வார ராசிபலன் – பங்குச் சந்தையில முதலீடு செஞ்ச பணம்…? இந்த ராசிக்காரங்க வாகனப் பயணத்தில் உஷாரா இருக்கனும்..!

0
19
Weekly Horoscope: Check Astrological prediction from October 16th to 22nd October 2023 | Image Credit : Adobe Stock

இந்த வார ராசிபலன் – அக்டோபர் 16ல் இருந்து அக்டோபர் 22வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களே வாழ்க்கை துணையையும், பெற்றோரையும் அனுசரித்து செல்ல வேண்டிய வாரம் இது. கணவனோ, மனைவியோ சொல்லும் விஷயத்தில் நியாயம் இருந்தாலும் பெற்றோரின் அறிவுரையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது என சிந்தித்து செயல்படுவீர்கள். பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் அடம்பிடித்து தங்களுக்கு வேண்டியதை உங்களிடம் கேட்டு பெற்று கொள்வார்கள். 19ந்தேதி வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.  16ந்தேதி பிற்பகல் தொடங்கி 19ந்தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழப்பமான மனநிலை உண்டாகும் என்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். நீண்டதூர பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களே நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பூர்வீக சொத்து விஷயங்கள் ஓரளவுக்கு சாதகமாக முடியும். தந்தையின் சொத்தில் பங்கு பிரிப்பதில் உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிரச்னைகள் சிகப்பு நிற கட்டடம் அதாவது காவல்நிலையத்தில் பேசி முடிவுக்கு கொண்டு வருவீர்கள். அடிக்கடி பழுதாகி தொல்லை கொடுத்த பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி புதிய வாகனம் வாங்க நேரிடும். குடியிருக்கும் வீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 19ந்தேதி பிற்பகல் தொடங்கி 21ந்தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் நண்பர்கள்,  உறவினர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களே உடலில் இதுவரை இருந்த பிரச்னைகள், நோய் பாதிப்புகள் நீங்கும். நாள்பட்ட நோய்களுக்கு மருந்து சாப்பிட்டு, இனி குணமாகாது என்று மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் தற்போது திடீரென உடலில் முன்னேற்றம் தென்படும். புதிய நம்பிக்கை பிறக்கும். நரம்பு மற்றும் வலது கண்ணில் ஏற்பட்ட நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவீர்கள். மாற்று மருத்துவம் எனப்படும் சித்தா, ஆயுர்வேதா, பிசியோதெரபி போன்றவற்றால் உங்கள் பிரச்னைகள் தீரும். மிதுன ராசியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சாதிப்பார்கள். பிள்ளைகள் வழியில் செலவுகளும் உண்டு ஆதாயமும் உண்டு. 20, 21 ஆகிய தேதிகளில் வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகள் வழியில் பண வரவு உண்டாகும். 21ந்தேதிக்கு பிற்பகலுக்கு பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் வருமானம், குடும்ப உறுப்பினர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

Also Read : பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் வசிக்க முடிவில்லை! வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? Who can’t afford to buy a house of their own?

கடகம் : கடக ராசிக்காரர்களே, கடந்த வாரம் இருந்த மனக்குழப்பம், வீண் செலவு, வருமானத்தில் தடை போன்ற சாதகமற்ற விஷயங்கள் இந்த வாரம் நடக்காது என்பதால் நீங்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம். இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் வளர்பிறை நிலையில் இருப்பதால் கெடுதல் எதுவும் நடக்காது. அதேநேரம் அஷ்டம சனியின் பாதிப்பால் நல்ல விஷயங்களும் நடைபெறாது. எந்தவொரு செயலாக இருந்தாலும் ஒருமுறைக்கு பலமுறை முயற்சி செய்த பிறகே சாதகமாக அமையும். நீங்கள் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக இருக்கும். எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நமது கொடுப்பினை அவ்வளவு தான் என்று கடந்து செல்லுங்கள். நடந்ததையே நினைத்து வருத்தப்பட்டாலும் எதுவும் மாறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 20, 21 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களே, இதுவரை தன ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் சூரியன் புதன்கிழமைக்கு பிறகு துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஐப்பசி மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் பலமிழந்து நீச நிலையில் இருப்பார் என்பதால் அடுத்த ஒரு மாதம் நீங்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துங்கள். தன்னம்பிக்கை, தைரியம் சற்று குறையும். சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் குறையும். குடும்பத்தை நினைத்து அடிக்கடி கவலைப்படுவீர்கள். முடிந்தவரை குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்தவொரு செயலிலும் மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 22ந்தேதிக்கு பிறகு கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். வருமானத்தை சேமித்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து செலவுகள் வரும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினர்களுக்காக செலவு செய்ய வேண்டிய வாரம் இது. சிலர் குடும்பத்துடன் வெளியூர் செல்வது, திரையரங்கு, கேளிக்கைகள் என உற்சாகத்திற்காக செலவு செய்து குதூகலமாக நேரத்தை செலவிடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்ப உறவுகளுக்கு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். 18, 19 ஆகிய தேதிகளில் வாழ்க்கை துணையின் ரத்த சொந்தங்களை அனுசரித்து செல்லுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. விளையாட்டாக பேசுவதாக நினைத்து அடுத்தவர் மனதை புண்படுத்திவிட்டு நீங்களும் கவலைப்பட வேண்டியிருக்கும். பெண் குழந்தைகள் வழியில் ஆதாயம் உண்டு. தாயாரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்றாலும்18, 19 ஆகிய தேதிகளில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். வாகன பயணங்களின்போது வேகம் விவேகம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

துலாம் : துலாம் ராசிக்காரர்களே, வியாபாரம், சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசக்கூட நேரமில்லாமல் வேலை வேலை என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவீர்கள். உங்களது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஒருபக்கம் பணப்புழக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் செலவுகளும் வந்து சேரும். பிள்ளைகளால் தம்பதிகள் இடையே வாக்குவாதம், கருத்து வேறுபாடு ஏற்படும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். செயற்கை முறையில் குழந்தை பாக்கியத்திற்கு முயற்சி செய்தவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 20, 21 ஆகிய தேதிகளில் பெரிய மனிதர்களால் அலைச்சல், ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருப்பதாலும் தன ஸ்தான அதிபதியான குரு ஆறில் அமர்ந்து 12ஆம் இடத்தை பார்ப்பதால் செலவுகள் அதிகரிக்கும். குரு பார்ப்பதால் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் சுப செலவுகளை செய்வீர்கள். சிலர்  மகப்பேறு சிகிச்சை, பிரசவத்திற்கு செலவு செய்ய நேரிடும். மனைவி அல்லது கணவருக்கு தங்க நகைகளை வாங்கி கொடுத்து அழகு பார்ப்பீர்கள். சிலர் சிட்டு கட்டியும், நகைக்கடைகளில் மாத தவணை செலுத்தியும் சேமித்து வைத்திருந்த பணத்தில் தங்கம் வாங்குவார்கள். இளைஞர்கள் கவுரவத்திற்காக விலையுயர்ந்த செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்குவீர்கள். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 22ந்தேதிக்கு பிறகு மனக்குழப்பம் ஏற்படும். எந்தவொரு விஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலை உண்டாகும்.

தனுசு : தனுசு ராசிக்காரர்களே, தந்தை வழி பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம், பிரச்னைகள் விலகும். நீண்ட நாட்களாக உபயோகப்படாமல் இருந்த பூர்வீக சொத்து மூலம் வருமானம் கிடைக்கும். தொலைதூர பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். பங்குச்சந்தை ஆலோசகர், அரசு ஒப்பந்ததாரர்களுக்கு அனுகூலமான வாரம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், இடைத்தரகர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எழுத்து, இயக்கம், புகைப்பட கலைஞர்கள் என கலைத்துறையில் இருப்பவர்கள் புகழடைவார்கள். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 20, 21 ஆகிய தேதிகளில் அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு  என்ற ரீதியில் இருந்தால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

மகரம் : மகர ராசிக்காரர்களே, ஜென்ம சனியின் பாதிப்பில் இருந்து மெல்லமெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், திங்கட்கிழமை முதல் சனிபகவான் வக்கிர கதியில் சதயம் நட்சத்திரத்தில் இருந்து அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உடைப்பட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியின் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும்  என்றாலும் டிசம்பர் மாதம் வரை கவனமுடன் இருக்க வேண்டும். குடும்பத்திற்குள் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். வருமானம் தடைப்படுவதுடன், கைக்கு வர வேண்டிய பணம் தாமதமாகும் என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை உண்டாகும். இளைஞர்கள் தாய் பேச்சையும், திருமணமானவர்கள் மனைவி பேச்சையும் கேட்டு நடப்பது நல்லது. இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 20, 21 ஆகிய தேதிகளில் பயணங்களின் போது கவனமாக இருங்கள். ஞாபக மறதியால் முக்கியமான பொருளை தொலைத்து விட்டு அவதிப்படுவீர்கள்.

கும்பம் : கும்ப ராசிக்காரர்களே, ஜென்ம சனியின் பாதிப்பால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருப்பீர்கள். கடன் பிரச்னை, வேலையில் சிக்கல், பொருளாதாரத்தில் நெருக்கடி, குடும்பத்தில் நிம்மதியில்லாத நிலை என ஒவ்வொரு நாளையும் மன வருத்தத்துடன் கடந்து செல்வீர்கள். கடந்த ஆறு மாதமாக கண்ணீர் விட்டு கதறும் நிலையில் உள்ள சதய நட்சத்திரக்காரர்களுக்கு திங்கட்கிழமைக்கு பிறகு ஓரளவு சுமாரான நேரம் என்று சொல்லலாம். காரணம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் பயணம் செய்த சனிபகவான் வக்கிர கதியில் பின்நோக்கி சென்று இரண்டு மாத காலம் அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இந்த காலக்கட்டம் பாலைவனத்திற்கு நடுவே சோலை வனம் போல் உணர்வீர்கள். கடந்த ஆறு மாதமாக நீங்கள் செய்த முயற்சிகளுக்கு தற்போது ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

மீனம் : மீன ராசிக்காரர்களே, பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலைகள் விலகும். மகன், மகளுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்ட நிலை தற்போது மாறும். காதல் விவகாரத்தில் சிக்கி திசை மாறி செல்லும் நிலை உண்டாகும் என்பதால் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் எஎதிர்பாலினத்தவர், பயணத்தின்போது அறிமுகமாகும் நபர்களை நம்ப வேண்டாம். ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 16, 17 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். புதிய வேலைக்கு முயற்சி செய்வது, திருமணத்திற்கு வரன் தேடுவது போன்றவற்றை தள்ளிப் போடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வங்கி, ஆசிரியர், வழக்கறிஞர் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம்.

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை 91590 13118 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பிலோ அல்லது astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கோ அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry