மீண்டும் பள்ளிக்கல்வி ஆணையர் பதவியா? பள்ளிக் கல்வித்துறையில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதிக்க நர்த்தனம்! ஐபெட்டோ சரமாரி விமர்சனம்!

0
221
ஐபெட்டோ அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஸ்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் மீண்டும் பள்ளிக்கல்வி ஆணையர் பதவியா? என்று வினவியுள்ளார்.

மீண்டும் ஆணையர் பதவி?

மேலும், மீண்டும் பள்ளிக்கல்வி ஆணையர் பதவியைக் கொண்டுவர முதலமைச்சரிடம், நிதித்துறைச் செயலாளர் கருத்து தெரிவித்ததாக ஒரு நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநர் நியமனம் செய்த பிறகுதான், பள்ளிக் கல்வித்துறை இயக்குநரக வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டிருப்பதாகவும், மீண்டும் ஐஏஎஸ் அதிகாரியை பள்ளிக்கல்வித்துறை ஆணையராக்கினால் தான் இந்தப் போராட்டத்திற்கு தீர்வு காண முடியும் என்றும் சொன்னதாக அந்த நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது. முதலமைச்சரிடம் நிதித்துறைச் செயலாளர் சொன்னாரா? முதலமைச்சர் அதை கேட்டுக் கொண்டாரா? என்பதற்கான ஆதார அடையாளங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

ஐ.ஏ.எஸ். வந்தபிறகே போராட்ட களமாக மாறியது

பள்ளிக்கல்வி ஆணையராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி வந்த பிறகு தான், பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் ஆசிரியர் சங்கங்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதித்தார்கள். ஐஏஎஸ் அல்லாதவர்கள் இயக்குநர்களாக இருந்தபோது, டிபிஐ வளாக நுழைவுவாயில் முன்புதான் போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது என்பதுதான் வரலாறாகும்.

இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அல்லாத பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இருந்த காலத்தில், பேச்சுவார்த்தைக்கு நான்கு பேரை அழைத்து வருபவர்களைத் தவிர எவரையும் அனுமதிக்காத கட்டுப்பாடு இருக்கத்தான் செய்தது. பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவி அனுமதிக்கப்பட்டப் பிறகுதான் பல தவறுகள் தனித்துவத்துடன் நடைபெற்றுள்ளது என்பதை பட்டியலிட்டு சொல்லத் தயாராக உள்ளோம். விளக்கம் சொல்லத் தயாரா?

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி, பொதுப்பள்ளிகளை கவனிப்பதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தேர்வு வாரியத்திற்கு இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கல்வித்துறையில் எத்தனை எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள். பொதுவாக மத்திய அரசின் திட்டங்களைத் தயக்கம் காட்டாமல் அமல்படுத்தி வருபவர்கள் தான் இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதை நாடறியும்.

ஐ.ஏ.எஸ். ஆதிக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை

முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி கால பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்திற்கும், தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கும் இடைவெளி தெரிகிறது. இவர் காலத்தில்தான் பள்ளிக் கல்வித்துறையில் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் நர்த்தனமாடி வருகிறது என்பது யதார்த்தமான உண்மையாகும். எளிமையும், இனிமையான அணுகுமுறையும், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களில் தனிக் கவனம் செலுத்தி கல்விசிறந்த தமிழ்நாட்டின் பெருமையினை பாதுகாப்பதற்காக பாடுபட்டு வருவதெல்லாம் உண்மை.

ஆனால் இரண்டொரு ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி கல்வித்துறையினை நடத்தி வருகிறார்கள் என்பதும் நாட்டுக்கே தெரியும். ஆனால் முதலமைச்சரின் பார்வைக்கு இந்தச் செயல்பாடுகள் வந்துள்ளதா? என்பதை கூர்ந்து கவனித்து வருபவர்கள், அவரவர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆசிரியர்களின் மனப்போக்கை மாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பது ஔவையாரின் பெருமைக்குரிய வாக்கு. ஆனால் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை உலக நாடுகளே அறியாத புதுமையானத் திட்டம் என்பது போல முதலமைச்சரை நம்பச் செய்து ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை அன்றாடம் பாழ்படுத்தி வருகிறார்கள்.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அரசின் மீது நம்பிக்கை வைத்து, இதயப் பற்றாளர்களாக இருந்த ஆசிரியர் சமுதாயத்தை, எமிஸ் என்ற இணையதள சித்திரவதையின் மூலம் பல்முனை தாக்குதலை நடத்தி ஆட்சிக்கு எதிரானவர்களாக மாற்றிவருவது இரண்டொரு ஐஏஎஸ் அதிகாரிகள் தான் என்பதைத் திறந்த வெளியில் நின்று வெளிப்படையாக எங்களால் சொல்ல முடியும். நிதி ஒதுக்கீடு செய்து செலவுகளுக்கு வவுச்சர் தரும் திட்டமாகத்தான் இது நடந்து வருகிறது.

அமைச்சரிடம் அதிகாரத்தைக் காணமுடியவில்லை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் குடும்பத்தில் தனி அன்பு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அனால் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதிலும், ஆசிரியர் விரோத, கல்வி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை நெறிப்படுத்துகின்ற அதிகாரச் செயல்பாடுகள் எதையும் காண முடியவில்லையே என்பதை எண்ணி நாங்கள் வேதனையுறுகிறோம்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் டிட்டோஜாக் அமைப்பினை அமைத்து பேரணியை நடத்தி இருக்கிறோம்; உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்; மறியல் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி இருக்கிறோம்; டிட்டோஜாக் கோரிக்கை மாநாட்டினை, சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தி கூட்டுச் சக்தியினை வெளிப்படுத்தி இருக்கிறோம். அந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ‘என் உயிரினும் மேலான என் உடன்பிறப்புகளே’ என்று ஆசிரியர்களை அழைத்து நெஞ்சத்தினை நெகிழச் செய்த நினைவலைகள் இன்னமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன.

வாபஸ் செய்தியால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “12ஆம் தேதி காலை முதல் டிட்டோஜாக் சங்கத் தலைவர்களை சந்திப்பதற்காக காத்திருக்கிறேன். இன்று முழுவதும் அவர்களுக்காக கதவுகள் திறந்தே இருக்கும் என்று அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார்”. மாலையில் டிட்டோஜாக் கூட்டமைப்பின் 11 தலைவர்களும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து 30 அம்ச கோரிக்கைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

12 கோரிக்கைகளுக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்தது. அக்டோபர் 13ஆம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து சென்னையில் நடைபெற இருந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அலைகடலென ஆசிரியர்கள் திரண்டு வந்து கொண்டிருந்தார்கள். அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் போராட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது, வாபஸ் பெறப்பட்டு விட்டது என்று ஊடகங்கள் வாயிலைக செய்தியினை வெளியிட்டார்கள். இது, நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் தாங்கொணா அதிர்ச்சித் தகவலாக அமைந்தது.

இயக்குநர்கள் வருகையைத் தவிர்த்திருக்கலாம்

13ஆம் தேதி காலை நன்றி அறிவிப்புக் கூட்டம் என்று அறிவிக்காமல், பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக சென்னை ராஜரத்தினம் திடலில் நடைபெறும் என்று அறிவித்தார்கள். போராட்டம் இல்லை என்பதனை கேள்விப்பட்டு பலர் பயணத்தை ரத்து செய்தார்கள். வந்திருந்தவர்களை வைத்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வெட்ட வெளியில் பந்தல் போடப்பட்டு கூட்டம் நடைபெற்றது. 30 அம்ச கோரிக்கைகளில், ஒரு கோரிக்கைக்குக் கூட அரசாணை வெளியிடாத சூழ்நிலையில் விளக்கக் கூட்டம் தேவையா? புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து அறிவிப்பு எப்போது? என்றெல்லாம் பங்கெடுத்தவர்களில் சிலர் எதிர்ப்புக் குரலினை எழுப்பினார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக் கல்வி இயக்குநரும் கூட்டத்திற்கு விளக்கம் தர வந்திருந்தார்கள். கடமையை வலியுறுத்தி இயக்குநர்கள் பேசினார்கள் என்று பலர் நொந்து போனார்கள். பிறகு என்ன? போராட்டத் திட்டங்களைப் பாராட்டியா இயக்குநர்கள் பேசுவார்கள்? பொதுவாக அதிகாரிகள் வந்தால் அறிவுரைதான் வழங்குவார்கள். இது தொன்றுதொட்டு இருந்து வருகின்ற பழக்கம். இது ஒன்றும் புதிது அல்ல; இயக்குநர்கள் தங்கள் வருகையைத் தவிர்த்து இருக்க வேண்டும்.

அனுதாபம் தெரிவிக்கும் இயக்கக் கட்டிடங்கள்

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் நடத்திய இந்த விளக்கக் கூட்டத்திற்கு, பந்தல் போட்டு நாற்காலி போட்ட இரண்டு சங்கத்தினருக்கு இயக்குநர்கள் நன்றி சொன்னதைத்தான் நெஞ்சம் பொறுப்பதுமில்லை, மறக்க முயன்றாலும் மறக்க முடியவில்லை. இப்படி அவர்கள் பேசியதற்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. மேடையின் எதிரே அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் கூட எதிர்ப்பினை தெரிவிக்கவில்லை என்பதனை கேள்விப்பட்டு நாம் வேதனையுறாமல் இருக்க முடியுமா?

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இதய வலிமையைப் பெற்று விட்டார்கள் போலும். தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கென சென்னை மாநகரில் சொந்தமாக இறுமாந்து நிற்கும் இயக்க கட்டிடங்கள் சங்கத் தலைவர்களைப் பார்த்து அனுதாபத்தினை தெரிவித்துக் கொண்டிருந்தன.

அமைச்சரால் ஆசிரியர்களைத் திருப்திப்படுத்த இயலவில்லை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே!.. சங்கத் தலைவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் திருப்தி அடையச் செய்யவில்லை. தீப்பிழம்பாய்… கோபத்துடன் கோபத்தினை இன்னும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தனி அக்கறை காட்டுங்கள். அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து நம்பிக்கையினை ஏற்படுத்துங்கள்.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய 11 சங்கங்களின் தலைவர்கள் மத்தியில் பதற்றம் தான் நிலவுகிறது. நிம்மதி இல்லை என்பதை உணர முடிகிறது. வீரம் செறிந்த டிட்டோஜாக் அமைப்பால் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டத்தினைக் கூட நடத்த முடியவில்லையே… என்ற ஆசிரியர்களின் இதயக் குமுறல்கள் நம்மை நோக்கி வந்து கொண்டுள்ளன. இன்னமும் கிழட்டு சிங்கங்களின் நடமாட்டம் சங்கங்களின் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள்.

சங்கங்களே..! “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்பது பாரதியின் உணர்ச்சி மிகுந்த வரிகள். ஜாக்டீ, ஜாக்டீ-ஜியோ, ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் பெயரினை பலமுறை சொல்லி அழையுங்கள்..! நரம்புகள் முறுக்கேறி நாட்டைக் காக்க புறப்பட்ட இராணுவ வீரரைப் போல, சமுதாய நலன் காக்க புறப்படுவோரின் உணர்வுகளை பீறிட்டு எழச் செய்யும் என்ற உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆறுதலுறுகிறோம்!” இவ்வாறு அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry