பொத்தாம் பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறைகூறுவதா? சவுக்கு சங்கரை போல சமஸ் பேசலாமா?

0
961

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுவாக பத்திரிகையாளர் சமஸ் பற்றி ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுநோக்கர்கள் மத்தியில் நடுநிலையுடன், சமூக அக்கறையுடன் கூர்மையான கருத்துக்களை அனைவருடைய இதயங்களையும் தொடக்கூடிய வகையில் கருத்துப் பதிவு செய்து வெளியிடுகின்ற மிகச்சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் எண்ணம் உண்டு.

தினமணி, இந்து தமிழ் திசையில் பணியாற்றிய போது அவரது கட்டுரைகளை ஒரு முறைக்கு இருமுறை படித்து இதயத்தில் பதிவு செய்து கொள்பவர்கள் பலர் உண்டு. தேசிய அடைவுத் தேர்வு மதிப்பெண் தரவரிசையில் தமிழ்நாடு வீழ்ச்சியினை சந்தித்திருக்கிறது என்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில் “அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு..” என்ற தலைப்பில் தனது அருஞ்சொல் இணைய இதழில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

Also Read : பள்ளிகளுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீடு! குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா முன்னிலை; கோட்டைவிட்டதா தமிழ்நாடு?

தமிழ்நாட்டில் 80% பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகவே இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் அறவே இல்லாமல் இருக்கிறது. இன்னமும் கட்டமைப்பு வசதிகளும், கழிப்பிட வசதிகளும் பள்ளிகளுக்கு தேவையாகத்தான் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகு அவர்கள் இணையதளத்தித்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆசிரியர்களை பாடம் நடத்த விடுவதற்கு கொடுப்பதில்லை.

ஐபெட்டோ அண்ணாமலை

எமிஸ் போன்ற இணையதள செயல்பாடுகளினால் பள்ளிக் கல்வித்துறை, புள்ளிவிவரத் துறையாக மாறி இருக்கிறது. ஒரு கல்வி ஆண்டில் ஐந்து பாடப் புத்தகங்களை நடத்த வேண்டிய ஆசிரியர், 23 பாடப் புத்தகங்களை நடத்தி வருகிறார். ஆசிரியர் நியமனங்களே இல்லாமல் எப்படி தரமான கல்வியினை மாணவர்களுக்கு அளிக்க முடியும்? இன்னும் ஈராசிரியர் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த ஆண்டு முழுவதும் ஒரு ஆசிரியரே ஐந்து வகுப்புகளுக்கும் 23 பாடப் புத்தகங்களை நடத்த வேண்டும்.

மாணவர்களை தண்டிக்கின்ற அதிகாரம் தேவையில்லை. கடிந்து பேசுகிற நிலமையினைக் கூட இன்று ஆசிரியர்கள் இழந்து நிற்கிறார்கள். இந்த நிலைமையிலும் மாணவர்களின் கல்வி நலனில் அர்ப்பணிப்புணர்வுடன் பாடுபடுகின்ற பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மை என்ற எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தங்களைப் போன்றவர்கள் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு ஓராசிரியர் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள், ஐந்தாசிரியர் பள்ளிகளுக்குச் சென்று, அங்கு ஆசிரியர்கள் கற்பித்தல் பணியாற்றுகின்ற போது அவர்கள் படும் சிரமங்களை நேரில் பார்த்தால், நீங்கள் செய்துள்ள பதிவை உங்களையும் அறியாமல் மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்வீர்கள். ஏதோ ஒரு ஆசிரியர் சங்க நிர்வாகி சொன்னார் என்பது உங்கள் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதனையே ஒட்டுமொத்த பொதுப் பார்வைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

Also Read : #EWS! உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

எங்களைப் பொறுத்த வரையில் கடமையினை சரிவரச் செய்து உரிமையினைக் கேட்டுப் பெறக்கூடியவர்கள். நீங்கள் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகியைப் பற்றியோ அல்லது உங்களின் நண்பரைப் பற்றியோ எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் தேசியக் கல்விக் கொள்கை பற்றி அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்தி தாய்மொழி வழிக்கல்வி பற்றி விவாதம் செய்து வருகிறோம். தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியிலேயே வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

சீரமைப்பு பணிகளில் அசைந்து கொடுக்கக் கூடாது என்று சமஸ் எழுதி இருக்கிறார். என்ன அசைவு? என்ன நோக்கத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? கல்வித் துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பொதுநோக்கமான செயல்பாடு ஆகும். அதில் நாங்கள் தலையிடுவதும் இல்லை.

ஜாக்டோ ஜியோ மாநாட்டினைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடைய புலனப் பதிவுகளை எல்லாம் பார்த்த அதிகாரிகள், ஆசிரியர்களை கடுமையான விமர்சனம் செய்யும் பொறுப்பினை சவுக்கு சங்கரிடம் ஒப்படைத்து இருந்தார்கள். ஒருவார காலம் ஆசிரியர்களை சமூக விரோதிகள் போலவே சித்தரித்து அவர் பேசி வந்தார். குரு நிந்தனை உங்களை சும்மா விடாது; நீங்கள் சவுக்கு சங்கராக இருங்கள்… சரக்கு சங்கராக இருக்க வேண்டாம்; என்று பதிவு செய்திருந்தோம். ஒரு வார காலத்திற்குள் வேறு ஒரு வழக்கில் நீதியரசர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு போட்டு இப்போது சிறைச்சாலையில் இருக்கிறார். சமஸ் அவர்களை நாங்கள் அப்படி எல்லாம் பார்க்கவில்லை.

Also Watch : பள்ளி எப்படி நடக்குதுன்னு போய் பாரு | இடமாறுதல் பத்தி தெரியுமா? சவுக்கு சங்கருக்கு சவால்

சவுக்கு சங்கரைப் போன்றவர்கள் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானலும் தரக்குறைவாக பேசலாம். வேலை பார்க்க முடியாவிட்டால் வேலையை விட்டு செல்லுங்கள் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களை சமஸ் மதிக்கக் கூடியவர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து எழுதியவர். கிராமச் சூழலைக் கொண்ட சின்னஞ்சிறிய நகரமான மன்னார்குடி அரசுக் கல்லூரியில் பயின்றவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து தங்களது குழந்தைகளை அரசு மாநகராட்சி பள்ளியிலே படிக்க வைத்துக் கொண்டிருப்பவர் என்பதை எல்லாம் நாங்கள் அறிவோம். “இவ்வளவு கஷ்டம் தரும் வேலையை கட்டிக்கொண்டு ஏன் மாரடிக்கிறீர்கள்?” என்ற வார்த்தைகளை சமஸ் இடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

Also Watch : சவுக்கு சங்கரை இயக்கும் மர்ம கும்பல்..! அம்பலப்படுத்தும் மூத்த பத்திரிகையாளர்

இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் 10இல் 7 பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்கிறது யுனெஸ்கோ ஆய்வு. உலகளாவியப் போக்கு என்றாலும், நம்முடைய நிலை மேலும் மோசமான இடத்தில் இருப்பதற்கு அரசுப் பள்ளிகளின் செயல்பாடே காரணம்” என்ற கடுமையான குற்றச்சாட்டை சமஸ் கூறுகிறார். தனியார் பள்ளிகள் அதிகரிக்க நாங்களா காரணம்? மத்திய, மாநில அரசுகளின் தனியார்மயக் கொள்கை ஆதரவும், கல்வியினை வணிகமாக்குபவர்களின் பேராசையும் தான் காரணம் என்பது சமஸ் போன்றவர்களுக்குத் தெரியாதா?

அதிகாரிகள் அலுவலகப் பணியினை விட, ஆசிரியர்களை ஆய்வு செய்யும் சுற்றுப்பயணத் திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கல்வி வளர்ச்சியில் காட்டுகின்ற அக்கறையினை காட்டிலும், கற்பித்தல் அல்லாத தொண்டு நிறுவனங்கள் மீது அக்கறை காட்டி வருகிறார்கள். நினைத்தால் நெஞ்சம் பொறுப்பதில்லையே?

ஒன்றிரண்டு ஆசிரியர்களின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டு பொத்தாம் பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறைகூறுவதை விடுத்து, நாங்கள் சொல்வதைப் போல பள்ளிகளுக்கு நேரில் சென்று கற்பித்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஆசிரியர்கள் அடையும் சிரமங்களை நேரில் பார்த்து உணருமாறு உரிமை உறவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry