பள்ளிக்கல்வி ஆணையர் மாற்றத்துக்கு வரவேற்பு! ஆணையர் பணியிடத்தை ரத்து செய்யுமாறு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

0
158

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில், “தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட ஜாக்டோ- ஜியோ ஆசிரியர் இயக்கங்களின் தொடர் கோரிக்கையினை ஏற்று, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் இ.ஆ.ப.-வை, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றம் செய்திருப்பதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வரவேற்று நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களை நேரில் சந்தித்தபோது வலியுறுத்திய வேண்டுகோளினை மீண்டும் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். பள்ளிக் கல்வித்துறையில் பள்ளிக்கல்வி ஆணையர் பதவி தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
கல்வித்துறை இயக்குனர்களில் முறைப்படி வருபவர்கள் பள்ளிக் கல்வி இயக்குனராக செயல்பட வேண்டும். இந்த கருத்தைதான் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கருத்தாக பதிவு செய்து வருகிறோம். இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ முன்வைத்த வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்தில் முடிவு செய்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

Also Read : புதிதாக 25 மணல் குவாரிகள் திறப்பு! பொக்லைன் மூலம் மணல் அள்ள அனுமதி! தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்-1ஐ நேரில் சந்தித்த போதும் இதே கோரிக்கையினை வலியுறுத்தினோம். உரிய நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்கள். தனிப்பட்ட முறையில் சங்கங்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் இ.ஆ.ப. மீது எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லை. பணியேற்ற காலத்தில் இருந்ததைவிட ஆசிரியர் இயக்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக முற்றிலும் அதிகாரப்பார்வையிலிருந்து விடுவித்துக் கொண்டு பிரச்சனைகளை எல்லோரிடமும் கேட்கக்கூடிய வகையில் அணுகு முறையினை மாற்றிக் கொண்டார் என்பது எதார்த்தமான உண்மையாகும்.

ஜாக்டோ ஜியோ இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது, பள்ளிக்கல்வி ஆணையர் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்து இருந்தார்கள். முதலமைச்சருடைய அனுமதியுடன், பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை முற்றிலும் விடுவித்து, மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை தோற்றுவித்து, கல்வித்துறை இயக்குனர்களில் ஒருவரை நியமனம் செய்து நீண்டகால மரபினை நடைமுறைப்படுத்தி உதவிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தங்களை பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry