ஆசிரியர்களுக்கு ஆதரவான மனுவை திரும்பப்பெறுவதா? பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டை தேசியப் பிரச்சனையாக்க ஐபெட்டோ முடிவு!

0
904
Opposition to Consideration of TET Pass for Teachers Promotion - AIFETO | Dr. J. Kumaragurubaran, IAS., – School Education Secretary & AIFETO Annamalai

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் தகுதித் தேர்வு அவசியம் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்ற அனுமதியால் ஆசிரியர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.அதேநேரம், ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பதவி உயர்விற்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிர்ந்து போயினர். இதனை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கமான நடைமுறையான பதவி உயர்வு என்பது பணி மூப்பு, பணி முன்னுரிமை அடிப்படையில் தான் வழங்கப்பட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் நிலைப்பாடு.

Also Read : ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த தேர்தல் நடத்தை விதிகள் அனுமதிக்கிறதா? அறிவிப்பின் உள்நோக்கம்தான் என்ன என ஐபெட்டோ கேள்வி?

சி.பி.எஸ்.இ. ஆசிரியர்களுக்கு 16.03.2013 என்ற தேதியை அறிவித்து, அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தேதி குறிப்பிட்டு விலக்கு அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அவ்வாறான நிலை இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும் ஆசிரியர்கள் முறையிட்டனர். இதுதொடர்பாக கொள்கை முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பணி நியமனத்துக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்; பதவி உயர்வுக்கு டெட் கட்டாயமில்லை என ஆசிரியர்களுக்கு ஆதரவாக கொள்கை முடிவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மனுத்தாக்கல் செய்தது.

‘தமிழ்நாடு அரசின் சார்பாக பணி நியமனத்திற்கு TET தேர்ச்சியினை எடுத்துக் கொள்ளலாம், பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை பின்பற்றப்படும் நடைமுறைக்கான அரசாணைகளும் தெளிவாக உள்ளது, எனவே உச்சநீதிமன்றம் இதை பரிசீலிக்க வேண்டும்’ என பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்திருந்தது.

Also Read : ஒருதலைப்பட்சமாக எல்லையை அளக்கும் கேரளா! சலனமின்றி வேடிக்கைப்பார்க்கும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள விவசாயிகள்!

இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கு பேரிடி தரும் விதமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்று, பணி நியமனம், பதவி உயர்வில் டெட் கட்டாயம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலாளரின் முடிவுக்கு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை, முதலமைச்சருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “அரசுக்கு எதிராக ஆசிரியர்களின் உணர்வுகளை உச்சந்தொட வைக்கும் செயல்பாட்டில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீவிரம் காட்டி வருகிறார். உச்சநீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமையினை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமென மேல்முறையீடு செய்துள்ளார்கள். ஜூலை 9-ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

AIFETO Annamalai

இந்தநிலையில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த கொள்கை முடிவினை திரும்ப பெற்றுக் கொள்வதாக துறை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குறிப்பாணை தந்துள்ளார். இந்தியப் பெருநாட்டில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வரலாற்றுப் பிழையினை அவர் செய்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். பதவி உயர்வைப் பொறுத்தவரை TET தேர்ச்சி பெற்றிருந்தால் 12 ஆண்டு காலம் பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் மூத்தவராக இருப்பினும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. நீதியரசர்களுக்கு ஆகட்டும், இந்திய ஆட்சிப் பணி உட்பட அனைத்து நிலையில் இருப்பவர்களுக்கும் பணியில் மூத்தவர்களுக்கு பதவி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read : இந்தியர்களுக்கான ஆரோக்கியமான உணவு எது? சமைப்பதற்கு மண்பாண்டங்கள்தான் சிறந்ததா? மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு!

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கில், ஆசிரியர்களுக்கு ஆதரவான அரசின் கொள்கை முடிவு மனுவை திரும்பப் பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் பள்ளிக் கல்வித்துறை செயலரின் முயற்சிக்கு முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்ற காலந்தொட்டு ஆசிரியர்களுக்கு விரோதமான, பாதிப்பான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பதையும், உள்ளது உள்ளபடியே தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவான மனுவை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரும்பப்பெற்றால், வரும் ஜுன் மாதம் 9ம் தேதி ஸ்ரீநகரில் 25 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிகள் பங்கேற்கவிருக்கும் AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு எதிரான பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் செயல்பாடு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டி வரும், இதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry