மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதலில் மெகா ஊழல்! முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! Bicycle Scam!

0
76
Representative Image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10,32,592 சைக்கிள்களை வாங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. மாணவர்களுக்கான சைக்கிள் விலை – ரூ. 5,279/- மற்றும் மாணவிகளுக்காக வாங்கப்படும் சைக்கிள் விலை – ரூ. 5092/-

தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் சிறப்பான பல சைக்கிள் உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஏலத்தில் போட்டி இருந்தால்தான் சிறந்த விலை கிடைக்கும். அரசு டெண்டர் என்றால் நிச்சயமாக அதிக ஏலதாரர்கள் பங்கேற்பார்கள். ஆனால், ‘சைக்கிள் சுந்தர்’ என்று அழைக்கப்படும் சுந்தர பரிபூரணம், 250 கோடிக்கு மேல் உள்ள சைக்கிள் டெண்டரில் வேறு யாரையும் பங்கேற்கவிடுவதில்லை என்று கூறப்படுகிறது.

மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதல் ஏலத்தில், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 5 ஏலதாரர்கள் பங்கேற்றனர். அசாமில் 6 ஏலதாரர்கள் போட்டியில் இருந்தனர். ஆனால், தமிழக அரசு சுந்தர பரிபூரணம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்வதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.

Also Read : உதயசந்திரன் அச்சுறுத்துகிறார்; முதல்வர் கண்டுகொள்ளவில்லை! மாநிலக் கல்விக்கொள்கை குழுவிலிருந்து விலகுகிறேன்- ஜவஹர் நேசன்

எப்படியெனில், Hero Cycles மற்றும் Avon Cycles என இரண்டு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள். சுந்தர பரிபூரணம் எப்போதும் L1 மற்றும் L2 ஆகவே இருப்பார். இதில் சுந்தர பரிபூரணம் Avon Cycles நிறுவனத்தின் டீலர் ஆவார். கொள்முதல் ஆணை இருவருக்கும் இடையில் பிரிக்கப்படும். பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்களுக்குப் பிறகு, ஹீரோ சைக்கிள், சைக்கிள்களை வழங்க முடியாது என்று கூறும்; பிறகு, எந்த டெண்டரும் இல்லாமல், கொள்முதல் ஆணையானது Avon Cyclesக்கு திருப்பி விடப்படும் என சவுக்கு இணையதளம் குறிப்பிடுகிறது.

சைக்கிள் கொள்முதலுக்கு கடந்த ஆண்டு 30% விலை உயர்வை அனுமதித்த திமுக, இந்த ஆண்டும் அதே சலுகையை அனுமதித்துள்ளது. இதனால் டீலர் லாபம் ஒரு சைக்கிளுக்கு ரூ.2140/- ஆக உயர்ந்துள்ளது. அப்படியானால் 10 லட்சத்து 32 ஆயிரத்து 592 சைக்கிள் கொள்முதல் செய்யும்போது எவ்வளவு பெரும் தொகை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே, உதயசந்திரன் போன்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள் என கூறப்படுகிறது. முதல்வரின் செயலாளர் – 2 ஆன உமாநாத் ஐ.ஏ.எஸ்.தான் டெண்டர்களை இறுதி செய்பவர். இவருக்கு முதல்வரின் செயலாளர் – 1 ஆக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.இன் பரிபூரண ஆதரவு இருக்கிறது.

சி.எம். அலுவலக உத்தரவு, சி.எம். ஆர்வமாக இருக்கிறார் என்று கூறியே இந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் சிலரும் சேர்ந்து டெண்டர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை முடிப்பதாக கூறப்படுகிறது. இந்த வகையில்தான் சைக்கிள் டெண்டரும் நடத்தப்பட்டுள்ளது. பரிபூரண சுந்தரத்திடம் இருந்து தலா 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு, டெண்டரை இறுதி செய்துள்ளதாக சவுக்கு இணையதளம் கூறுகிறது.

மத்தியப் பிரதேசம் ரூ. 3900/-, ராஜஸ்தான் 3799/-, மேற்கு வங்கம் 3,999/- என்ற விலையில் சைக்கிள்களை வாங்கியுள்ளனர். ஆனால் இது எதையுமே ஒப்பிடாமல், தமிழக அரசு ஒரு சைக்கிளை ரூ.5279/-க்கு வாங்குகிறது. பல உதிரிபாகங்களுடன் தரமான சைக்கிள் என்பதாலேயே அதிக கட்டணத்துக்கு வாங்குவதாக முதலமைச்சரிடம் உமாத் ஐ.ஏ.எஸ். கூறியதாகவும், இதைக்கேட்டு முதலமைச்சரும் டெண்டரை ரத்து செய்ய வேண்டாம் என்று சொன்னதாகவும் சவுக்கு இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.

டெண்டருக்கான குழு, பள்ளிக் கல்வி ஆணையராக இருந்த நந்தகுமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அதில், நிதித்துறை கூடுதல் ஆணையர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் டாக்டர் நந்தகோபால் ஐஏஎஸ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் சம்பத் ஐஏஎஸ், சிறுபான்மையினர் நல ஆணையர் சுரேஷ் குமார் ஐஏஎஸ், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் ஐஏஎஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அனைவருமே ஊதயசந்திரன் ஐ.ஏ.எஸ். சொல்வதை மட்டும் கேட்பவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read : நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

இந்தநிலையில், 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் ஏற்கனவே அனைவரும் அறிந்த ஒன்றுதான். உதயசந்திரன் தானாக விருப்பப்பட்டுத்தான் நிதித்துறைக்கு சென்றுள்ளார். அதேநேரம், தனக்கு மிகவும் நெருக்கமான முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-ஐ தனது இடத்தில் பணியமர்த்தச் செய்துள்ளார்.

கவனிக்க வேண்டிய அம்சமாக, பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைக்கிள் கொள்முதல் குழுவுக்கான தலைவராக இருந்த நிலையில், மிகப்பெரிய அளவு ஊழல் நடைபெற்றதாலேயே இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Courtesy – Savukku Online

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry