அண்ணாமலை மீது அனல் கக்கும் செல்லூர் ராஜு! பாஜகவுக்கு சேருவது காக்கா கூட்டம்!

0
193

மதுரையில் கோரிப்பாளையம் அருகேயுள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது தொடர்பாக கேல்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, ஐ.பெரியசாமி வேறு துறை கிடைக்காத கோபத்தில் முதலமைச்சரை சிக்கலில் மாட்டி விடுகிறார். எழுவர் விடுதலை, நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, டீசல் மானியம் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக  மத்தியில் ஆட்சியில் உள்ளதால் திமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் தொடர்பான விபரங்கள் அண்ணாமலைக்கு கிடைக்கலாம். அதனடிப்படையில் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை சொல்கிறார். திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என்பதை அதிமுக நெடுங்காலமாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக தான் எதிர்கட்சி. திமுக அரசின் குற்றங்களை அதிமுக தான் அதிகமாக சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அதிமுக பேசும் பல பேச்சுக்கள் வெளியே வருவதில்லை. சினிமாவில் ஒரு சென்சார் போர்டு இருப்பது போல, சட்டசபைக்கும் ஒரு சென்சார் போர்டு உள்ளது. பொன்னையன் கட்சி வளர்ச்சிக்காக பேசியது வெளியே வந்து விட்டது. பொன்னையன் பார்வையில் பாஜகவின் செயல்பாடு அப்படி தெரிந்திருக்கலாம். கட்சி எழுச்சிக்காகவே உறுப்பினர்கள் மத்தியில் பொன்னையன் அப்படி பேசினார்.

பாஜகவை வளர்ப்பதற்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார். தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்தது போல, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது போல, தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு அண்ணாமலையும் ஏதோ அரசியல் செய்கிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம்.

தனித்த நிற்க அதிமுக தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தயார். நாளைக்கே தேர்தல் வைத்துக் கொள்ளலாம். எல்லா கட்சியும் தனித்தே போட்டி இடுவோம். அதிமுக தயார், மற்ற கட்சியினர் தயாரா? இது என்னுடைய சொந்த கருத்து அல்ல, அதிமுகவின் கருத்து. அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு வி.பி.துரைசாமி வந்துவிட்டாரா? எங்கள் மேல் யாரும் துரும்பை வீசினால், பதிலுக்கு நாங்கள் தூணை கொண்டு எறிவோம்.” இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry