தன்னாட்சி பெற்றுவிட்டதா பள்ளிக் கல்வித்துறை? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர் கூட்டணி!

0
1461

இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்கள். ஆனால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை புறந்தள்ளிவிட்டு, பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் 18,19 ஆகிய தேதிகளில் மண்டல அளவிலான ஆய்வை திட்டமிட்டபடி நடத்தி வருகிறார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குனர் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை இயக்குனர்களும், இணை இயக்குனர்களும் இந்த மண்டல ஆய்வில் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியவே இல்லையா?

நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாட்டில் அனைத்து கட்சி ஆட்சியிலும், நீண்ட நாள் நடைபெறும் நிதி நிலை கூட்டத் தொடராக இருந்தாலும், குறுகிய நாள்கள் நடைபெறும் கூட்டத் தொடராக இருந்தாலும் கேள்வி நேரத்தின் போது ஏதாவது கேள்விகள் வந்தால் நம்முடைய துறை சார்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று துறைத்தலைவர்கள் தலைமையிடத்தில் தங்கி இருப்பார்கள்.

வா. அண்ணாமலை

ஆனால் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் தன்னாட்சி நிர்வாகத்தை பெற்றுவிட்டதைப் போல் தனித்து இயங்குவதை எங்களைப் போன்ற மூத்த தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆட்சியை அலட்சியப்படுத்துகிறார்களா? அல்லது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை அலட்சியப்படுத்துகிறார்களா? இந்த மண்டல ஆய்வுக் கூட்டத்தை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளக் கூடாதா? பள்ளிக்கல்வித்துறையில் தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றனவே.

பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில்தான் பள்ளிக்கல்வித்துறை இயங்கி வருகிறது. எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகத்தின் லோகோவில் இரட்டை இலை சின்னம் பம்பரமாய் சுழன்று மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் வலம் வந்து கொண்டுள்ளது. புத்தகத்தில் காவி நிறம் வெளிப்படையாக தெரிகிறது. பள்ளிக்கல்வி ஆணையர் தனித்தன்மையுடன் எதையும் செய்யமுடியும் என்று எண்ணுகிறாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை.

Also Read : எண்ணும் எழுத்தும் பாடப்புத்தக அட்டையில் இரட்டை இலை சின்னம், காவி வண்ணம்! அதிகாரிகள் திட்டமிட்டு வெளியிட்டனரா என கேள்வி?

ஆசிரியர்களிடம் கல்வித்துறை கேட்கிற புள்ளிவிவரங்களை போல நாங்கள் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து சில புள்ளி விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறோம். EMIS இணையதள பணியில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? அவர்களுடைய ஊதியம் என்ன? அவர்களுடைய கல்வித்தகுதி என்ன? அவர்கள் என்னென்ன பணிகளை செய்து வருகிறார்கள்? என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

கல்விக்கு பாதுகாப்பு பள்ளிக்கல்வித்துறை, கல்வி நலனுக்கு பாதுகாப்பு ஆசிரியர்கள். பள்ளிக் கல்வித்துறையின் மீதும் நம்பிக்கை இல்லாமல், பாடம் நடத்தக் கூடிய ஆசிரியர்களின் மீதும் நம்பிக்கை இல்லாமல், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தை நம்புகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையில் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தினரின் பணிகள் என்னென்ன? அவர்களுக்கு என்னென்னவெல்லாம் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளது? அவர்கள் யார்? யார்?

அரசுப்பள்ளிகளில் நிர்வாகத்தினை பார்வையிட பல்வேறு அளவில் அலுவலர்கள் இருக்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மண்டல ஆய்வு கூட்ட நிகழ்வுகளில் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாமல், அரசுசாரா நிறுவனங்களில் இருந்து, ஒப்பந்த முறையில் (அவுட் சோர்சிங்) வெளியில் உள்ளவர்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை பணிகளை எல்லாம் பார்வையிடுவதற்கும், ஆய்வு செய்வதற்கும், சீனியர் பெல்லோஷிப், ஜுனியர் பெல்லோஷிப் என நியமனம் செய்து மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளார்கள்.

இவர்கள் யார்?, எந்தெந்த கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்? அவர்களுடைய ஊதியம் என்ன? அவர்களுடைய அதிகாரங்கள், பணிகள் என்னென்ன? என்பதை வெளிப்படைத்தன்மையுடன் எங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டுகிறோம்.

Also Read : சசிகலாவை குற்றம் சுமத்தும் ஆறுமுகசாமி ஆணையம்! ஜெ.வைக் காப்பாற்றியிருக்க முடியும்! பரபரப்புத் தகவல்கள்!

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்தை பார்வையிடுவதற்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நேரடியாகவே தலைமை ஆசிரியர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தை கூட்டுங்கள். நாங்கள் பார்வையிட வருகிறோம். என்று ஆணையிடுகிறார்கள். நீங்கள் யார்? உங்களுடைய பணி என்ன? என்று அலைபேசியில் நமது தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, எங்களை சுதன் நியமனம் செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

திட்ட இயக்குனர் என்று சொல்வதற்குக் கூட பக்குவம் இல்லாதவர்களை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிடுவதற்கு நியமனம் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட வருகை தந்திருக்கிறார். தலைமையாசிரியரிடம் நான் SMC கூட்டத்தை பார்வையிட சிறப்பு பார்வையாளராக வந்துள்ளேன் என்று கூறியதும், ஆட்டோ ஓட்டுனர் மேயராக இருக்கின்ற பொழுது நீங்கள் தாராளமாக வந்து பார்வையிடலாம் என்று எங்களுடைய தலைமையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

Also Watch : தண்ணீருக்கும் கேன்சருக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு! Powerful Truth about Cancer | Listen Fully

பள்ளிக் கல்வித்துறையில் அத்தனை செயல்பாடுகளும் EMIS இணையதள வழியாகத்தான் நடைபெறுகிறது. இந்த SMC கூட்டங்களை பார்வையிடும் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சிறப்புப் பார்வையாளர்கள் யாரெல்லாம் என்பதனையும், அவர்களின் கல்வித்தகுதி, பொறுப்புகள் போன்ற விவரங்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றினால் தான் அவர்கள் யாரென்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடியும். நாங்களும் அவர்கள் வந்து பார்வையிட்ட விவரங்களை EMISஇல் பதிவேற்றம் செய்ய முடியும்.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கு எந்தெந்த வடிவங்களில் எல்லாம் மன அழுத்தத்தைக் கொடுக்க முடியுமோ? அந்தந்த வழிகளிலெல்லாம் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். எந்த அளவுக்கு எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமோ? அந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள். மாரடைப்பு மரணங்கள் எண்ணிக்கை மாதந்தோறும் பெருகி வருகிறது. விருப்ப ஓய்வில் செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக எழுதி கொடுத்து வருகிறார்கள்.

இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை சுட்டிக்காட்டியும், அவர் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார். ஐஏஎஸ் அதிகாரிகள் மிக தைரியமாக ஆசிரியர் சமுதாயத்திற்கு எதிராக தொடர்ந்து கொடுமைகளை செய்து வருகிறார்கள்.

Also Watch : பள்ளிக் கல்வித்துறையின் கொடுங்கோல் கொள்கை..! ஐபெட்டோ அண்ணாமலை

எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள முன்வருகிறோம்! பள்ளிக்கல்வித்துறை சுயபரிசோதனை செய்து மாற்றம் ஏற்பட்டால், எங்களின் நிலைமையும் மாறும். அறச்சீற்றம் மட்டுமல்ல எங்களை பாதுகாத்துக்கொள்ள ஆட்சிக்கு எதிராக தீவிரப் போராட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை எங்களை தூண்டிவிடுவது போல் உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆட்சிக்கு எதிராக ஆசிரியர்கள் திரண்டு எழ வேண்டும் என்பதற்காக, உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இந்த பள்ளிக் கல்வித் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள் என, முதலமைச்சர் நுண்ணறிவு பிரிவின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry