கியான்வாபி மசூதியை இடிக்க மாட்டார்கள் என்று என்ன உறுதி? மோகன் பாகவத்துக்கு ஓவைசி கண்டனம்!

0
184

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மோகன் பாகவத் பேச்சை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மோகன் பாகவத்தின் தூண்டுதல் பேச்சை அசட்டை செய்யக் கூடாது. பாபர் மசூதி இடிப்பு பற்றி ஒருமுறை பாகவத் பேசுகையில், வரலாற்றுக் காரணங்களுக்காக அது தேவைப்பட்டது என்று சொல்லியிருந்ஹார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பாபர் மசூதியை இடித்ததற்கு அவர் அளித்த விளக்கம் அது. அப்படியென்றால் கியான்வாபி மசூதி பிரச்சினையிலும் இதையே செய்ய மாட்டார்கள் என்று என்ன உறுதி?

கியான்வாபி மசூதி சர்ச்சை போன்ற சர்ச்சைகளில் இத்தகைய உறுதிகளை அள்ளி வீச மோகன் பாகவத், ஜெ.பி.நட்டாவுக்கு என்ன தார்மீக அதிகாரம் இருக்கிறது. அரசியல் சாசன பொறுப்பில் உள்ள பிரதமர் தானே தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். 1991 சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர் சொல்லட்டும். அப்போதுதான் இந்துத்துவாவினர் எல்லாவற்றையும் நிறுத்துவர்.

விஎச்பி உருவாகும் வரை அயோத்தி சர்ச்சை எழவே இல்லை. 1989ல் பாஜக ஒரு தீர்மானத்தின் மூலம் அயோத்தி சர்ச்சையை எழுப்பியது. ஆர்எஸ்எஸ் இரட்டை நாக்குடன் தான் எப்போதும் பேசியுள்ளது. இப்போது கியான்வாபி, காசி, மதுரா, குதுப் மினார் சர்ச்சைகளை எழுப்புவோர் அனைவருமே ஆர்எஸ்எஸ் சார்புடையவர்கள் தான்.

எல்லாவற்றையும் துறப்பது போல் காட்டிக் கொள்வது பழைய சங்க பரிவார தந்திரம். தேவையென்றால் கொண்டாடுவார்கள். இல்லாவிட்டால் சீந்தமாட்டார்கள். கோட்ஸே, சாவர்கர் உதாரணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாபர் மசூதி போராட்டத்தின்போது கூட சிலர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவோம் என்றனர். இன்னும் சிலர் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றனர். இது உணர்வுகள் சார்ந்தது என்றனர். சிலர் பாபர் மசூதி போதும் வேறெதவும் தேவையில்லை என்றனர். இன்னும் சிலர் அயோத்தி, காசி, கியான்வாபி, மதுரா தவிர வேறேதும் வேண்டாம் என்றனர்.

கோப்புப் படம்

வேறு சிலர், முகலாய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மசூதிகள் மட்டுமே எங்களின் கவனம் என்றனர். ஆனால், தெலங்கானா பாஜக தலைவர் சஞ்சய் பண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மசூதியையும் தோண்டுவோம் என்று கூறுகிறார். அவர்கள் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

இன்று நீதிமன்ற பேச்சைக் கேட்போம் எனக் கூறும் மோகன் பாகவத், பாபர் மசூதி தீர்ப்பில் அப்படி நடந்ததா என்று சொல்ல வேண்டும். ஆயிரக்கணக்கானோர் மசூதியை இடித்தனரே! அத்வானி அதை துக்கமான நாள் என்றார். ஆனால் ஃபட்நவிஸ் இன்றுவரை அதை கொண்டாடுகிறார்.

சங்க பரிவாரத்தினர் பாகவத், மோடி பேச்சுகளை கேட்பதில்லை. அந்தக் காலம் கடந்துவிட்டது. பாகவத்தும், மோடியும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தனர். ஆனால் அதன்பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டனவா? அண்மையில் ராம் நவமி ஊர்வலத்தில் கூட முஸ்லிம்கள் தாக்கப்பட்டனரே?

கோப்புப் படம்

இஸ்லாம் மதம் வெளியில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களால் இந்தியாவில் பரவியது எனக் கூறுகிறார். ஆனால் உண்மையில் இஸ்லாம் இந்தியாவுக்குள் வணிகர்கள், சான்றோர்கள், புனிதர்கள் வாயிலாகவே வந்தது. கட்டாய மதமாற்றம் என்பது பொய். பாகவத்திடம் தான் பிரச்சினை உள்ளது. நவீன இந்தியாவில் வாழ்வோர் அனைவருமே இந்தியர்கள் தான். அவர்களின் மூதாதையர் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம்.

பாகவத்துக்கு எப்போதுமே முஸ்லிம்களின் மூதாதையர்கள் இந்துக்கள் என்று நிரூபிப்பதில் தான் அதிக அக்கறை. அப்படியென்றால் நாம் எல்லோரும் 65000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை ஆராய வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களா அல்லது கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ஈரானில் இருந்து வந்தவர்களா என்பது தெரியவரும்.”
இவ்வாறு ஓவைசி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read : இஸ்லாமியர்களும் நமது வம்சாவளிதான்! வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது! மோகன் பகவத் கருத்து!

முன்னதாக நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “கியான்வாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல.
அதற்கு இப்போதைய முஸ்லிம்களோ, இப்போதைய இந்துக்களோ காரணமாக முடியாது. இது எப்போதோ நடந்த சம்பவம். இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த மதம். அடக்கி ஆள நினைத்தவர்கள் கொண்டுவந்த மதம். அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் நாட்டு மக்களை உணர்வுபூர்வமாக தாக்க தேவஸ்தானங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன.

சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது கியான்வாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது. இதைத் தான் தற்போது இந்து சமூகத்தினர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் முஸ்லிகளுக்கு எதிராக இல்லை. ஏனெனில் இப்போதைய முஸ்லிம்களின் மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக தானே இருந்தனர். ஒருசில இடங்களில் நமக்கு நம்பிக்கை இருக்கலாம். அதைப்பற்றி நாம் பேசலாம். அதற்காக தினமும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த அவசியம் என்னவிருக்கிறது. ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்.” இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry