சுயநலத்துக்காக கூட்டணியை உடைக்கும் கரூர் கோமாளி! அண்ணாமலைக்கு அதிமுக தொண்டனின் பதிலடி!

0
198
Annamalai condemned for comments about Jayalalithaa

3 Min(s) Read: ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை கேரக்டராக தன்னை கருதிக்கொண்டு, கனவுலகில் மிதந்தபடி ஒரு கேரக்டர் தமிழ்நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதுதான் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சிஸ்டத்தை சரிசெய்ய அவதாரம் எடுத்துள்ள புத்தராகக் கருதிக்கொள்ளும் அண்ணாமலை, தன்னை இன்னமும் அதிகாரியாகவே நினைத்துக்கொண்டு, மாய உலகில் சஞ்சரிக்கிறார். இருக்கும் இடத்துக்கே நேர்மையாக இல்லாத அவர், எந்த யோக்கியதையில் புரட்சித் தலைவி அம்மா பற்றி பேசினார் எனத் தெரியவில்லை.

உடனிருந்தே கொல்லும் விஷம்போல, கல்மிஷத்துடன், மாபெரும் ஜனநாயக இயக்கமான அஇஅதிமுக பற்றி அண்ணாமலை விமர்சித்த போதெல்லாம், குரைக்கட்டும், அதனால் வேறென்ன முடியும் என்று சிறிய எதிர்வினையோடு ஒதுங்கிப்போனோம்.

ஆனால் கடவுளுக்கு ஒப்பாக ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வணங்கும் புரட்சித் தலைவி அம்மாவைப் பற்றி பேசிய பிறகு, அதானியைப் பார்த்து உங்கள் கட்சியினர் நவதுவாரங்களையும் மூடிக்கொள்வது போல, நாங்கள் கடந்துபோக முடியாது.

Also Read : அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்! பாஜக கூட்டணிக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் கருத்து!

20,000 புத்தகங்கள் படித்த அறிவிற் சிறந்த கோமாளியாகிய நீங்கள், உங்கள் கட்சியைப் பார்த்து ஊழல் பற்றி கேட்டீர்களா? (மறைந்த தலைவரைப் பற்றி விமர்சிக்கும் உங்களை கோமாளி என்று சொல்லாமல் கோமான் என்றா சொல்ல முடியும்?) பங்காரு லட்சுமணன் பற்றி நீங்கள் படித்த எந்தப் புத்தகத்திலும் இல்லையா? கர்நாடக தேர்தலுக்கு இணை பொறுப்பாளாரக சென்ற ‘Proud Kannadiga’வான உங்களுக்கு, பொம்மை அரசின் 40% ஊழல் மறந்துவிட்டதா? செலக்டிவ் அம்னீஷியாவா?

நிலக்கரி சுரங்கத் தொழிலில் அதானி குழுமத்துக்கு ஆதரவாகவும், சாதகமாகவும், அவர்களது தொழிலை லாபகரமானதாக்கும் வகையிலும் மத்திய அரசு சட்டங்களை கொண்டு வரவில்லையா? பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானிக்கு மத்திய அரசு உதவவில்லையா? கடற்கரை தாதுமணல் தொழிலிலும் அதானி குழுமம் கால்பதிக்க ஏதுவாக, 2019ம் ஆண்டில் தனியாருக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக கூறப்படுகிறதே? இது ஊழல் இல்லையா?

ஹிண்டன்பர்க் வெளிப்படுத்திய அதானி ஊழல், போர் விமானங்கள் வாங்குவதில் ரஃபேல் ஊழல், மத்திய பிரதேசத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதில் வியாபம் ஊழல், குஜராத் மாநிலத்தின் கட்ச் நகரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை, அலுமினியா  ரிஃபைனரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மோடி முதலமைச்சராக இருந்த விதிமீறி வழங்கியதில் முறைகேடு, கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் ரூ.16000 கோடி சுரங்க ஊழல், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

Also Read : டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியா முதலிடம்! சீனாவை பின்னுக்குத் தள்ளி அசத்தல்!

32 ஆண்டுகள் அதிமுக தமிழ்நாட்டை ஆண்டுள்ளது, அதில் சரிபாதி ஆண்டுகள் புரட்சித் தலைவி அம்மா ஆட்சி செய்துள்ளார். மனிதப் புனிதராகக் கருதிக்கொண்டு அவரைப் பற்றிப் பேசும் நீங்கள், பாஜக, திமுகவுடன் கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீரா? திமுக புனிதமான கட்சியா? நீங்கள் படித்த 20,000 புத்தகங்களில் தமிழக அரசியல் வரலாறு இல்லையா?

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பொதுவெளியில் சொல்வதற்கு, கரூர் கோமாளியான உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் சொன்னதைப்போல, நல்ல ஆண்மகனாக இருந்தால், டெல்லியில் அதிமுக தலைவர்கள் முன்னிலையிலேயே, அமித்ஷாவிடம், நான் இவர்களுடன் கூட்டணியாக பணியாற்ற முடியாது என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே? நேரடியாக சொல்ல தொடை நடுங்கினால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பணியாற்ற முடியாது என தலைமைக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியிருக்கலாமே? தலைமை ஏற்க மறுத்தால் பதவியை ராஜினாமா செய்வதுதானே நல்ல ஆண்மகனுக்கு அழகு.

காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை தேடித்தேடி கைது செய்வார்கள், ஆனால் நீங்களோ, குற்றவாளிகளை தேடித்தேடி கட்சியில் சேர்க்கிறீர்கள். நீங்கள் படித்த 20,000 புத்தகங்களில் இதைப்பற்றியும் இருக்கிறதா? உங்களைப் பற்றி பேச அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை என அல்லக்கை நாகராஜன் கூறியிருக்கிறார். முற்றிலும் உண்மை. அந்த அளவுக்கு நீங்கள் தகுதியானவர் இல்லை.

Also Read : பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானி! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி!

ஏனென்றால் நேர்மைக்கு நேர் எதிர்க்கோட்டில் பயணிக்கத்தான் நீங்கள் படித்த 20,000 புத்தகங்களும் சொல்லிக் கொடுத்திருக்கிறது போலும். நான் இந்து இல்லை என்கிறீர்கள், இதன் மூலம் சார்ந்திருக்கும் கட்சிக்கு நீங்கள் நேர்மையாக இல்லை. 3,4 சீட்டுக்கெல்லாம் கெஞ்சமாட்டேன் என வீரவசனம் பேசினீர்கள், அப்படியானால் உங்களை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கும் நீங்கள் நேர்மையாக இல்லை.

அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணி என்கிறார், ஆனால் நீங்களோ அரசியல்வாதி சொல்வதை தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும் என்கிறீர்கள். இது, கட்சித் தலைமைக்கும் நீங்கள் நேர்மையாக இல்லாததைக் காட்டுகிறது. தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்பட்டும் கூட, கூட்டணி தர்மத்துக்காக, மோடி பிரதமராக வேண்டும் என அதிமுக திடமாக நினைக்கிறது. ஆனால், மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

ஏனென்றால், எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாதபோது, மறைந்த கூட்டணித் தலைவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? தான் மட்டுமே பெரிய அறிவாளி என்ற நினைப்பில் அரைவேக்காட்டுத்தனமாக அவ்வப்போது அதிமுகவை விமர்சித்து, கூட்டணி என்னும் கண்ணாடியை சில்லுசில்லாக உடைத்துவிட்டீர்கள். 20,000 புத்தகங்கள் படித்தும் அறிவிலியாயிற்றே, உங்களுக்குத் தெரியாதா? எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

உங்கள் உள்நோக்கம் கமலாலய வாயிலில் கதக்களி ஆடுகிறது. சுய விளம்பரத்துக்காக ஏங்கும், சுயநலத்துக்காக எதையும் செய்யத் துணியும் உங்களது புத்தியை உங்கள் கட்சியினரே புரிந்துகொண்டு காறி உமிழ்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சுமுகமாகப் பயணித்து 3,4 எம்.பி.க்கள் கிடைத்துவிட்டால், அவர்கள் தன்னை மதிக்கமாட்டார்களோ என்ற எண்ணம் மனநோயாக மாறியதன் விளைவுதான், சிஸ்டம், ஊழல் என பிதற்றிக்கொண்டு கூட்டணியை முறிப்பதற்கான முயற்சிகளை செய்வது.

சொந்தக் கட்சிக்காரனே வேலை செய்யமாட்டான் என்பது தெரிந்ததால்தான், எம்.பி. தேர்தலில் நான் நிற்கப்போவதில்லை என ஊருக்கு முன்பாக அறிவித்தது. திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை என்று தெரிந்திருந்தும், சுயநலத்துக்காக தனது கட்சியையே சீரழிக்கும் அண்ணாமலையே, ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உங்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, அதிமுக நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகம்.

கூட்டணி இன்றி தனித்து நின்று எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற கலையையும் புரட்சித் தலைவி அம்மா எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். தமிழகக் காவலர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவிட்டால், மூட்டையை இறக்கி வைத்துவிட்டு நடக்க ஒன்றரை கோடி தொண்டர்களும் தயாராக உள்ளனர். கூட்டணி தர்மம் என்றால் என்ன என்பதை எடப்பாடியாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவிலேயே புரட்சித் தலைவி அம்மாவுக்கு இணையாக யாரும் இல்லை, அவர் ஒரு அரசியல் அரிமா. தற்குறி அண்ணாமலையே, இனிமேலும் வாயால் வடை சுட வேண்டாம்.

கட்டுரையாளர் – ‘அம்மா’ கோபி, ஊடகவியலாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry