மருந்துகள், தண்ணீர், உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்கள்! கள நிலவரத்தை விளக்கும் விரிவான பதிவு!

0
74
Wounded Palestinians wait for treatment in al-Shifa hospital in Gaza City, central Gaza Strip, after arriving from al-Ahli hospital following an explosion.

காசா முனை மீதான இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு, பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை இடிபாடுகளின் குவியலாக மாற்றியுள்ளது. தண்ணீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர். 12வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவில், கடுமையான தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை எடுக்க கடலுக்கு அருகில் கிணறுகளை தோண்ட வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். 1,400 இஸ்ரேலியர்களைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் மின்சாரத்தை துண்டித்தது. இதனால் மருத்துவமனைகள் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. அதற்கான எரிபொருளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாள்கணக்கில் அல்லாமல், மணிக்கணக்கில் மட்டுமே ஜெனரேட்டர்களை இயக்கும் அளவுக்கே எரிபொருள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!

உணவு தீர்ந்துவிட்டது, கிடங்குகள் அனைத்தும் காலியாக உள்ளன. திறந்திருக்கும் சில பல்பொருள் அங்காடிகளில், பெரும்பாலான அலமாரிகள் காலியாக உள்ளன. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. இதை ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் உறுதி செய்துள்ளது. காசாவில் மருத்துவம், உணவு மற்றும் தண்ணீருக்கான தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

Buildings damaged in Israeli attack.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு (United Nations Agency for Palestinian Refugees – UNRWA) காசாவில் வைத்திருந்த ஐந்து டிரக்கு எரிபொருளை பல்வேறு மருத்துவ வசதிகளுக்காக வழங்கியுள்ளது. பாதுகாப்புக்காக தெற்கு நோக்கிச் செல்லுமாறு கூறிய போதிலும், மக்கள் முழுமையாக வெளியேறாத நிலையில், காசாவின் தெற்கில் ஒரே இரவில் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளில் 71 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர். மக்களில் ஒருசாராரின் பிடிவாதத்தால், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்தருவது பெரும் சிக்கலாக மாறுகிறது.

வடக்கு காசாவில் உள்ள 21 மருத்துவமனைகளில் சுமார் 2,000 நோயாளிகள் உள்ளனர். இவர்களை மருத்துவமனையிலேயே வைத்திருப்பது நல்லது, அவர்களை வெளியேற்றினால், நாங்கள் அவர்களுக்கு இறப்பு சான்றிதழை வழங்குகிறோம் என்று அர்த்தம்” என்று கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய இயக்குனர் அகமது அல்-மந்தாரி வேதனையுடன் கூறுகிறார். இரண்டு வாரங்களுக்கான இரத்தம் மட்டுமே இரத்த வங்கிகளில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ரிச்சர்ட் பீபர்கோர்ன் தெரிவித்துள்ளார்.

Also Read : குடிநீர், மின்சாரம், எரிவாயு, மருந்து கிடைக்காமல் தவிக்கும் பாலஸ்தீனர்கள்! 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் வெளியேற இஸ்ரேல் கெடு!

வலி நிவாரணிகள் தீர்ந்துவிட்ட சூழலில், பேரிடர் சூழலில் மருத்துவ உதவிகளைச் செய்துவரும் சர்வதேச தன்னார்வ அமைப்பான Medecins Sans Frontieres-ன் மருத்துவர்கள், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் வலியால் அலறுவதாகவும், அடுத்தடுத்து குண்டுவீச்சு அச்சுறுத்தலை அவர்கள் எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர். டயாலிசிஸ் போன்ற அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குண்டுவீச்சால் சில மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுவிட்டன. காசா நகரத்தில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Israel-Hamas conflict deepens after Gaza hospital explosion.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடுமையான மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவும் நிலையில், காசாவில் மொத்தமுள்ள 23 அரசு மருத்துவமனைகளில் 20 மருத்துவமனைகள் ஓரளவு செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளும் சில நாள்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்று தெரிகிறது.

கிழக்கு கான் யூனிஸில், இஸ்ரேலால் தண்ணீர் விநியோகத்தை தொடங்கி இருந்தாலும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த குழாய்கள் காரணமாக தண்ணீரை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தெற்கு காஸாவின் சில பகுதிகளுக்கு செவ்வாயன்று மூன்று மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்ததாகவும், இதன் மூலம் காசாவில் உள்ள மக்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே பயனடைந்ததாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

Also Read : அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!

நீர் நுகர்வு ஒரு நாளைக்கு ஒவ்வொரு நபருக்கும் மூன்று லிட்டராக குறைந்துவிட்டது என்று (OCHA – United Nations Office for the Coordination of Humanitarian Affairs) ஐநா மனிதாபிமான அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. காசாவில் செயல்பட்டு வந்த கடல்நீரைக் குடிநீராக்கும் கடைசி ஆலையும் மூடப்பட்டு விட்டது. கடலுக்கு அருகில் கிணறுகளைத் தோண்டத் தொடங்கவும் அல்லது கழிவுநீர் மற்றும் கடல்நீரால் மாசுபடுத்தப்பட்ட காசாவின் ஒரே நீர்த்தேக்கத்திலிருந்து குழாய் நீரைப் பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நீர் மற்றும் சுகாதார சேவைகள் நலிவடைந்துவிட்டதால், நீரிழப்பு மற்றும் நீரினால் பரவும் நோய்கள் குறித்த கவலைகள் அதிகமாக உள்ளன என்று ஐ.நாவின் UNRWA அமைப்பு தெரிவித்துள்ளது. மின்சார இருட்டடிப்பு மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காசாவின் குடிநீர் ஆதாரங்களாக இருந்தவற்றை பெருமளவு பாதித்துள்ளன.

காசாவில் வசிப்பவர்கள் முக்கியமாக ரொட்டியை சாப்பிடுகிறார்கள், ஆனால் காசா பகுதியில் கோதுமை மாவு இருப்பு ஒரு வாரத்திற்குத்தான் இருக்கும் என்று ஐ.நா.வின் OCHA தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் உள்ளூர் பேக்கரிகளால் இயங்க முடியவில்லை. எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாததால் ஐந்து மாவு ஆலைகளில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது.

காசாவில் உள்ள மக்கள் கிடைக்கும் சிறிய உணவைப் பங்கிட்டு சாப்பிட்டு பசியாறி வருகின்றனர், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டுமே அவர்கள் சாப்பிடுகிறார்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உலக உணவுத் திட்டம்(World Food Programme) காசாவில் உள்ள முகாம்களுக்கு ரொட்டிகளை விநியோகித்திருந்தாலும், 2,44,000 மக்கள் எகிப்து-காசா ரஃபா எல்லையில் உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய இயக்குநர் டாக்டர் ரிச்சர்ட் பிரென்னன் கூறுகையில், “காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மக்கள் மருத்துவ வசதி, உணவு, குடிநீர் இல்லாமல் திணறி வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் காசா மக்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தப்பட வேண்டும். இது குறித்து நாங்கள் உலக நாடுகளின் தலைவர்களிடம் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவுக்கு இன்று சென்றுள்ளார். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையம் சென்று அவரை வரவேற்றார். இரு தலைவர்களும் போர் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனிடையே, 10 லட்சம் யூரோ மதிப்புள்ள உணவுப் பொருட்களை காசாவுக்கு அனுப்பிவைக்க ஸ்பெயின் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவே ஸ்பெயின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry