மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த நால்வர் பலி! மதுராந்தகத்தில் போலி மது குடித்த மூவர் உயிரிழப்பு! கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஆதரவு?

0
64

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ, இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ, அவர்கள் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மண்ணாங்கட்டி என்பவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். 22 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலவரம் ஏற்படாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார்குப்பத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிராம மக்கள் கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read : மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதலில் மெகா ஊழல்! முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை! Bicycle Scam!

கள்ளச்சாராய வியபாரி அமரன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்த சாராய வியாபாரியான முத்து என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது, தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது, இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன,அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன் மற்றும் சிவகுருநாதன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மரியா உள்ளிட்ட 4 பேர் டிஜிபி சைலேந்திரபாபு துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், மரக்காணத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிலர் அடையாளத்தை மறைத்து பேசியபோது, “கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பிடித்தால், விடுவிக்கக் கோரி திமுக நிர்வாகிகளே போலீசாரை வற்புறுத்துகின்றனர். அதோடு, போலீசாரை தரக்குறைவாகவும் அவர்கள் பேசுகின்றனர். இதனால் எங்களுக்கு மரியாதையும் இல்லை; பாதுகாப்பும் இல்லை.” என ஆதங்கத்தோடு பேசுகின்றனர்.

இந்த பரபரப்புக்கு இடையே, மதுராந்தகத்தில் டாஸ்மாக் மதுபானத்தின் டூப்ளிகேட் பிராண்டுகளை குடித்த மூன்று பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. Prohibition Enforcement Wing முறையாக செயல்படாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry