புத்தகங்களை வைத்து பாடம் நடத்த அனுமதிக்காதது ஏன்? பெற்றோரின் அறச்சீற்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்!

0
826

இது தொடர்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித்துறையினை முழுவதும் டிஜிட்டல் மயமாக்குவதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி ஆணையர், திட்ட இயக்குனர், SCERT இயக்குனர் என எல்லோரும் பெருமிதம் கொள்கிறார்கள்.

பிற மாநிலங்கள் உற்று நோக்குவதாக தெரிவித்துள்ளார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே இதைக் கேட்டவுடன் பிரமித்து நிற்கிறார்கள் என்று கூட சொல்வீர்கள். ஏழை எளிய கிராமப்புறத்தில் உள்ள மக்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து பள்ளியில் சேர்த்தார்கள்.

Also Read : துன்பப்படுத்தும் வகையில் மூத்த அமைச்சர்கள் நடந்து கொண்டால்…! திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

அச்சிடப்பட்ட பாடப்புத்தகத்தை எடுத்து பாடம் நடத்துவதற்கு பதிலாக Pre கேஜி, எல்கேஜி, யுகேஜி, பாடத்தை மூன்றாம் வகுப்பு வரை நடத்த சொல்லி, அவர்களுக்கு தேர்வினை நேரடியாக நடத்தாமல் செல்லினுள் உள்ள செயலி வழியாக நடத்தினீர்கள். வகுப்புக்கு 2,3 பேர் மெதுவாக கற்கும் மாணவர்களாக இருக்கத்தான் செய்வார்கள். இந்த மெதுவாக கற்கும் மாணவர்களுக்காக இயல்பாக படிக்கக்கூடிய பெரும்பான்மையான மாணவர்களை பெரிதும் பாதிக்க வைக்கின்ற முறைதான் இந்த எண்ணும், எழுத்தும் பயிற்சி முறையாகும்.

மாணவர்களின் பெற்றோர் வந்து கேட்கிறார்கள்!. எங்கள் பிள்ளை நன்றாக படிப்பான் அவனுக்கு தேர்வு ஏன் வைக்கவில்லை? என்று வினவுகிறார்கள். முதல் பருவம் முடிந்து இரண்டாம் பருவ வகுப்பு இன்று தொடங்க இருக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி நடைபெற இருக்கிறது. பயிற்சியை கொடுக்கக்கூடிய கருத்தாளரும் எங்கள் ஆசிரியர் தான்.

Also Read : திருநீறு நீக்கப்பட்ட வள்ளலார் படம்! வரலாற்றை திருத்தும் முயற்சி? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் ஆன்மிகவாதிகள்!

பயிற்சியை கேட்கக்கூடிய அவர்களும் அரும்பு, மொட்டு, மலர் நடத்திவரும் எங்கள் ஆசிரியர்கள் தான். முதல் பருவம் நடத்துவதற்கே பெற்றோர் மத்தியில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் பருவத்தையும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்துவதற்கு தற்காலிக ஆசிரியர், PTA ஆசிரியர் எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும். காலை, மாலை சிற்றுண்டி உண்டு. மதிய உணவு மட்டும் அவரவர் சொந்தப் பொறுப்பில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இதனுடைய நோக்கம் தான் என்ன? 1,2.3 வகுப்புகளுக்கு முதல் பருவத்திற்குப் பிறகு படித்துக் கொண்டிருக்க கூடிய மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள நாம் படாதபாடுபட வேண்டியிருக்கிறது. பாடப்புத்தகம் இல்லாமல், எழுத்துப் பயிற்சி இல்லாமல், தேர்வு இல்லாமல் படிக்க வைக்க எந்தப் பெற்றோர்கள் விரும்புவார்கள்?

நான்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் இல்லாத டிஜிட்டல் மூலமாக மாணவர்களை வியக்கவைக்கும் பெருமையை மக்கள் மத்தியில் அர்ப்பணிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். அவரவர் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை மாண்ட் போர்டு போன்ற பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். ஆனால் ஏழை, எளிய பிள்ளைகள் மட்டும் செல்லுக்குள் மட்டுமே பாடம் நடத்துவதை எந்த பெற்றோர்களால் பொறுத்துக்கொள்ள முடியும்?

Also Read : பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

இந்த டிஜிட்டல் மயத்தை நடத்துகின்ற அதிகாரிகளுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி முறையில் சேர்த்து படிக்க வையுங்கள். அதன் பிறகு அதன் பாதிப்பு உங்களுக்கு தெரியவரும். “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்று சொல்வார்கள். இந்த உணர்வை அதற்குப் பிறகுதான் உணர்வார்கள்.

கல்வியாளர்கள் பாராட்டினார்களா? பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாராட்டினார்களா? பொது நோக்கர்கள் பாராட்டினார்களா? அல்லது மாணவர்களின் பெற்றோர்கள் தான் இந்த கல்வி முறையை பாராட்டுகிறார்களா? மக்கள் மன்றத்தில் இந்த டிஜிட்டல் முறைக்கு பதில் சொல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து கல்வித்துறையை அவர்களிடம் முதலமைச்சர் ஒப்படைத்து விட்டார்க. அவர் கொண்டிருக்கிற நம்பிக்கைக்கு சோதனையினை ஏற்படுத்தி வருகிறீர்கள். 13 ஆம் தேதி பள்ளி திறக்கின்ற போது பாடப் புத்தகத்தை வைத்து பாடம் நடத்தாமல் பிடிவாதமாக இருந்தால், ஓங்கி ஒலிக்கும் பெற்றோரின் நியாயங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Also Read : தாது மணல் தொழிலில் அதானி கால்பதிக்க சலுகை! கனிம அகழ்வுக்கான தடையை நீக்குகிறது மோடி அரசு?

மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்காகவும், அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்காகவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையினை தக்கவைத்துக் கொள்வதற்கும் வீதிக்கு வருவதற்கும் தயார் நிலையில் நாங்கள் உள்ளோம்.

முதலமைச்சரின் நல்லெண்ணத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பாவச் செயலை செய்ய முன்வராதீர்கள். கிருபானந்த வாரியார் சொல்வார்கள், “ஊனக் கண்ணை திறந்து ஞானக் கண்ணாக்குபவர்கள் ஆசிரியர்கள்” என்று, ஆனால் ஞானக்கண் உள்ள பிள்ளைகளையும் வாய் திறந்து பேசாமல், கரங்களால் எழுத்துப் பயிற்சி இல்லாமல், பிஞ்சு இதயங்களை ஊனம் ஆக்கிவிடாதீர்கள்.

Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

பாடப் புத்தகத்தை வைத்து பாடத்தை நடத்த முன் வாருங்கள்!.. என்று மாணவர்கள் மீதுள்ள அக்கறையின் அடிப்படையிலும், அவர்களின் மீது கொண்டுள்ள இதய பற்றுதலின் அடிப்படையிலும் கேட்டுக்கொள்கிறோம். மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற்ற பிறகு ஆதாரப்பூர்வமாக எண்ணும் எழுத்தும் பயிற்சி முறை பற்றி பல தகவல்களை வெளியிட இருக்கிறோம்.” அண்ணாமலை அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry