எண்ணும் எழுத்தும் பாடப்புத்தக அட்டையில் இரட்டை இலை சின்னம், காவி வண்ணம்! அதிகாரிகள் திட்டமிட்டு வெளியிட்டனரா என கேள்வி?

0
1526

இதுகுறித்து ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் எண்ணும் எழுத்தும் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

ஒன்று முதல் மூன்று வகுப்பு ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி உரியதாக இருந்தாலும், 4,5 வகுப்பு பாடம் நடத்தக் கூடிய ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்று இருந்தார்கள். படங்களை காட்டி மட்டும் பாடத்தை நடத்துவதைத் தவிர்த்து, பாட நூலினை வைத்து பாடம் நடத்த வேண்டும். எழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.

கரும்பலகை பயன்பாடு இருக்க வேண்டும், வாசிப்பு பயிற்சி இருக்க வேண்டும் என்பது போன்ற மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து தெரியப்படுத்தி வந்தோம்.
பயிற்சி வகுப்பில் பாடநூலினைப் பயன்படுத்துதல், எழுத்துப் பயிற்சி, கரும்பலகைப் பயன்பாடு, வாசிப்பு பயிற்சி இவற்றையெல்லாம் இந்த பயிற்சி வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். எங்களின் வரவேற்பினையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read : மதுரையில் ஓரம்கட்டப்பட்டும் பி.டி.ஆர்.! தனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு கட்சியினர் மிரட்டப்பட்டுவதாக புலம்பல்!

எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு பாடநூல் பயிற்சி நூல் ஒருங்கிணைப்பு, கீழ்மட்டக் கரும்பலகை செயல்பாடு, செய்தித்தாள் செயல்பாடு, சூழ்நிலையியல் பாட செயல்பாடு ஆகிய செயல்பாடுகளுக்கு சின்னங்களை(logo) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். சூழ்நிலையியல் பாட செயல்பாடு சின்னத்தின்(logo) தலையில் இரட்டை இலையினை தத்ரூபமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதனை எந்த அலுவலருமே பார்க்கவில்லையா? அல்லது திட்டமிட்டே வெளியிட்டு இருக்கிறார்களா? என்ற ஐயம் மேலிடுகிறது. ஒரு கட்சியினுடைய சின்னத்தையே தங்கள் தலைமையில் உள்ள அரசு மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்துகிற தைரியம் அலுவலர்களுக்கு வருகிறது என்றால், அவர்கள் எதைச் செய்தாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையினை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறோம்.
இரட்டை இலை சின்னத்துடன் புத்தகம் வெளி வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சரிபார்த்து இருக்க வேண்டாமா?

கனவு ஆசிரியர், ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய பெயரில் மூன்று இதழ்கள் பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடிய சிறப்பான இதழ்களாக வெளிவந்துள்ளது. முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்கள். வரவேற்று பாராட்டி மகிழ்கின்றோம்.

Also Read : புத்தகங்களை வைத்து பாடம் நடத்த அனுமதிக்காதது ஏன்? பெற்றோரின் அறச்சீற்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்!

இவற்றையெல்லாம் சிறப்பாக வெளியிட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை, லோகோவில் ஒரு கட்சியின் சின்னம் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டதேன்? சூழ்நிலையியல் பாடப் புத்தக சின்னத்தில் உள்ள வண்ணத்தினை உற்றுப் பார்த்தால் காவியாகவும் தெரிகிறது. சிவப்பாகவும் கலந்து தெரிகிறது. ஏன் இந்த குழப்பமான நிலையினை தேர்ந்தெடுத்தார்கள்? வேறு வண்ணங்களே கிடைக்கவில்லையா?

அதிகாரிகளின் ஆட்சி அதிகாரம் அனைத்து தரப்பினரையும் வெறுப்புணர்விற்கு ஆளாக்கி வருகிறது. கருணாநிதி சம்பாதித்து வைத்துள்ள வாக்கு வங்கியினை சேதாரப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைத்து விடக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள். முதலமைச்சர் முழு பார்வையினையும் அதிகாரத்தின் பக்கம் திருப்பி எல்லை தாண்டிய அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேணுமாய் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் சமுதாயத்தின் சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறக்கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 4% அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஜாக்டோ ஜியோவின் பிரதான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணுவதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று நம்பிக்கை உணர்வுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry