கருணாநிதி நினைவிடத்தில் 30ம் தேதி அரசு டாக்டர்கள் மவுனப் போராட்டம்! பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குமுறல்!

0
268

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படும் வகையில், 2009 ல் கருணாநிதி ஆட்சியில் அரசாணை 354 வெளியிடப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாகவே அந்த ஆணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு ஊதியக் கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவர்கள உண்ணாவிரதம் இருந்த போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நமது முதல்வர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்கள். அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசாணை 354 அமுல்படுத்தப்படும் என அப்போது உறுதியளித்தார்கள். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகும், அளித்த உறுதிமொழியை அரசு நிறைவேற்றவில்லை.

Also Read : தன்னாட்சி பெற்றுவிட்டதா பள்ளிக் கல்வித்துறை? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர் கூட்டணி!

அரசு மருத்துவர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றாததோடு, கருணாநிதியின் அரசாணையை கூட மருத்துவத்துறை அமைச்சர் புறக்கணித்து வருவதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கருணாநிதியின் அரசாணையை புறந்தள்ளிவிட்டு, புதிதாக யாருக்குமே பெரிதாக பலன் தராத ஒரு அரசாணையை வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை.

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என ஒவ்வொரு மருத்துவரும் விரும்பினோம். திமுக ஆட்சி வர வேண்டும் என்று களத்தில் நின்று பிரச்சாரம் செய்தோம். திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடமாகியும், முதல்வர் ஏற்கனவே அரசு மருத்துவர்களிடம் உறுதியளித்த ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கருணாநிதி காட்டிய வழியில் நடப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்க கருணாநிதியின் ஆணையை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்?

கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, அதை திசை திருப்பும் வகையில், எங்காவது ஒரு மருத்துவர் தவறு செய்தால், அதை உடனே பெரிதுபடுத்தி, மேடை போட்டு பேசுவதோடு, மருத்துவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

மருத்துவத்துறை அமைச்சர் இன்னமும் தன் கடமையை, பொறுப்பை செய்ய மறுத்து வருகிறார்.
கருணாநிதியின் அரசாணைப்படி, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வேண்டி, வருகின்ற 30 ம் தேதி கருணாநிதியின் நினைவிடத்தில் விண்ணப்பம் வைத்து விட்டு, மவுனப் போராட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டம் நிச்சயம் அரசை திரும்பி பார்க்க வைப்பதோடு, அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமையும்.

ஆனால் போராட்டத்தை தடுத்து நீர்த்துப் போகச்செய்யும் முயற்சியும் நடக்கிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரத்த வங்கியில் இணைப் பேராசிரியராக பணி செய்து வருபவர் டாக்டர் லதா பாலகிருஷ்ணன். சிறந்த மருத்துவ நிபுணரான இவர் மாநில அரசின் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றவர். இவருக்கு காரணமின்றி குற்ற குறிப்பாணை 17 b வழங்கி, கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை சுகாதாரத் துறை செயலாளர் எடுத்திருக்கிறார்.

30 ம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் மவுனப் போராட்டம் நடத்தி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவோம் என்பதால், பழி வாங்கும் நோக்கில் இந்த தண்டனையை வழங்கி அச்சுறுத்துகிறார்கள்.

Also Watch : தண்ணீருக்கும் கேன்சருக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு! Powerful Truth about Cancer | DR. VIJAYARAGHAVAN

பதவி உயர்வு விஷயத்தில் தனக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்து டாக்டர் லதா தொடர்ந்து போராடி வருகிறார். அவரை மிரட்டிப் பணிய வைக்கும் வகையில் முயற்சியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை செயலாளரை, முதல்வர் நேரடியாக அழைத்து விசாரிக்க வேண்டும்.

டாக்டர் லதாவிடமிருந்து பறிக்கப்பட்ட பேராசிரியர் பதவியை அவருக்கே வழங்கி தான் ஒரு மனு நீதி சோழன் என தமிழக முதல்வர் நிருபிக்க வேண்டும். மேலும் முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டி, 30ம் தேதிக்கு முன்னதாகவே போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை அரசுக்கு மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry