பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானி! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி!

0
66

ஹிண்டன்பர்க் ஆய்வின் மூலம், அதானி குழுமத்துக்கும், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சிறிய அடிகார்ப்(Adicorp) என்ற நிறுவனத்துக்கும் உடனான தொடர்பு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் நடத்தப்பட்ட வணிக நிலக்கரி ஏலத்தில், அதானி குழுமம் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்தது. குறைந்த விலையில் நான்கு நிலக்கரி சுரங்கங்களை அந்நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. மராட்டிய மாநிலம் மாதேரி என்ற இடத்தில் வடமேற்கில் உள்ள சுரங்கத்துக்கான ஏலத்தில், அதானி குழுமத்தைத் தவிர்த்து, காவில் மைனிங் பிரைவேட் லிமிடெட்(Cavill Mining Private Limited) என்ற நிறுவனம் மட்டுமே பங்கேற்றது.

Also Read : சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிட முடியுமா? மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து பழிவாங்குவதாக விவசாயிகள் குமுறல்!

அதானி குழுமம், வடமேற்கு மாதேரி, புருங்கா, தாஹேகாவுன் கொவாரி, கோண்ட்பஹேரா உஜ்ஹெனி ஆகிய இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களைத்தான் ஏலத்தில் எடுத்துள்ளது. அரசுக்கான வருவாய் பங்காக, இதில் முதல் மூன்று சுரங்கங்களில் இருந்து தலா 5.5 சதவீதமும், நான்காவது சுரங்கத்தில் இருந்து 7 சதவீதமும் வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு சுரங்கங்களுக்கான ஏலத்தில், மூன்று சுரங்கங்களுக்கு, அதானி குழுமத்துக்கு எதிராக ஒரே ஒரு போட்டியாளர்தான் ஏலத்தில் பங்கேற்றார்.

scroll.in நடத்திய விசாரணையில், கேவில் மைனிங்கின் உரிமையாளர், அடிகார்ப் எண்டர்பிரைசஸில் மிக முக்கிய பங்குவகிப்பது தெரியவந்துள்ளது. அடிகார்ப் என்ற சிறிய நிறுவனம் மூலம், அதானி குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிதியை, அதானி பவருக்கு மாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனங்களுக்கு இடையே உள்ள பணப் பரிவர்த்தனைகளை மறைக்க இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம்சாட்டியுள்ளது.

Adicorp மற்றும் Cavill Mining ஆகிய நிறுவனங்கள் அகமதாபாத்தில் ஒரே முகவரியில் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அதானியின் நெருங்கிய நண்பரான உத்கர்ஷ் ஷா என்பவர்தான் தோற்றுவிப்பாளர் அதாவது Promoter. சமீபத்தில் வெளியான அதானி குழும நிறுவனர் கௌதம் அதானியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் ஷாவும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு காலமாகிவிட்ட இவரிடம்தான் Adicorp நிறுவனத்தில் 96% பங்குகள் இருந்தன. இவரது மறைவுக்குப் பிறகு, மகன் Adarsh Shah இரண்டு நிறுவனங்களின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Also Read : தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆய்வு நடந்திருக்காது! காவிரி டெல்டா புதிய நிலக்கரி திட்டம் பற்றி அன்புமணி ராமதாஸ் காட்டம்!

சுரங்க அனுபவம் இல்லாத, கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி பதிவு செய்யப்பட்ட கேவில் மைனிங் நிறுவனம், ரூ. 1 லட்சம் மூலதனத்துடன், அதானியின் துணை நிறுவனமான MH நேச்சுரல் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் உடன் மகாராஷ்டிரா மாநிலம் மாதேரிக்கான சுரங்க ஏலத்தில் போட்டியிட்டது. கேவில் மைனிங்கின் பங்கேற்பால்தான் மாதேரியின் வடமேற்கு ஏலம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏலத்தில் அதானி குழுமத்தைத் தவிர்த்து போட்டியாளர் இல்லாமல் இருந்திருந்தால், ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.

2020 ஆம் ஆண்டில், அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்கள் Adicorp நிறுவனத்திற்கு மொத்தம் ரூ. 620 கோடி கடனாக வழங்கியதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், அதானி குழுமத்தின் கடன் வழங்குநர்களின் நிதிநிலை அறிக்கைகளில் இந்த பரிவர்த்தனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவை பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதானிக்கு வட்டி இல்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான வருமானத்தை ஈட்டுவதற்கு, Adicorp நிறுவனத்துக்கு சுமார் 900 ஆண்டுகள் ஆகும் என்பதால், இந்தக் கடன் வழங்கப்பட்ட விதம் ”நிதி ரீதியாக மிகத் தவறான ஆலோசனை” என்று ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.

பின்னர், அதே நிதியாண்டில், Adicorp Enterprises, அடமானமில்லா கடன் அடிப்படையில்(unsecured basis) அதானி பவருக்கு ரூ. 610 கோடி கடனாக வழங்கியுள்ளது. “அதானி பவர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன், மற்ற நான்கு அதானி நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதியில் 98% ஆகும்.” இந்த நான்கு நிறுவனங்களில், இரண்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகும். அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவை இதில் அடக்கும் என Scroll.in தெரிவித்துள்ளது.

Also Read : அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive

ஹிண்டன்பர்க்கின் கூற்றுப்படி, அதானி குழுமம் தனது குழும நிறுவனங்களுக்கு இடையே ரகசியமாக நிதி பரிமாற்றம் செய்ய அடிகார்ப்பைப் பயன்படுத்தி சந்தை வெளிப்பாடுகளைத் தவிர்த்துள்ளது. பங்குகளின் விலைகளை உயர்த்துவதற்காக, குழும நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் உறவுகளை அதானி குழுமம் மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதானி பவரில் உள்ள தணிக்கைக் குழுவின் தலைவர், Adicorp நிறுவனத்தை தணிக்கை செய்யும் நிறுவனத்தில் நிர்வாகப் பங்குதாரராக இருந்ததாக வணிக நாளிதழான Mint தெரிவித்துள்ளது. கிரெடிட் எட்ஜ் என்ற கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியின் 2022 அறிக்கை, அதானி குழுமமும், அடிகார்ப் நிறுவனமும் “15 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான உறவைக் கொண்டுள்ளன” என்று கூறியுள்ளது.

நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகத்திற்கு 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், Adicorp நிறுனத்துக்கு, அதானி குழுமம் கடன் வழங்கியது பற்றியும் தீவிரமாக விசாரிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

With Inputs : Scroll.in

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry