டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர்! இலங்கை பொருளாதார நெருக்கடி, நீட், மேகேதாட்டு குறித்து கோரிக்கை!

0
66

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகம் தொடர்பாக முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும்; மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும்; ஜி.எஸ்.டி. நிலுவை தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும்.

‘நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்; உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நதிநீர் இணைப்பு திட்டம், இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்களை கையாள்வது, பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளித்தார்.

தமிழகத்தில் டெல்டா விவசாயத்தை பாதிக்கும் வகையில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது பற்றியும் பிரதமரின் கவனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்றார். கர்நாடகாவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அதுபோல கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அங்கு அவரை சந்தித்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் குறித்து பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry