70% பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாததுதான் பள்ளிக் கல்வித்துறை தற்போதைய நிலை என்று கூறியுள்ள ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், கல்வித்துறையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில், “டிட்டோஜாக் உயர்மட்டக் குழுவின் முடிவுப்படி 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10/9/2024 தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபாட்டுடன் பங்கேற்க அறைகூவல் விடுத்திருந்தது. மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தினையும் நடத்திடச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. டிட்டோஜாக் போராட்டம் வென்றது!
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் சதவீத கணக்கை காட்டி அரசு விளம்பரம் செய்வதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஆசிரியர்கள் மத்தியில் பெரிய எழுச்சியினையும், அரசின் மீது வெறுப்புணர்வையும் தான் இந்த புள்ளி விபரங்கள் ஏற்படுத்தும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழக்கம்போல் ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்வு காண்பதாக செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்து இருக்கிறார். வழக்கம்போல் நாங்களும் வரவேற்று, தீர்வு காண்பதற்கான வழிகாணுங்கள் என்று பெரிதும் கேட்டுக்கொள்கிறோம். வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளிக்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே பின்னடைவு மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையின் பாதியை விட விஞ்சி நிற்கிறது. இந்த நிலைமையில் 70% சதவீத பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாமல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நிலை குலைந்து போய் நிற்கிறார்கள்.
93 ஆயிரம் ஆசிரியர்களில், 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தோராயமாக 80 ஆயிரம் ஆசிரியர்களில், 37500 ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறார்கள். பல்வேறு சூழ்நிலையின் காரணமாக மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, தற்செயல் விடுப்பு எடுத்துவிட்டு பள்ளிக்குச் செல்லாதவர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளார்கள். இயல்பாக ஒதுங்கியவர்கள் மாநிலம் முழுவதும் 5000 பேர் இருப்பார்கள்.
தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அவர்களது பல்வேறு நிர்வாக நெருக்கடிகள் காரணமாக எப்போதும் போராட்டத்தில் அதிகஅளவு கலந்து கொள்ளமாட்டார்கள். அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை வேறு, தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வேறாகும். மரத்தில் இருக்கும் இலைகளை எண்ணி சொல்வது போல், எப்போதோ இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையினை வைத்து புள்ளி விவரம் சொல்லக்கூடாது.
37500 ஆசிரியர்கள் பகிரங்கமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது மிகப்பெரிய வெற்றி. வேலைநிறுத்தப் போராட்டத்தினை அனைத்து ஊடகங்களும் பிரதான செய்தியாக தொடர்ந்து வெளியிட்டு பொதுமக்களிடத்திலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் கொண்டு சேர்த்துள்ளார்கள். நன்றி பாராட்டுகிறோம்.
தமிழக அரசே! தொடக்கக் கல்வித் துறையே..! சுதந்திர போராட்டத்தின் போது 30 கோடி முகமுடையாள் என்று பாரதி பாடினார். சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுடைய எண்ணிக்கை அன்று எவ்வளவு ? இருந்தது… அவர்களால்தான் சுதந்திரம் கிடைத்தது என்பதை அறியாதவர்களா? நாம்.
Also Read : ஹேர் டையில் நல்லது, கெட்டதை கண்டறிவது எப்படி? ஹெர்பல் ஹேர் டையும் சிக்கலை ஏற்படுத்துமா? Health Tips!
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஒரு செய்தியறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று. எல்லாவற்றையும் நாங்கள் வரவேற்று பாராட்டுகிறோம்.
ஆனால், தேர்தல் கால வாக்குறுதி என்னாச்சு? என்பதுதான் எங்கள் கேள்வியாக உள்ளது. 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய அளவிலான ஆசிரியர்களின் முன்னுரிமை பறிக்கப்பட்டது ஏன்? ஒன்றிய அளவில் இருந்த முன்னுரிமையினை மாநில அளவில் மாற்ற சொன்னது யார்? நீதிமன்றமே தீர்ப்பு சொல்லி இருந்தாலும்… ஆசிரியர் சங்கங்களை அழைத்து ஏன் கருத்து கேட்கவில்லை?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தான் அரசாணை 243 ஆனது 23.12.2023 அன்று வெளிவந்தது. இதை முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கூட நின்று நாங்கள் சத்தியம் செய்து சொல்கிறோம். அரசாணைக்கு நன்றி தெரிவித்த மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் புகழாரம் சூட்டினார்கள். இதனால் பதவி உயர்விலும், மாறுதல்களிலும் 90% பெண்ணாசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள், பாதிப்படைந்து வருகிறார்கள்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் பழைய ஓய்வூதியத்திட்டம் வேண்டாம் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார்களா? இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டாம், எங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது; நாங்கள் தாங்கிக் கொள்கிறோம் என்று உங்களுக்கு எதையும் எழுதிக் கொடுத்துள்ளார்களா?
ஊக்க ஊதிய உயர்வு, பின்னேற்பு அனுமதியாணை, ஈட்டிய விடுப்பு சரண் செய்தல், தலைமையாசிரியர் தேர்வு நிலைக்கு தணிக்கை தடையினை நீக்குதல், பி.லிட். பி.எட்., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தணிக்கைத் தடையினை நீக்குதல் இதைப்பற்றியெல்லாம் அரசு மனம் கோணாத அளவுக்கு நாங்கள் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டோம் என்று ஏதாவது எழுதி கொடுத்திருக்கிறார்களா? அசல் எது? நகல் எது? என்று தெரிந்து கொள்வதற்கு அனுபவம் இல்லாத அரசா இது? பொய்மான் பின்னால் போன இராமாயண கதை நமக்கு தேவையில்லை.
தொடக்கக் கல்வித்துறை நடுநிலைமையிலிருந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன் வர வேண்டும். ஒருதலை சார்பாக செயல்பாடுகளில் கரம் கோர்த்து நிற்பதை ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. செப்டம்பர் 29,30, அக்டோபர் 1, ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைத்துப் பேசி, அரசாணைகளின் மூலம் தீர்வு காண வேணுமாய் ஆட்சியின் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry