டும் என எந்த வித கட்டாயமும் இல்லை. அவர்கள் தொடர்ந்து இயற்பியல், வேதியியல் கணித பாடங்களை கட்டாய பாடங்களாக வைத்துக் கொள்ளலாம்” எனவும் அனில் சஹஸ்ரபுத்தே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏஐசிடிஇ-யின் புதிய விதிகளின் படி, மூன்றில் ஒரு பங்கு பொறியியல் பாடங்களைப் படிக்க 12-ம் வகுப்பில் கணிதம் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஏஐசிடிஇ-யின் இந்த முடிவுக்கு மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொறியியல் படிப்புகளுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்ச அறிவு தேவை என ஒரு தரப்பினரும், இந்த மாற்றங்களினால் அதிக மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர முடியும் என ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry