வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாகிறது! இன்றே பல இடங்களில் கனமழை! 11, 12ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும்!

0
588

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே மழை தொடங்கியுள்ளது.

கடந்த மாத இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முதலாக உருவான சிட்ராங் புயல் தமிழகத்தை தவிர்த்து விட்டு வங்கதேசம் நோக்கிச் சென்றாலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பெரும் மழையை தந்துவிட்டே சென்றது.

Also Read : கருணாநிதி நினைவிடத்தில் 30ம் தேதி அரசு டாக்டர்கள் மவுனப் போராட்டம்! பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குமுறல்!

இந்நிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அந்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 10ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், வரும் 14- ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Also Read : தன்னாட்சி பெற்றுவிட்டதா பள்ளிக் கல்வித்துறை? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர் கூட்டணி!

தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலையை கணித்து வரும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், இனிமேல் தான் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என கூறியுள்ள அவர், 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மழை கோரத்தாண்டவம் ஆடும் என எச்சரித்துள்ளார். சென்னை ஹாட்ஸ்பாட் பகுதியாக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இரண்டு நாட்கள் முன்னதாகவே  7-ம் தேதி நள்ளிரவில் இருந்தே பெரும்பாலான பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி  எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை,  தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை கொட்டியது. கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா  மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால்  ஆகிய இடங்களிலும் இரவிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சில இடங்களில் வெயிலும் அடிக்கிறது. மீண்டும் மழை தொடங்கியுள்ளதால்  விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry