தமிழிலும் அரசாணை வெளியிட வேண்டும்! துறைவாரியாக அமைச்சர் ஆய்வு செய்வது அவசியம்! ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

0
292

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளும் ஐஏஎஸ் அதிகாரிகளை முழுவதும் மையப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து உணர்ந்து வருகிறோம்.

இருப்பினும் நமது பள்ளி கல்வித் துறையைப் பொறுத்த வரையில் முற்றிலும் அவரவர்கள் தன்னாட்சி அதிகாரங்களை பெற்றதைப்போல் செயல்பட்டு வருவது வேதனை உணர்வினைத் தருகிறது. எந்த ஆட்சிக் காலத்திலும் நிர்வாக மாறுதல் தவிர்க்க இயலாததாக இருந்தாலும், மாறுதல் அனைத்திற்கும் முழு சுதந்திரம் கொடுத்து நடத்தி விட்டோம்.

வா. அண்ணாமலை

கருணை அடிப்படையில் உள்ள மாறுதலுக்கு வேண்டுமானால் முக்கியத்துவம் கொடுக்கலாமே தவிர, கலந்தாய்வில் பெற்ற பெயரினை மறைக்கக் கூடிய வகையில் எண்ணிக்கை பெருகாமல் நெறிப்படுத்த பெரிதும் கேட்டுக்கொள்கிறோம். தொடக்கக் கல்வித்துறையினைப் பொறுத்த வரையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், அந்த காலிப் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்காக ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் கூட ஒருவர் காத்துக் கொண்டிருப்பார்.

அந்த இடத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெற்று முடிந்த பிறகு இன்னொருவருக்கு நாம் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மாறுதல் செய்தால் அந்த ஒன்றியத்தில் காத்துக் கொண்டிருப்பவர் பதவி உயர்வுக்கு வாய்ப்பின்றி பாதிக்கப்படுகிறார். வெளிப்படையான மாறுதல் கொள்கையிலும் பின்னடைவினை நோக்கி நாம் சென்று கொண்டிருப்போம்.

தொடக்கக்கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு உடனடியாக பதவி உயர்வு அளிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் 1747 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்து, வீட்டுக்கு அனுப்பும் முடிவினை கருணை அடிப்படையிலும், கனிவுடனும் மறுபரிசீலனை செய்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை.

முறையாக தகுதித் தேர்வு நடைபெற்று இருந்தால் 20 தகுதித் தேர்வுகள் இதுவரை நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஐந்து தகுதித் தேர்வுகள்தான் நடைபெற்று முடிந்துள்ளது. ஆகையால் இதையே காரணமாக எடுத்துக்கொண்டு முதலமைச்சரின் கனிவான பார்வைக்கு கொண்டு சென்று இவர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வினை நடத்துவதற்கு வாய்ப்பளித்திட வேண்டுகிறோம்.

Also Read : தன்னாட்சி பெற்றுவிட்டதா பள்ளிக் கல்வித்துறை? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர் கூட்டணி!

கொள்கை ரீதியாக இருமொழிக் கொள்கையினை பின்பற்றுவது போல், அரசாணை வெளி வருவதிலும் நாம் இருமொழிக் கொள்கையினைப் பின்பற்ற வேண்டும். அரசாணை :151, நாள்: 09.09.2022 முற்றிலும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். பெயர்முன்னெழுத்து, கையொப்பம் என எல்லாவற்றிலும் தமிழை முன்னிலைப்படுத்தி அரசாணை வெளியிட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை, இனிவரும் காலங்களில் வெளியிடக்கூடிய அனைத்து அரசாணைகளையும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டுமென பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சட்டப்பேரவை நடைபெறுகின்ற பொழுது அதை அலட்சியப்படுத்தி விட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மண்டல ஆய்வுக்காக வெளியில் சென்ற நிகழ்ச்சி, எந்த ஆட்சி காலத்திலும் நடைபெறாத வரலாற்றுப் பிழையினை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது என்பதை எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

மண்டல ஆய்வுக் கூட்டத்திற்கு காட்டுகின்ற ஆர்வத்துடன், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து இரண்டு மாத காலமாகியும் அவர்களுக்கு திபாவளிக்குக் கூட ஊதியம் வழங்காமல் இருக்கின்றோம் என்பதனை பள்ளிக்கல்வித்துறை கவனம் காட்ட ஏன் முன்வரவில்லை?

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

எண்ணும் எழுத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், எமிஸ் பணிகளில் காட்டக்கூடிய முக்கியத்துவம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவம் இவற்றையெல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து கல்வித் துறை அலுவலர்களை அழைத்து தீர்வு காணக்கூடிய வகையில் மேல்முறையீடுகள் அதிகம் உள்ள முக்கிய பிரச்சனைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துறை வாரியாக ஆய்வு செய்ய முன்வந்தால், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் மத்தியிலும் இழந்துவரும் பற்றுதலினை மீண்டும் பெறுவதற்கும், முதலமைச்சர் தலைமையில் நடந்து வரும் ஆட்சிக்கு மீண்டும் நல்லெண்ண உணர்வினை வளர்த்தெடுக்கும் என்பதனை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் உரிமை உறவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry