ஜுலை 17ல் நீட் தேர்வு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் தமிழக மாணவர்கள்!

0
104

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த ஆளுநரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.

142 நாட்களுக்கு பிறகு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினர். இது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அதே நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் நெருங்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரையில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு வரும் 2-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இந்தாண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசிடம் நீட் விலக்கு கேட்டு வற்புறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry