சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிட முடியுமா? மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து பழிவாங்குவதாக விவசாயிகள் குமுறல்!

0
115

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் உள்ளிகோட்டை என்ற இடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், டெண்டர் அழைப்பாணை நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.ஆர்.பாண்டியன் “திட்டத்துக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடும் வரையிலும் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருந்ததை ஏற்க முடியாது. தமிழ்நாடு ஆட்சி மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிற நிலை விவசாயிகள் மத்தியில் வந்திருக்கிறது.

Also Read : இந்த டெல்டாக்காரர்தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

வீராணம் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு 2021வரையிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதி கொடுக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்து, அங்கு ஆய்வுர் பணிகள் துவங்கியது. அதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை நிறுத்த நாங்கள் போராடினால்தான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நிலை இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

திமுக அரசு மோடி அரசுக்கு ஆதரவாக இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக விவசாயிகள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர். நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிடச் சொல்வதற்குச் சமம் என்று அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மா. பிரகாஷ்

இதுபற்றி காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க துணைப் பொதுச்செயலாளர் மா. பிரகாஷிடம் பேசியபோது, “டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதையும், எந்தெந்த மாவட்டங்கள் என்பதையும் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதியே நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில், 141 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Also Read : வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன? உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்!

அப்போதே தமிழக அரசு இதைத் தடுத்திருக்க வேண்டாமா? சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி கொடுத்துவிட்டு, இப்போது திட்டத்தை நிறுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை என்னவென்று சொல்வது. விவசாயிகள் நலனை சிந்திக்காமல், மோடி அரசுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஆய்வுக்கு அனுமதி கொடுத்தார் என்றுதான் சொல்ல முடியும்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவரால்தான் ஆரம்பக்கட்ட அனுமதி தரப்பட்டது என்பதை நாங்கள் மறக்கவில்லை. 2020-ல், அதிமுக ஆட்சியில் டெல்டா வேளாண் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாதிக்கும் திட்டங்கள் வந்துவிடுமோ என்று எங்களுக்கு அச்சமாக உள்ளது.

ஏனெனில், ”மன்னார்குடி RDO வழிகாட்டுதலோடு, பெரியகுடி எண்ணெய் கிணறு தொடர்பான கலந்தாலோசனைக் கூட்ட அறிவிப்பு தமிழக அரசின் ஒப்புதலின்றி வெளியாகி இருக்குமா?
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் பகுதியை, ‘பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக’ சென்ற ஆண்டு அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராட்டம் நடத்தினோம். பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு, “அவ்வாறு அறிவித்தது தவறானது” என திரும்பப் பெற்றார். முதலமைச்சருக்கு தெரியாமல் இது எப்படி நடக்கும்?

Also Read: மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்குமான முயற்சிகளை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வருகிறது. என்.எல்.சி. விவகாரத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராடுவோரை தமிழக அரசு கைது செய்கிறது. இது மோடி அரசுக்கு இணக்கமான நடவடிக்கைதானே? எதற்காக இந்த இரட்டை வேடம்?

திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு கொள்கைப்பூர்வமாக திரும்பப்பெற வேண்டும், தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுக்காமல், நிலக்கரி சுரங்கத் திட்டத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையெனில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்” என்று அவர் கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், அரியலூருக்கு உள்பட்ட பகுதிகளில், நிலக்கரியாகவோ, நிலக்கரிக் படுகை மீத்தேனாகவோ மற்றும் நிலத்தடி நிலக்கரியை வாயுவாகவோ எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த 29.03.2023 அன்று மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்தது.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர் கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் தளிக்கோட்டை(திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யின் பூர்வீக ஊர்) ஆகிய பகுதிகள் மத்திய அரசால் குறிவைக்கப்பட்டுள்ளன.

Recommended Video

நிலக்கரி சுரங்கத்துக்கு ஒரு ஏக்கர் கூட எடுக்க முடியாது! Ma.Prakash, Cauvery Farmers Protection Union

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய இந்த 3 பகுதிகளும் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளன.

இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்கு பகுதிகள், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருகின்றன.
அதேநேரம், மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய, பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், முப்போகம் விளையும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை கொண்ட இப்பகுதியில் நிலக்கரி அகழ்வுத் திட்டம் செயல்படுத்துவதால், விவசாயம், நில வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இப்பகுதி பாலைவனமாகும் என்று விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry