வெறுப்பு வெறுப்பைத்தான் ஈன்றெடுக்கும்! நுபுர் சர்மா சர்ச்சை பற்றி ராகுல் கருத்து!

0
257

முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன.

கடைசியாக கண்டனத்தைப் பதிவு செய்த சவுதி அரேபியா, நூபுர் சர்மாவின் கருத்துகள் அவமரியாதையானவை. மற்ற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால்

இதனையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “வெறுப்பு வெறுப்பைத் தான் ஈன்றெடுக்கும். அன்பும், சகோதரத்துவமும் நிறைந்த பாதை தான் இந்தியாவை முன்னேறச் செய்யும். இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது” என்று ட்வீட் செய்துள்ளார். #BharatJodo (இந்தியாவை ஒன்றிணைப்போம்) என்ற ஹேஷ்டேகுடன் அந்த ட்வீட்டை ராகுல் பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், பாஜக செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா, முகமது நபி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். பாஜக நிர்வாகி நவீன் குமார், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டிவீட் செய்து, பின்னர் அதனை நீக்கினார்.

அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பில் சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில கடைக்காரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் வளைகுடா நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry