அதிமுக 52-வது ஆண்டு விழாவை ஒட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வருங்கால முதல்வரே வாழ்க, பொதுச்செயலாளரே வாழ்க, தொண்டர்களின் பாதுகாவலரே வாழ்க என்பது போன்ற கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள்.
52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மறைந்த முதலமைச்சரும் கட்சியின் நிறுவனருமான எம்.ஜி.ஆர்., மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமைக் கழகத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி, மதுரை அதிமுக மாநாட்டு மற்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தபோது எதிர்பாராமல் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் உள்பட 62 தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பூத்திற்கு 19 பேர் இருக்க வேண்டும்.
ஒரு தொகுதிக்கு தோராயமாக 2000 பூத்கள் வருகின்றன. 19 பேரில் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பூத் கமிட்டி அமைப்பதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நிறைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.” என்று கூறினார்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், இன்று காலை (17.10.2023 – செவ்வாய் கிழமை), பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி, அதிமுக தலைமையகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அதனையடுத்து, கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும், எதிர்பாராத விதமாக மரணமடைந்த 8 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வீதம் 48 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கி ஆறுதல் கூறினார். பலத்த காயமடைந்த 22 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியாக தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 33 லட்சம் ரூபாயை வழங்கினார். மேலும் 27 பேரின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியாக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
அதே போல், 11.7.2022 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு வருகை தந்து வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்த ஒருவரின் குடும்பத்துக்கு குடும்ப நல நிதியுதவியாக 7 லட்சம் ரூபாயையும்; தொடர்ந்து, விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாயையும்; காயமடைந்த 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 25,000/- வீதம், 75,000/- ரூபாயையும் வழங்கினார். ஆக மொத்தம் 62 பேர்களுக்கு, 1 கோடியே 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார். நிதியுதவியை பெற்றுக்கொண்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
அடுத்த நிகழ்ச்சியாக, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சா.கலைப்புனிதன் எழுதிய “புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி ஒரு பார்வை” என்ற நூலினை வெளியிட்டார். நிகழ்ச்சிகளை, இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் தொகுத்து வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கட்சியின் 52வது ஆண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூர் வடகுப் பகுதியில், 124வது வட்ட கழகம் சார்பில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய, தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.கே. அசோக், கழகக் கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். மயிலாப்பூர் வடக்குப் பகுதி செயலாளர் கணேஷ்பாபு, 124வது வட்ட கழகச் செயலாளர் ஆர். சுரேஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry