#EWS! உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

0
73

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ் பி பார்திவாலா மற்றும் பேலா திரிவேதி ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

Also Read : குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறியுள்ளதா? எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கோட்பாட்டை இந்த இட ஒதுக்கீடு மீறுகிறதா? இட ஒதுக்கீடு என்பது மதிப்பெண் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறதா? எனப் பல கேணத்தில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர். தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதேநேரம், கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, எஸ். பி. பார்திவாலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம், அரசியலமைப்பின் அடிப்படை கூறுகள் மீறப்படவில்லை என்று நீதிபதி பேலா திரிவேதி கூறினார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  பெரும்பான்மை நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு தரப்பானது 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கெனவே உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை தாண்டி வழங்கப்படுவது அல்ல. இது தனிப்பட்ட ஒதுக்கீடு என்று விளக்கமளித்தது. இதற்காக கல்வி நிறுவனங்களில் 25% இடங்களை அதிகரிப்பதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry