லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதில், நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது.
இந்தச் சூழலில், காலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி லியோ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கீரின் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார்.
அப்போது, லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Also Read : Vijay’s LEO! திரையரங்குகள் கட்டணக்கொள்ளை? சிறப்புக் காட்சிக்கு ஐகோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்!
இந்த நிலையில், இந்த மனு முதல் வழக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், ‘லியோ’ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார். 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக படத்தை 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்குமாறு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இது குறித்து பரிசீலித்து நாளை மதியத்துக்குள் தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதேபோல் திரையரங்கு உரிமையாளர்களும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், எந்தப் படத்துக்கும் காலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை. 9 மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி. அதனை மீற முடியாது. 20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை.
இடைவெளி நேரத்தை குறைத்துக் கொள்கிறோம் என படத் தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது. அதனை தியேட்டர் நிர்வாகம் தான் கூற முடியும். கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும். லியோ படத்தின் ட்ரைலர் வெளியிட்ட போது ஒரு தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது” என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கர்னல் கணேசன், “விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கூறினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். சாதாரண நாட்களில் அளிக்க முடியாது. அனைத்துப் படங்களுக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறோம்” என்று கூறினார்.
இதனிடையே நீதிபதி உத்தரவிட்டபடி பதில் மனு தாக்கல் செய்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், “லியோ அதிகாலைக் காட்சி அதாவது 4 மணி மற்றும் 7 மணி காட்சிகள் தேவையற்றது, காலை 9 மணி முதல் 5 காட்சிகள் திரையிட போதிய நேரமுள்ளது, இதுவே போதுமானது. அதிகாலை காட்சி மற்றும் சிறப்புக் காட்சிக்கு அனுமதித்தால், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று கூறியுள்ளனர்.
லியோ படத்திற்கு அனுமதியின்றி பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் லியோ படத்திற்கு ராட்சத விளம்பர பதாகை வைப்பதற்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், லியோ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லியோ படத்தின் டைட்டில் தங்களுடையது என சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நாக வம்சி தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதாவது கடந்த பத்து வருடங்களில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இருபது, முப்பது படங்களைத்தான் வெளியிட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டிருக்கிறது.
திரைப்பட கலைஞர்களைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி திரைப்படம் எடுக்க விடாமல் செய்கிறார்கள். அப்படி திரைப்படம் எடுத்தாலும் தங்களிடம்தான் கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். முழுக்க முழுக்க திரைப்படத் துறையில் சர்வாதிகாரத்தைக் கோலோச்சுகின்றனர். திமுக ஆட்சியில்தான் இவ்வாறு நடக்கிறது. எங்களுடைய ஆட்சிக்கும், அவர்களுடைய ஆட்சிக்கும் இருக்கும் வித்தியாசத்தை திரைத் துறையினர் உணர வேண்டும். ஆனால், அவர்கள் மெளனம் சாதிப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. திரைத் துறையினர் இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.” என்று கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry