இண்டேன் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் அலட்சியப்போக்கு? Vels Exclusive

0
89

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இண்டேன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மெத்தனப்போக்கே இதற்குக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில், சென்னையில் இரண்டு இடங்களிலும் செங்கல்பட்டு, சேலம், திருச்சி, மதுரை, பெருந்துறை, கோவை, நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும், புதுச்சேரியிலும் இண்டேன் சமையல் எரிவாயு நிரப்பும் மையங்கள் உள்ளன. வழக்கமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போதுதான் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

Also Read : பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானி! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி!

வழக்கமாக ஃபில்லிங் ஸ்டேஷன் எனப்படும் கேஸ் நிரப்பும் மையங்களுக்கு சிலிண்டர் எடுக்க வரும் லாரிகள், அதிகபட்சம் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். காலி சிலிண்டரை இறக்கிவிட்டு, 2 மணி நேரத்துக்குள்ளாக எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரை ஏற்றிவிடுவார்கள். இதனால் எந்தச் சிக்கலுமின்றி சிலிண்டர் விநியோகம் சீராக இருந்து வந்தது.

தற்போது காலி சிலிண்டரை இறக்கிவிட்டு ஒரு நாளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருப்பதாக லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் குளறுபடிகள் குறித்து விவரித்தார்.

“செங்கல்பட்டு ஃபில்லிங் ஸ்டேஷனில் வழக்கமாக காலி இறக்கிவிட்டு, ஃபுல் சிலிண்டர் எடுத்துச் செல்வோம். அதிகபட்சம் 2 மணி நேரம்தான் ஆகும். இப்போது, நான் காலி சிலிண்டரை இறக்கிவிட்டால், 51வது வண்டியாகத்தான் ஃபுல் சிலிண்டர் ஏற்றுகிறார்கள். இதற்கு சுமார் ஒரு நாளுக்கு மேல் ஆகிறது. 2 வாரங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்சனை உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.

ஃபில்லிங் ஸ்டேஷன் ஊழியர்களிடம் கேட்டால், புதிதாக காலி சிலிண்டர் வரவில்லை. அதனால்தான் தாமதம் ஆகிறது. மார்ச் கணக்கு முடித்தபிறகு காலி சிலிண்டர் வரும் என்றார்கள். ஆனால் மார்ச் முடிந்து 10 நாட்கள் ஆகப்போகிறது. இதுவரை பிரச்சனை சரிசெய்யப்படவில்லை. செங்கல்பட்டு ஃபில்லிங் ஸ்டேஷனுக்கு மட்டும் கிட்டத்தட்ட 40-45 ஆயிரம் காலி சிலிண்டர் வர வேண்டும். அப்போதுதான் நிலைமை சீராகும்.

Also Read : வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன? உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்!

ஏஜென்சிகளின் குடோன்களில் இருந்து காலி சிலிண்டர்கள், எக்ஸ்ட்ரா சிலிண்டர்களை எடுத்துவந்து விட்டார்கள். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடனடியாக புதிய காலி சிலிண்டர்களை அனுப்பாவிட்டால், கேஸ் புக் செய்தாலும் உடனடியாக கிடைக்காது.

இந்தப் பிரச்சனை செங்கல்பட்டு மட்டுமில்லை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஃபில்லிங் ஸ்டேஷன்களிலும் உள்ளது. இந்தியன் ஆயின் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையை தீர்க்காவிட்டால், தமிழகம் முழுவதும் இன்டேன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும்.” இவ்வாறு அந்த ஊழியர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry